
வைணவக் குடும்பங்கள் பலவற்றிலும் சாளக்ராம கற்களை வைத்து வழிபடுவது வழக்கம். இது கருமை நிறத்தில் காணப்படும் புனிதமான ஒரு வகை கல். இது நேபாளத்தில் முக்திநாத் பகுதில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகிறது. இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. லட்சுமி நாராயண சாளக்ராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்ராமம், வாமன சாளக்ராமம், மதுசூதன சாளக்ராமம், சுதர்சன சாளக்ராமம் என்று 68 வகையான சாளக்ராம கற்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
சாளக்ராம கற்கள் பற்றிய ஒரு புராணக் கதையும் உண்டு. துளசி அவளது முற்பிறவியில் பிருந்தை என்ற பேரில் ஜலந்தரன் என்ற அரக்கனை திருமணம் செய்தாள். ஜலந்தரன் தான் பெற்ற வரங்களால் தேவர்களை துன்புறுத்த, தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். ஜலந்தரன், சிவனோடு போரிட கயிலாய மலைக்குப் புறப்பட, கிழவர் வேடத்தில் தோன்றிய சிவபெருமான் அவனிடம பேசினார். அப்போது அவன் ஆணவத்துடன் தன்னால் எதுவும் செய்ய முடியும் என்றான்.
உடனே சிவபெருமான் தனது கால் பெருவிரலால் மண்ணில் வட்டமிட்டு அந்த வட்டத்தைப் பெயர்த்து தலை மீது வைக்கும்படி கூற, இரு கரங்களாலும் அந்த மண்ணைப் பெயர்த்து தலைக்கு மேல் தாங்கினான். உடனே அந்த வட்டச் சக்கரம் அவனை இருகூறாகப் பிளந்து மீண்டும் தீப்பிழம்பாக மாறி சிவபெருமானின் திருக்கரங்களில் சென்று அடைந்தது. கயிலைக்குச் சென்ற தனது கணவன் திரும்பி வராததால் பிருந்தை கவலை அடைந்தாள். அவளது கற்பு என்று அழிகிறதோ அன்றே ஜலந்தரன் அழிவான் என்ற நிலை இருந்தது.
இதை தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் தெரிவித்தனர். உடனே அவர் பிருந்தையின் கற்பை சோதிக்க முனிவர் வடிவில் சென்றார். அப்போது அவர் ஜலந்தரன் இரு கூறாகி விட்டதை அவளிடம் கூறினார். பிருந்தை, ‘தனது கணவன் உயிர் பெற்று வர வேண்டும்’ என்று மன்றாட, திருமால் ஜலந்தரனின் உடலில் புகுந்து ஜலந்தரனே மீண்டும் வந்து விட்டதாகக் கூறி அவளை நம்பச் செய்தார். சில காலம் அவளுடன் குடும்பம் நடத்தினார். காலப்போக்கில் இதை உணர்ந்த பிருந்தை ஏமாற்றம் தாளாமல் தீயில் விழுந்து உயிர் துறந்தாள்.
எந்தத் தவறும் செய்யாத பிருந்தை தீக்குளித்த இடத்திலேயே திருமால் செய்வதறியாது அமர்ந்திருக்க, இதைப் பார்த்த பார்வதி தேவி, பிருந்தையின் சாம்பலில் இருந்து தனது இடது கை சிறு விரலிலிருந்து ஒரு விதையை உண்டாக்கி சிவனிடம் கொடுக்க, அதை பிரம்மா பெற்றுச் சென்று பிருந்தை இறந்த இடத்தில் ஊன்றி தண்ணீர் வார்த்தார். அங்கே ஒரு துளசிச் செடி உண்டாயிற்று. திருமால் அந்த துளசியை மார்பில் அணிய, பிருந்தையை ஏமாற்றிய பாபம் நீங்கி, சகஜ நிலையை அடைந்தார்.
திருமால் தன்னை ஏமாற்றியதால் அவரை கல்லாகவும் மலையாகவும் போக பிருந்தை சாபம் தந்தாள். இந்த மலைதான் சாளக்ராம மலை. அதிலுள்ள கல்தான் சாளக்ராம கல். உடனே மகாவிஷ்ணு துளசிக்கு தரிசனம் தந்தார். பதறிப் போனாள் துளசி. உடனே அவர், ‘நீ பதறாதே. எல்லாம் என் சித்தப்படியே நடக்கிறது’ என்றார். பகவானின் சங்கடத்தை துளசி தீர்த்ததால் மரணத் தருவாயில் துளசி தீர்த்தம் அருந்தும் பக்தர்களுக்கு பாபம் நீங்கி மோட்சம் கிடைக்கும்.
திருமால் சாளக்ராம மலையாக மாற, துளசி கண்டகி நதியாக மாறினாள் என்றும், மேலும் பிருந்தை திருமாலை கல்லாக மாற சபித்ததால் அவர் சாளக்ராம கற்களாக மாறி கண்டகி நதியில் கிடப்பார் என்றும் திருமால் கூறினார். ‘கங்கையை விட புனிதமாக கண்டகி நதி போற்றப்படும்’ என்றும், இந்த சாளக்ராம கற்கள் புனிதமாகப் போற்றப்படும் என்றும் திருமால் கூறி அருளினார்.
யார் தங்கள் வீட்டில் சாளக்ராம சிலையை வைத்து பெருமாளை பூஜிக்கிறார்களோ அந்த இடத்தையே கோயிலாகக் கொண்டு திருமால் குடியிருப்பார். மேலும், சாளக்ராமம் இருக்கும் இடங்களில் எந்த தோஷமும் இருக்காது என்று நம்பப்படுகிறது.
சாளக்ராம கல்லை பூஜிப்பவர்களுக்கு முக்தி உண்டு. இதை வைத்திருப்பவர்களுக்கு எம பயமில்லை. சாபங்கள் நீங்கும். இதற்கு சந்தனம், புஷ்பம், தூப தீபம், நைவேத்தியம் செய்பவர்கள் விஷ்ணு லோகத்தில் அனந்த காலம் வாழ்வதாக ஐதீகம். சாளக்ராம பூஜை செய்தால் அக்னி ஹோத்திரமும், பூ தானமும் செய்த பலன் கிடைக்கும். 12 சாளக்ராம கற்கள் உள்ள வீடு 108 திருப்பதிக்கு சமம் என்று கூறப்படுகிறது.