சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்: ஜூலை 12 முதல் 4 நாட்கள் மட்டுமே மலையேற அனுமதி..!

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

ஆனி மாத பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல ஜூலை 12ஆம் தேதி முதல் ஜூலை 15ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவுப்படி, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்குச் செல்ல தினசரி அனுமதி ரத்து செய்யப்பட்டு, பழைய நடைமுறைப்படி பிரதோஷம், அமாவாசை மற்றும் பௌர்ணமி ஆகிய நாட்களை ஒட்டி மொத்தம் நான்கு நாட்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுகிறது. காலை 6:00 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனி அமாவாசையை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் நான்கு நாட்கள் (12-15ஆம் தேதி வரை) பக்தர்கள் மலையேறிச் சென்று சாமியை தரிசனம் செய்வதற்கு வனத்துறை, கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதிலும் ஜூலை 15ஆம் தேதி அன்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வனப்பகுதி என்பதால் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றும் பொருட்களை மலை மீது கொண்டு செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட இந்த நான்கு நாட்களில் எதிர்பாராத விதமாக மழை பெய்தால் பக்தர்களுடைய பாதுகாப்பைக் கருதி மலை ஏறுவதற்கு அனுமதி இல்லை என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே 10 வயதுக்கு உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேறுவதற்கு அனுமதி கிடையாது என்றும், வனத்துறை பாதுகாப்பு விதிகளின்படி பக்தர்கள் இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை என்றும் பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள வத்திராயிருப்புக்கு அருகே சதுரகிரி சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு தமிழகத்தினுடைய பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

சதுரகிரி மலை:
சதுரகிரி மலை:

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் சித்தர்கள் வாழும் 'தென் கயிலை' என்று போற்றப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த மலைக்கோவிலுக்கு, தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரம் மலையேறிச் செல்ல வேண்டும்.

இங்கு சுந்தர மகாலிங்கம் சுயம்புவாக சற்றே சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். கோரக்கர், சட்டமுனி உள்ளிட்ட பல சித்தர்கள் இன்றும் சூட்சுமமாக வாழ்ந்து தவம் செய்வதாக ஆன்மீக நம்பிக்கை உள்ளது. இந்த மலையில் ஏராளமான அரிய மூலிகைகள் நிறைந்துள்ளன.

இக்கோவிலை பக்தர்கள் அடைவதற்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை மலையேற வேண்டி இருக்கும். மலை உச்சியில் மின்சாரம், தொலைபேசி அல்லது இணையதள வசதி எதுவும் கிடையாது. அடிப்படை சிற்றுண்டிகள் மட்டுமே கிடைக்கும் என்பதால் அடிவாரத்தில் இருந்தே குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும்.

வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படியே இங்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இங்குள்ள இயற்கை எழிலும் நிசப்தமும் நமக்குள் ஆழமான அமைதியை உண்டாக்கும். தியானம் செய்யவும், மௌனம் மேற்கொள்ளவும் விரும்புபவர்களுக்கு உகந்த இடமாக கருதப்படும் இந்த சதுரகிரி மலை நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ளதால் 'சதுரகிரி' என்று அழைக்கப்படுகிறது.

இம்மலையில் ஏராளமான மருத்துவ மூலிகைகள் உள்ளதால் இதன் அருமைகளை உணர்ந்த பல சித்தர்கள் இங்கு தங்கி தீராத நோய் உள்ள மக்களுக்கு சித்த மருத்துவம் செய்து அருளியதாக வரலாறு கூறுகிறது. இம்மலையில் மகாலிங்கம், சுந்தரமூர்த்தி லிங்கம், சந்தன மகாலிங்கம், இரட்டை லிங்கம் மற்றும் காட்டு லிங்கம் என்று ஐந்து கோவில்கள் உள்ளன.

வருடம்தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை மற்றும் சிவராத்திரி தினங்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறிச் சென்று வழிபட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கரூர் சோகம்: 31 பேருக்கு அரசு வேலை! எந்தெந்த துறைகளில் பணி ஒதுக்கீடு? முழு பட்டியல் இதோ!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
இதையும் படியுங்கள்:
சபரிமலையில் வரலாற்று சிறப்புமிக்க மாற்றம்: இந்த ஆண்டு முதல் AI தொழில்நுட்பம் அறிமுகம்!
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில்
logo
Kalki Online
kalkionline.com