

கொட்டாவி வருவது அனைவருக்கும் பொதுவானது. குழந்தைகள் கொட்டாவி விட்டால் தூக்கம் வந்துவிட்டது என்பார்கள். பேசும்போது அடிக்கடி கொட்டாவி வந்தால் பேசுவதில் சுவாரஸ்யம் இல்லை என்பார்கள். காற்று குறைவாக இருக்கும் இடத்தில் கொட்டாவி வந்தால் போதுமான காற்று தேவை என்பார்கள். இப்படி ஒவ்வொரு தருணத்திலும் வரும் கொட்டாவிகளுக்கு வேறு வேறு அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. அதேசமயம் கொட்டாவி குறித்து சாஸ்திரமும் சில காரணங்களை அடுக்குகிறது.
கொட்டாவி காரணம்:
சிலருக்கு அடிக்கடி கொட்டாவி வருவதுண்டு. அடிக்கடி கொட்டாவி வருவது பற்றி இரண்டு கோணங்களில் பார்க்கலாம். சாஸ்திரம் , பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் அறிவியல் காரணங்கள். இரண்டையும் தனித்தனியாகப் பார்ப்பது முக்கியம்.
சாஸ்திர நம்பிக்கைகளில் கொட்டாவி என்பது உடல் மற்றும் மனம் சோர்வடைந்ததற்கான ஒரு இயல்பான அறிகுறியாக மட்டுமல்லாமல், சில நம்பிக்கைகளில் உடலில் சக்தி குறைதல் அல்லது மனநிலை மாற்றம் போன்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டது.
கொட்டாவி குறித்து இந்தியப் பாரம்பரியத்தில் ஒரே மாதிரியான, அனைவரும் ஏற்றுக்கொள்ளும் “சாஸ்திரப் பலன்” இல்லை. வேதம் அல்லது முக்கியமான சாஸ்திர நூல்களில் “கொட்டாவி வந்தால் இதுதான் நடக்கும்” என்ற பொதுவான விதி இருப்பதாகக் கூறுவது சரியாகாது.
உடல் சோர்வின் அறிகுறியாக கொட்டாவி உள்ளது. அந்தக் காலங்களில் உடலின் செயல்பாடுகளை வாதம், பித்தம், கபம் போன்ற கருத்துகளுடன் தொடர்புபடுத்தி விளக்கும் வழக்கம் இருந்தது. சோர்வு, தூக்க உணர்வு போன்றவை உடலின் இயல்பான சமநிலை மாற்றங்களாகக் கருதப்பட்டன.
மனம் ஒரு செயலில் ஈடுபடாமை கொட்டாவிக்கு வழிவகுக்கும்.
ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அல்லது நீண்ட நேரம் ஒரே செயலில் இருக்கும்போது கொட்டாவி வருவது, “மனம் அந்தச் செயலிலிருந்து விலகுகிறது” என்ற விளக்கத்தை தருகிறது. அது உண்மையும் கூட என்பதை நாமே ஒப்புக்கொள்வோம்.
சிலருக்கு பூஜை போன்ற ஆன்மிகச் சூழலில் கொட்டாவி வருவதைப் பார்ப்போம். பூஜை, தியானம் போன்ற நேரங்களில் கொட்டாவி வந்தால், சில மரபுகளில் அந்த பூஜைகளினால் ஏற்படும் உடல் சோர்வு, மன அமைதியின்மை அல்லது கவனம் சிதறுதல் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக “தீய சக்தி வெளியேறுகிறது” போன்ற நம்பிக்கைகள் இன்னும் கிராமப்பகுதிகளில் உள்ளது.
சில பகுதிகளில் கொட்டாவி அல்லது திடீர் உடல் அசைவுகளை கண்ணேறு/தீய சக்தி போன்ற நம்பிக்கைகளுடன் இணைக்கும் வழக்கங்கள் இப்போதும் காணப்படுகின்றன.
பிறர் கொட்டாவி விடுவதைப் பார்த்ததும் நமக்கும் கொட்டாவி வருவது வழக்கம். சில பாரம்பரியங்களில் ஒருவரின் மனநிலை மற்றவரிடம் பிரதிபலிப்பதே இதன் காரணம் எனக் கருதப்பட்டது.
இது (contagious yawning) தொற்றிக்கொள்ளும் கொட்டாவி என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் கொட்டாவி விடுவதைப் பார்ப்பது, கேட்பது அல்லது அதைப் பற்றிப் படிப்பது கூட சிலரிடம் கொட்டாவியைத் தூண்டலாம். இதில் மூளையின் சமூகப் பிரதிபலிப்பு செயல்பாடுகள் பங்கு வகிக்கின்றன என அறிவியலில் கூறப்படுகிறது.
கொட்டாவி வருவதால் நல்லது, கெட்டது நடக்கும் என்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதையும் கவனிக்கவேண்டும்.
கொட்டாவி என்பது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல விலங்குகளிலும் காணப்படும் ஒரு இயல்பான உடல் செயல். இருப்பினும் அடிக்கடி கொட்டாவி வருவதற்கான பொதுவான காரணங்களாக அறிவியல் கூறுவது இவைகள்.
போதுமான நேரம் தூங்காததால் ஏற்படும் தூக்கமின்மை, உடல் அல்லது மன உழைப்பு அதிகமாக இருக்கும் சோர்வு ஒரே மாதிரியான செயல் அல்லது நீண்ட நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் தோன்றும் சலிப்பு, திடீரென ஏற்படும் மனஅழுத்தம் , பதற்றம் அல்லது கவலை, இரவில் அடிக்கடி விழித்தலால் .தூக்கத் தரம் குறைதல், சில மருந்துகள் காரணமாக குறிப்பாக சில மனநல மருந்துகள் பயன்பாடு, அதிக பகல் தூக்கம் போன்ற தூக்கக் கோளாறுகள் இருப்பது போன்ற காரணங்களால் அடிக்கடி கொட்டாவி வரலாம்.
கொட்டாவி தொடர்ந்து வந்தால் உடல் நலபபாதிப்பு அறிகுறியாக இருக்கும் வாய்ப்பு உள்ளது. சில நாட்கள் மட்டும் கொட்டாவி அதிகமாக இருப்பது பொதுவாக கவலைக்குரியது அல்ல. ஆனால் காரணம் தெரியாமல் தொடர்ந்து அதிகமாக கொட்டாவி வருவதுடன், பகலில் கடுமையான தூக்கம், மூச்சுத்திணறல், மயக்கம், மார்பு வலி அல்லது பிற புதிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவரிடம் உடனடியாக ஆலோசனை பெறுவது நல்லது.
அதனால், அடிக்கடி கொட்டாவி வருவதை “சகுனம்” என்று எடுத்துக்கொள்வதைவிட, முதலில் தூக்கம், சோர்வு, மனஅழுத்தம் மற்றும் தூக்கத்தின் தரம் ஆகியவற்றைப் பார்ப்பது அவற்றை சீர் செய்வதே அறிவியல் ரீதியாக பொருத்தமானது என சொல்கிறது மருத்துவம்.