பக்தருக்காக குடுமியுடன் காட்சி தந்த சிவலிங்கம் அருளும் திருத்தலம்!
காஞ்சிபுரம் மாவட்டம், பொன்விளைந்த களத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு மீனாட்சியம்மை சமேத ஸ்ரீ முன்குடுமீஸ்வரர் திருக்கோயில். சுமார் 1300 ஆண்டுகள் பழைமையான சோழர் காலத்தில் ராஜேந்திர சோழன் என்ற மன்னரால் கட்டப்பட்ட கோயில் இது. தொல்பொருள் ஆய்வுத் துறையால் கலைச்சின்னமாக பாதுகாக்கப்பட்டு வரும் இக்கோயிலின் தல விருட்சம் வில்வ மரம். தீர்த்தம் வில்வ தீர்த்தம். ஸ்ரீ சந்திரசேகரர் உத்ஸவ மூர்த்தியாகத் திகழ்கிறார்.
சோழர்களால் கட்டப்பட்ட இத்தலத்து சிவலிங்க பாணத்தின் உச்சியில் குடுமி போன்ற தோற்றம் உள்ளது. இத்தலத்து இறைவன் கஜபிருஷ்ட விமானத்தின் கீழ் அருள்புரிகிறார். இக்கோயிலில் உள்ள தூண்கள் சிற்பக்கலைக்கு சிறந்த சான்றாக உள்ளது. மேலே கூரையின்றி நான்கு கருங்கல் தூண்கள் மட்டும் இருக்க, அதன் நடுவில் வெய்யிலையும் மழையையும் பொருட்படுத்தாமல் இறைவனையே பார்த்தபடி காட்சி தருகிறார் நந்தி பகவான்.
சோழ மன்னன் ஒருவன் குழந்தை வரம் வேண்டி 108 சிவன் கோயில்களைக் கட்டினான். அவற்றுள் ஒன்றான பொன்விளைந்த களத்தூர் முன்குடுமீஸ்வரர் கோயிலிலும் ஒன்று. இக்கோயில் செங்கல்பட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. ஒரு சமயம் மன்னன் இத்தல ஈசனை தரிசிக்க வந்தான். எந்த முன்னேற்பாடும் செய்யாத அர்ச்சகர், சுவாமிக்கு அணிவிக்க தனது மனைவி சூடியிருந்த பூவை எடுத்து வந்தார். அதை சிவனுக்கு சூட்டி, அதையே மன்னனிடம் பிரசாதமாகக் கொடுக்க, அதிலிருந்த ஒரு முடியைக் கண்ட மன்னன் அர்ச்சகரிடம், ‘இம்மலரில் முடி எப்படி வந்தது?’ என்று கேட்க, பயத்தில் அர்ச்சகர் ‘அது சிவனின் குடுமியில் இருந்த முடி’ என்று சொல்லி விட்டார்.
மன்னனோ அதை நம்பவில்லை. சிவலிங்கத்தில் உள்ள குடுமியைக் காட்டும்படி கேட்க, அர்ச்சகர் நடுங்கிக்கொண்டே மறுநாள் காட்டுவதாக சொல்லி விட்டார். ‘சுவாமி சிரசில் குடுமியைக் காட்டாவிட்டால் கடும் தண்டனையை சந்திக்க வேண்டிவரும்’ என்று எச்சரித்து விட்டு மன்னன் சென்று விட்டான். என்ன செய்வதென்று தெரியாது கலங்கிய அர்ச்சகர் தன்னைக் காக்கும்படி ஈசனை வேண்டினார்.
மறுநாள் மன்னன் வந்தபொழுது சிவலிங்கத்தின் சிரசில் குடுமி இருந்ததைக் கண்டதும் ஆனந்தத்தில் திளைத்தான். அர்ச்சகரை காக்க குடுமியுடன் காட்சி தந்ததால் சிவன் 'முன்குடுமீஸ்வரர்' என்று பெயர் பெற்றார்.
பொன்விளைந்த களத்தூர் பெயர் காரணம்: இத்தலத்தில் வசித்து வந்த அந்தணர் ஒருவர் தன்னிடம் பணியாற்றும் ஒருவருக்கு சம்பளமாக தனது நிலத்தின் ஒரு பகுதியைக் கொடுத்தார். நிலத்தைக் கொடுத்த பிறகுதான் அதில் குறிப்பிட்ட காலத்தில் விதைக்கப்படும் நெல்மணிகள் தங்கமணிகளாக மாறும் அதிசய உண்மையை அறிந்தார். தனது மற்ற நிலங்களை எடுத்துக்கொள்ளும்படியும், ஏற்கெனவே கொடுத்த நிலத்தை திரும்பத் தரும்படியும் பணியாளரிடம் கேட்டுக் கொண்டார்.
பணியாளரும் அதற்கு ஒப்புக்கொண்டு நிலத்தை திரும்பக் கொடுத்து விட்டார். அந்த வயலில் விளைந்த பொன் கதிர்கள் அனைத்தையும் அந்தணர் எடுத்துக் கொண்டார். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் அவரிடம் பணியாளருக்கும் பங்கு தரும்படி கேட்க, அந்தணரோ அதற்கு மறுத்து விட்டார். விஷயம் மன்னன் காதுக்குச் செல்ல அவன் பொன் நெற்கதிர்களை அரசு கணக்கில் சேர்க்க உத்தரவிட்டான். அந்தணருக்கோ உள்ளதும் போய்விட்டது என்ற நிலை ஏற்பட்டது. பொன் நெல் விளைந்ததால் இத்தலம், 'பொன்விளைந்த களத்தூர்' என்று பெயர் பெற்றது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான கூற்றுவ நாயனார் பல சிவன் கோயில்களுக்கு திருப்பணிகள் செய்து வழிபட்டவர். அதில் இத்தலமும் ஒன்று. இவருக்கு ஆடி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் குரு பூஜை நடைபெறுகிறது. பங்குனி பிரம்மோத்ஸவத்தின்பொழுது சண்டிகேஸ்வரருக்கு பதிலாக இங்கு கூற்றுவ நாயனார் புறப்பாடாகிறார். அத்துடன், விழாவின்பொழுது ஈஸ்வரன் கூற்றுவ நாயனாருக்குக் காட்சி தரும் வைபவமும் சிறப்பாக நடைபெறும்.
பங்குனி பிரம்மோத்ஸவம், சித்ரா பௌர்ணமி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆடிப்பூரம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரை, சிவராத்திரி போன்ற நாட்களில் திருவிழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.