

கார்த்திகை மாதம் இன்று (17.11.25) திங்கட்கிழமையன்று பிறந்து விட்டது. தமிழ் மாதங்களில் மிகச் சிறப்பான மாதம் கார்த்திகை. இது எல்லா தெய்வங்களுக்கும் உகந்த மாதமாகும். கார்த்திகை முதல் நாளே சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டுக் கொள்வார்கள். அன்றிலிருந்து விரதம் இருந்து தை மாதம் மகரஜோதி தரிசனம் செய்வார்கள். கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று வரும் கார்த்திகை தீபத் திருநாள் முருகனுக்கு உகந்த நாள். கார்த்திகை முதல் நாள் வரும் விஷ்ணுபதி புண்ய காலமும், கார்த்திகை அமாவாசையும் பெருமாளுக்கு உகந்த நாட்கள். ஐயன் சிவபெருமானுக்கோ கார்த்திகை மாதம் முழுவதுமே விசேஷம்தான், கோலாகலம்தான்.
வாராவாரம் வரும் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தது. சோமவார வழிபாடு என்று சிறப்பித்து சிவனுக்கு வழிபாடு நடத்தப்பெறுகிறது. இன்றைய தினம் கார்த்திகை மாத முதல் சோம வாரம். ஜாதகத்தில் சந்திரன் நீசமாக இருந்தால் ஒருவருக்கு எப்போதும் எல்லா விஷயத்திலும் மனக்குழப்பம் இருக்கும் என்று சொல்வார்கள்.
இவர்கள் இன்றைய தினம் சிவபெருமானை விரதம் இருந்து வழிபட்டால் இவர்களுக்கு மனக்குழப்பம் முற்றிலும் நீங்கும் என்று உறுதியாக சொல்லப்படுகிறது. சோமவாரத்தில் 'சோமன்' என்பது சந்திரனை குறிக்கிறது. அன்றைய தினம் பிரதோஷம் வந்தால் அது சோமவார பிரதோஷம் என்று மேலும் சிறப்பித்து சொல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.
கார்த்திகை மாதம் வரும் சோமவாரம் சிவனுக்கு மிக மிக விசேஷமானது. அன்று சிவபெருமானை விரதம் இருந்து வணங்கி வழிபாடு செய்பவர்களுக்கு கேட்ட வரத்தைக் கொடுப்பாராம் சிவபெருமான். அதிலும் இந்த வருடம் மிகவும் விசேஷமாக சோமவாரத்திலேயே கார்த்திகை மாதம் ஆரம்பித்து சோமவாரத்திலேயே முடிகிறது. மொத்தம் ஐந்து சோமவாரங்கள். நாம் நினைப்பதை அப்படியே நடத்திக் கொடுக்கும் அற்புதமான நாள் கார்த்திகை சோமவாரம்.
சிவபெருமானே கார்த்திகை சோமவார விசேஷத்தை குறிப்பிட்டு அன்று விரதம் இருந்து வழிபடுவது மிகவும் விசேஷம் என்று சொல்லியிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டு இன்று அதாவது 17.11.25 மற்றும் 24.11.25, 01.12.25, 08.12.25, 15.12.2025 ஆகிய ஐந்து தினங்களில் கார்த்திகை சோமவாரம் வருகிறது.
கார்த்திகை சோமவாரத்தில் எல்லா சிவன் கோயில்களிலும் சங்காபிஷேகம் நடைபெறும். காரத்திகை முதல் தேதியே சோமவாரத்தில் வருவதால் இன்றே நிறைய கோயில்களில் சங்காபிஷேகம் நடைபெறும். இன்று கூடுதலாக கார்த்திகை சோமவார பிரதோஷம் வேறு. கார்த்திகை சோமவாரத்தன்று வீட்டில் இருந்தபடியே 'ஓம் நமசிவாய' என்று சொன்னாலே ஈஸ்வரனின் அருள் உங்களுக்குக் கிடைக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வாய்ப்பு இருப்பவர்கள் அங்கே நடைபெறும் சங்காபிஷேகத்தை கண் குளிரக் காணலாம். ஈஸ்வரன் நெருப்பு வடிவத்தில் இந்த மாதத்தில் தோன்றியதால் அவரைக் குளிர்விக்கவே அனைத்து சிவாலயங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுகிறது. சங்காபிஷேகத்தை தரிசிப்பவர்களுக்கு ஈஸ்வரனின் பாதத்தில் இடம் கிடைக்குமாம்.
கார்த்திகை சோமவாரத்தன்று சிவபெருமானுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறந்த வழிபாடாகக் கருதப்படுகிறது. மங்கலகரமான கார்த்திகை சோமவார பூஜை மற்றும் விரதம் அனுஷ்டிப்பதால் நல்ல வாழ்க்கைத்துணையை அடையலாம். நீண்ட ஆயுளையும் பெறலாம். நல்ல ஆரோக்கியம், செல்வச் செழிப்பு, கடனில்லா வழ்க்கை, தொழிலில் அபிவிருத்தி ஆகிய எல்லா நன்மைகளையும் அடையலாம்.
பொதுவாக, எல்லோருமே ஏதாவது ஒரு கோரிக்கை நிறைவேற வேண்டும் என்பதற்காகத்தான் வேண்டிக்கொண்டு விரதம் இருப்போம். ஆனால், கார்த்திகை மாத சோமவாரத்தில் விரதம் இருந்து சிவபெருமானை வழிபட்டால் கேட்டது கிடைக்கும், வேண்டியது கிடைக்கும் என்பது பக்தர்களின் பரவலான நம்பிக்கை.