
பன்னிரண்டு ஆண்டு கால வனவாசம் கிட்டத்தட்ட முடிந்து, பாண்டவர்கள் ஓராண்டு அஞ்ஞாத வாசம் செய்ய வேண்டிய காலம் நெருங்கி விட்டது. ஒரு நாள் அவர்கள் காட்டில் அலைந்து கொண்டிருந்த சமயம், எல்லோருக்கும் தாகம் ஏற்பட, தருமர் நகுலனை அருகில் ஏதேனும் நீர்நிலை தென்படுகிறதா? என பார்த்து வரும்படி சொன்னார். நகுலனும் அவ்வாறே செல்ல ஒரு பொய்கையைப் பார்க்கிறான். முதலில் தனது தாகம் தணித்து சகோதரர்களுக்கும் தண்ணீர் எடுக்கும் நோக்கத்துடன் பொய்கைக்குள் இறங்கினான்.
அப்போது, ‘சாகசம் செய்யாதே நகுலா, எனது கேள்விகளுக்கு பதிலளிக்கவும்’ என்று ஒரு அசரீரி கேட்டது. அதை அலட்சியம் செய்து தண்ணீரை அருந்த, அவன் நினைவிழந்து கரையில் வீழ்ந்தான். நகுலனை காணாததால் சகாதேவனை தருமர் அனுப்ப, அவனுக்கும் அப்பொய்கையருகில் அதே கதிதான். அதே போல அருச்சுனன் மற்றும் பீமனும் மயக்கமடைகின்றனர்.
அதன் பிறகு, தருமரே அங்கு செல்கிறார். அவரிடமும் அந்த அசரீரி எச்சரிக்கை செய்ய, அவரும் கேள்விகளுக்குப் பதிலளிக்கச் சம்மதிக்கிறார். அந்த யட்சனின் கேள்விகளுக்கு தருமர் சரியான விடைகளை அளித்தார். அவர் அளித்த விடைகளில் வெளிப்படையாக ஒரு பொருள் தெரியும். ஆனால், தத்துவார்த்த முறையில் ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு அப்பதில்களில் புதைந்து கிடக்கும் பொருளும் புரியும். ஆனால், அதை அறிய மிகுந்த புலமை தேவைப்படும்.
தருமர் கூறிய பதில்களால் திருப்தியுற்ற யட்சன், ‘யுதிஷ்டிரா! உனது பதில்கள் தெளிவாக உள்ளன. அதற்கு பரிசாக உனது தம்பிமார்களில் ஒருவரை மட்டும் உயிர்ப்பிக்கிறேன். அவன் யார்? என்பது உனது விருப்பத்தைப் பொறுத்தது’ என்றான்.
தருமர், ‘நெடிய ஆச்சாமரம் போல வீழ்ந்து கிடக்கும் அழகன் நகுலன் உயிர் பெறட்டும்’ எனக் கூறினார். யட்சன் ஆச்சரியமடைந்து, ‘பீமன், அருச்சுனன் ஆகியோரை விட்டு விட்டாயே, உனது அரசைப் பெற அவர்களின் முயற்சி இன்றியமையாததல்லவா?’ எனக் கேட்டான்.
அதற்கு தருமர், ‘யட்சனே, தருமம்தான் முக்கியம். அதற்குத்தான் இறுதி வெற்றி. பீமனோ, அருச்சுனனோ அதற்கு முன்னால் ஒன்றுமில்லை. எனது தாயார் குந்தியின் புதல்வனாகிய நான் உயிருடன் உள்ளேன். எனது சிறிய அன்னை மாத்ரியின் பிள்ளை ஒருவனும் பிழைப்பதே தருமம்’ என்று உறுதியாக மறுமொழி கூறினார்.
தருமரது இந்தச் சொற்களினால் மகிழ்ந்த யட்சன் எல்லோரையுமே உயிர்ப்பித்தான். பிறகு தாம்தான் தரும தேவதை என்றும், தனது அம்சமாகிய யுதிஷ்டிரனை சோதிக்கவே வந்ததாகவும் கூறி ஆசியளித்து மறைந்தான்.
இந்தக் கதை மகாபாரதத்தில் மிகவும் சிறப்புப் பெற்றது. மகாபாரதத்தில் இந்நிகழ்வு இடம்பெற்ற நச்சுக் குளம் தற்போது எங்கேயிருக்கிறது தெரியுமா? பாகிஸ்தான் நாட்டின் பஞ்சாப் மாகாணத்தின் ராவல்பிண்டி கோட்டத்தில் அமைந்த சக்வால் மாவட்டத் தலைநகர், சக்வால் நகரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள கட்டாஸ் எனும் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கட்டாஸ் ராஜ் கோயில்களின் வளாகம் ஒன்று இருக்கிறது. இந்த வளாகத்தில்தான் அந்தக் குளம் இருக்கிறது. இந்து தொன்மவியலின்படி, பாண்டவர்கள் வனவாசத்தில் இருந்தபோது ஸ்ரீ கிருஷ்ணரின் ஆலோசனையின்படி இந்தப் பகுதியில் பாண்டவர்கள் சிவலிங்கக் கோயில்களைக் கட்டியதாக அறிய முடிகிறது.
இக்கோயில்களை உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோயிலின் திருக்குளத்தில் உள்ள நீர், அருகில் உள்ள தொழிற்சாலைகளின் பெருக்கத்தினால் வற்றியுள்ளதால், இத்திருக்குளம் புதுப்பிக்கப்பட்டு நீர் நிரப்பப்பட்டுள்ளது. கோயில் கோபுரங்களில் புதிய விமானங்கள் நிறுவப்பட்டு இவ்வளாகம் முழுவதுமாகப் புதுப்பிக்கப்பட்டுள்ளது.