

ஆக்ராவின் காசி:
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு அருகில் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள படேஷ்வர் ஆலயம், பல ஆன்மீக சிறப்புகளைக்கொண்ட ஒரு உன்னதத் தலம் ஆகும். இங்கு யமுனை நதி தன் பாதையை மாற்றி பிறை வடிவில் வளைந்து வடக்கு நோக்கிப் பாய்வதால், ஆக்ராவின் காசி என்று அழைக்கப்படுகிறது. காசியிலும் கங்கை நதி வடக்கு நோக்கி வளைந்து பாய்கிறது.
மூலவர் படேஷ்வர்நாதர் மற்றும் கட்டிடக்கலை:
கருவறையில் வீற்றிருக்கும் படேஷ்வர் நாதரின் சுயம்பு லிங்கத் திருமேனி பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. கி.பி. 1646-ஆம் ஆண்டில் இப்பகுதியை ஆண்ட ராஜா பதன் சிங் என்ற மன்னரால் இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. முகலாய மற்றும் ராஜபுத்திரக் கட்டிடக்கலை நயத்துடன் இன்றும் கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.
நதிக்கரையில் 101 சிவக்கோவில்கள்:
இந்த வளாகத்தில் பாபா படேஷ்வர் நாத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்தன. ஆனால், அவற்றுள் 42 கோயில்கள் மட்டுமே இன்றும் நிலைத்து நிற்கின்றன. காலையிலோ அல்லது மாலையிலோ ஆலயக் கோபுரங்களின் நிழல் யமுனை நதியில் விழுவது ஓர் ஒப்பற்ற ஓவியம் போலத் தோன்றும்.
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களை உருகவைத்த படேஷ்வர்நாதர் ஆலயம்:
ஒரு காலத்தில் இந்த ஊரைச் சுற்றியுள்ள சம்பல் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழ்ந்த கொள்ளையர்கள் படேஷ்வர் நாதரின் தீவிர பக்தர்களாக இருந்தனர். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க ஓடி, தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் கொள்ளையர்கள் இரவோடு இரவாக வந்து இக்கோவிலுக்குப் பெரிய வெண்கல மணிகளைப் பரிசாகக் கட்டிவிட்டுச் சென்றனர். இந்தியாவின் மிக மோசமான கொள்ளைக்காரனாகக் கருதப்பட்ட மான் சிங் போன்ற பிரபல கொள்ளையர்களின் பெயர்கள் செதுக்கப்பட்ட மணிகள் கூட இக்கோவிலில் இன்றும் தொங்குகின்றன.
யமுனை நதி பாதை மாறிய கதை:
இங்கு யமுனை நதி வளைந்து செல்வதற்குப் பின்னால் ஒரு சுவாரசியமான உள்ளூர் கதையும் கூறப்படுகிறது. பஹ்தாவர் மற்றும் மைன்புரி மன்னர்கள் இருவருக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வந்தது. சமாதானம் செய்து கொள்ளும் நோக்கில், இருவருக்கும் பிறக்கும் குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைப்பதாக ஒப்பந்தம் செய்தனர்.
ஆனால் இருவருக்குமே பெண் குழந்தைகள் பிறந்தன. பஹ்தாவர் மன்னர் அவமானம் தாங்காமல் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாகப் பொய் கூறி, மைன்புரி இளவரசிக்குத் தன் மகளையே ஆண் வேடமிட்டுத் திருமண ஊர்வலமாக அழைத்து வந்தார்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண், யமுனை நதியில் குதித்துத் தற்கொலை செய்ய முயன்றாள். அப்போது சிவபெருமான் தோன்றி அவளைக் காப்பாற்றி, அவளை ஒரு ஆண் மகனாக மாற்றினார்.
இதற்கு நன்றிக் கடனாகவே ராஜா பதன் சிங் இக்கோவிலைக் கட்டியதோடு, யமுனை நதி எப்போதும் இந்த ஆலயத்தைத் தொட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காக 2 மைல் நீளத்திற்கு ஒரு அணையைக் கட்டி அதன் பாதையைத் திருப்பினார் என்று நம்பப்படுகிறது.
மகாபாரத மற்றும் சமண மத தொடர்புகளைக் கொண்ட படேஷ்வர்நாதர் ஆலயம்:
புராணக் கதைகளின்படி இத்தலம் மகாபாரத மற்றும் ராமாயணக் காலத்தோடு நெருங்கிய தொடர் புடையதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் திருமண ஊர்வலம் இந்த வழியாகச் சென்றதாக மகாபாரதக் குறிப்புகள் கூறுகின்றன. மேலும், சமண மதத்தின் 22-வது தீர்த்தங்கரரான நேமிநாத் பிறந்த மண்ணாகவும் படேஷ்வர் கருதப்படுகிறது. இதனால் இந்துக்கள் மட்டுமின்றி, சமண மதத்தினருக்கும் இது ஒரு முக்கிய புனிதத் தலமாகும்.
அமைதிப்புரட்சி:
1970-களில் எஸ். என். சுப்பாராவ் என்ற காந்தியவாதி இப்பகுதியில் ஆசிரமம் அமைத்து, சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்களைத் திருத்த முயன்றார். நூற்றுக் கணக்கான கொடூரக் கொள்ளையர்கள் ஆயுதங்களைத் துறந்து, காந்தியடிகளின் கொள்கைகளை ஏற்று மனம் திருந்தினர்.
படேஷ்வர் ஆக்ராவிலிருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிஹாரி வாஜ்பாயின் பூர்வீக இல்லம் உள்ளது.
சம்பல் பள்ளத்தாக்கின் பயங்கரவாதப் பின்னணியையும், அதை மாற்றிய ஆன்மீக நதியின் பெருமையையும் ஒரே பார்வையில் உங்களால் உள்வாங்க முடியும். வெறும் ஆன்மீகத் தலம் என்பதையும் தாண்டி, இந்திய வரலாற்றின் பல்வேறு திருப்புமுனைகளுக்கு இந்தத் தலம் எவ்வாறு சாட்சியாக நின்றது என்ற அரிய வரலாற்றுப் பார்வையை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.