மரணமில்லா பெருவாழ்வு: வள்ளலார் மற்றும் ஔவையார் சொல்லும் பிறவியின் பயன்!

avvaiyar-poems-
avvaiyar-poems-
Updated on

வ்வுலகில் தோன்றிய பெண்களிலேயே மிகச்சிறந்த ஞானத்தை பெற்று, தான் பெற்ற ஞானத்தை பிறருக்கும் உதவும் வண்ணம், எளிமையாக இக்கால மனிதர்களுக்கு விளங்குமாறு மிகச்சிறந்த பாடல்களாக பாடி வைத்து விட்டு விண்ணுலகை அடைந்தவர் தமிழ் உலகின் தன்னிகரற்ற பெண்புலவர் ஔவையார் அவர்கள்.

அவர் இந்த மனித பிறவியின் மேன்மையை கூறும் ஒரு பாடலிலேயே, மனித பிறவியின் நோக்கத்தையும் /குறிக்கோளையும் அழகாக எடுத்துரைக்கின்றார். அந்த பாடல் வரிகளாவது,

அரியது கேட்கின் வரிவடி வேலோய்

அரிது அரிது மானிடர் ஆதல் அரிது;

மானிடர் ஆயினும் கூன் குருடு செவிடு

பேடு நீங்கிப் பிறத்தல் அரிது.

பேடு நீங்கிப் பிறந்த காலையும்

ஞானமும் கல்வியும் நயத்தல் அரிது;

ஞானமும் கல்வியும் நயந்த காலையும்

தானமும் தவமும் தான்செயல் அரிது

தானமும் தவமும் தான்செய்வராயின்

வானவர் நாடு வழி திறந்திடுமே*

(ஒளவையார் தனிப் பாடல்:57)

உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பதுதான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன், குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது. இந்தக் குறைகள் நீங்கிப் பிறந்தாலும் அறிவும் கல்வியும் விரும்பிக் கற்றவனாக ஆதல் அரியது. அறிவும் கல்வியும் பெற்றாலும் பிறருக்குக் கொடுக்கும் ஜீவகாருண்யம் சன்மார்க்க நெறி நின்று இயற்றும் தவமும் உடையவராய் இருத்தல் அரியது. அவ்வாறு ஈகையும் தவமும் உடையவராக வாழ்கின்றவர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வு கிடைக்கும். அதுவே இந்த கிடைத்தற்கு அரிய மனிதப்பிறப்பின் குறிக்கோள் என்று ஒளவையார் பாடியுள்ளார்.

இதையும் படியுங்கள்:
புண்ணிய தீர்த்தங்களும்... போக்கும் பாவங்களும்!
avvaiyar-poems-

வள்ளல் பெருமானாரும் தமது திருவருட்பாவில் இதையே குறிப்பிடுகின்றார்.

"இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடையமாட்டீர்

மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்

சிறந்திடுசன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே".

(ஆறாம் திருமுறை, ஞான சரியை பாடல் 25)

ஒரு மனிதன் இறந்தபின் அவரின் மேல் விழுந்து அழும் மனிதர்களே, இனியாவது வாழும்போதே கிடைத்தற்கரிய இம்மனித பிறவியின் முக்கியத்துவத்தை அறிந்து அதன் மூலம் பெற்றுக்கொள்ள வேண்டிய பிறவியின் குறிக்கோளான மரணமில்லா பெருவாழ்வை அடைந்து விடுங்கள் என்கின்றார்.

பிணி, மூப்பு, மரணம் என்ற மனித வாழ்வின் மிகப்பெரிய துன்பங்களில் இருந்தும் தப்பபித்த கொள்ள வேண்டுமெனில், அறிவார்ந்து சன்மார்க்க நெறியில் நின்று மரணமில்லா பெருவாழ்வை பெற்றுக் கொள்ளுங்கள் என்று பிறவியின் ரகசியத்தை வெளிப்படையாக கூறுகிறார்.

தமிழ் மெய்யியலே உலகின் முதன் முதலில் தோன்றிய ஆன்மீக தத்துவம். அந்த வாழையடி வாழையாக வந்த மரபில் வந்த மிக உயர்ந்த உன்னதமான ஞான மார்க்கமே பெருமான் அருளிய சன்மார்க்க நெறி.

இதையும் படியுங்கள்:
அனைத்து வயது பெண்களும் செல்லக்கூடிய ஐயனின் ஐந்து பஞ்ச சாஸ்தா கோவில்கள்!
avvaiyar-poems-

சன்மார்க்கம் என்பது புதிதாக உருவானது அல்ல. அது பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வரும் தமிழர்களின் ஆதி மெய்யியல் மார்க்கம்.

மரணம் இல்லா பெருவாழ்வு பெற கிடைத்ததற்கரிய மனித பிறவியின் மேன்மையை உணர்ந்து வாழ்வோம். அப்படி வாழ இறப்புக்கு பின்பும் இவ்வுலகார் பெயர் சொல்லும் அளவிற்கு நிலைத்திருந்து வாழலாம்.

logo
Kalki Online
kalkionline.com