உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் எப்போது? 2 நிமிடத்தில் நீங்களே கணக்கிடலாம்!

நவகிரகங்களில் மிக வேகமாக நகரக்கூடிய சந்திரன் ஒரு ராசியிலிருந்து எட்டாவது ராசிக்கு வரும் போது சந்திராஷ்டமம் தினமாக கருதப்படுகிறது.
Chandrashtama |சந்திராஷ்டமம்
Chandrashtama |சந்திராஷ்டமம்AI Image
Updated on

சந்திராஷ்டமம் என்பது ஒருவரின் பிறந்த ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டரை நாள் காலம். இந்த நாட்களில் மனம் சஞ்சலமாக, கோபம், எரிச்சல், பொறுமையின்மை அதிகரிக்கும் என்பதால் புதிய முயற்சிகள், முக்கிய முடிவுகள், முதலீடுகள், நீண்ட பயணங்கள், சுபகாரியங்களைத் தவிர்க்க வேண்டும். ராசிப்படி, நட்சத்திரப்படி 25–28 நாட்களுக்கு ஒருமுறை இது வரும்.

Chandrashtama |சந்திராஷ்டமம்
Chandrashtama |சந்திராஷ்டமம்AI Image

பொதுவாக ராகுகாலம், எமகண்டம் போல், சந்திராஷ்டமம் நாள்களிலும் ஒரு சிலர் எந்த நல்ல காரியத்தையும் செய்யாமல் தவிர்க்கிறார்கள். ஒருவரின் பிறந்த ராசிக்கு எட்டாமிடத்தில் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலமே சந்திராஷ்டமம் ஆகும். அப்படி வரும் சந்திரன் ஒரு ராசியில் இரண்டரை நாட்கள் தங்குவார். பொதுவாக எட்டாம் இடம் என்பது சில தடைகள், மனச்சங்கடங்கள், இடையூறுகள் போன்றவற்றை ஏற்படுத்தும் இடமாகும்.

'சந்திரன்' மற்றும் 'அஷ்டமம்' (எட்டு) ஆகிய இரண்டு வார்த்தைகளின் சேர்க்கையே சந்திராஷ்டமம். சந்திரனின் பெயர்ச்சியை வைத்து தான் அன்றைய நாளில் நட்சத்திரம், திதி, சந்திராஷ்டமம் ஆகியவை கணக்கிடப்படுகிறது.

கணக்கிடும் முறை: எளிமையாக கூறவேண்டுமானால் ஒரு ராசியில் சந்திரன் அமர்ந்திருந்தால், அதற்கு எட்டாவதாக இருக்கும் ராசிக்கு சந்திராஷ்டம தினம் என்று எடுத்துக் கொள்ளவும்.

உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்குரிய ராசியைக் கண்டறியுங்கள் (எ.கா: ரேவதி நட்சத்திரத்திற்கு மீனம் ராசி). அன்றைய தேதியில் சந்திரன் எந்த ராசியில் சஞ்சரிக்கிறார் என்பதை தினசரி பஞ்சாங்கம் பார்த்து அறியலாம். உங்கள் ராசியில் இருந்து 8-வது ராசியை எண்ணிப் பார்க்கும்போது, அந்த ராசிக்குரிய நட்சத்திர நாட்கள் சந்திராஷ்டம நாட்களாகும்.

எடுத்துக்காட்டு: உங்கள் ராசி மேஷம் என்றால், அதிலிருந்து எண்ணும்போது 8-வது ராசி விருச்சிகம். எனவே, சந்திரன் விருச்சிக ராசியில் (அனுஷம், கேட்டை, விசாகம் 4-ம் பாதம்) சஞ்சரிக்கும் நாட்கள் உங்களுக்கு சந்திராஷ்டமமாக அமையும்.

ராசிப்படி சந்திராஷ்டமம்: ஒவ்வொரு மாதமும் தோராயமாக 25 முதல் 27 நாட்களுக்கு ஒருமுறை இந்த சந்திராஷ்டமம் ஒவ்வொருவரின் ராசிக்கும் வரும்.

நட்சத்திரப்படி பார்த்தால், நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம்தான் சந்திராஷ்டமம்.

நட்சத்திரப்படி சந்திராஷ்டமம்: மொத்தம் உள்ள 27 நட்சத்திரங்களின் அடிப்படையில், ஒருவருக்கு தோராயமாக 25 முதல் 28 நாட்களுக்கு ஒருமுறை சந்திராஷ்டமம் வரும்.

பொதுவாக சந்திரனை மனோகாரகன் என்றும் போக்குவரத்துகளுக்கு காரகன் என்றும் ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. பயணத்தின்போது சாலையின் வேகத்தடைகளை நிதானமாகக் கடந்து சங்கடம் நேராமல் தவிர்த்துக் கொள்வதைப் போலத்தான் சந்திரா‌ஷ்டமம். சந்திரன், மனோகாரன் என்பதால், இந்த இரண்டேகால் நாட்கள் மனம் சஞ்சலமாகவும், குழப்பமாகவும் இருக்கும்.

இந்த நாளில் நம் எண்ணங்களிலும் கருத்துகளிலும் நிதானமற்ற நிலை உண்டாகும். எனவே மனோகாரகன் எட்டில் மறையும்போது மன உளைச்சல்களையும், பொறுமையின்மை, ஆத்திரம், எரிச்சல், கோபம் போன்ற எதிர்மறை குணங்களையும் தருகிறார். இக்காலங்களில் வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டியதும் அவசியமாகிறது. எனவே, புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிட்டு, முக்கிய முடிவுகள் எடுப்பதை ஒத்திவைப்பது நல்லது. வாக்குவாதங்களில் ஈடுபடாமல், நிதானத்தைக் கடைப்பிடிப்பது நன்மை தரும்.

அதனால் தான் சந்திராஷ்டம தினத்தில் முக்கிய முடிவுகளைத் தவிக்க வேண்டும் என ஜோதிடர்களும், நம் முன்னோர்களும் சொல்லி வைத்துள்ளனர்.

இன்றைய தேதியில் ரேவதி நட்சத்திரம், மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மீனம் ராசிக்கு 21-ம்தேதி (நேற்று) காலை 07:54 க்கு தொடங்கிய சந்திராஷ்டமம் நாளை (23-ம்தேதி) இரவு 07:01 வரை உள்ளது.

மேஷம் ராசிக்கு நாளை ஜூலை 23-ம்தேதி இரவு 07:01 க்கு தொடங்கும் சந்திராஷ்டமம் ஜூலை 26-ம் தேதி காலை 07:35-ம் தேதி வரை உள்ளது.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் இருக்க சந்திராஷ்டமத்தை கண்டு பயம் ஏன்?
Chandrashtama |சந்திராஷ்டமம்

இந்த நாட்களில் என்ன செய்ய வேண்டும்?

Chandrashtama | சந்திராஷ்டமம்
Chandrashtama | சந்திராஷ்டமம்AI Image

சந்திராஷ்டமம் பலன்கள்

  • சந்திராஷ்டம நாளில் தினமும் காலையில் குளித்துவிட்டு, 'ஓம் சந்திரமௌலீஸ்வராய நம' என்ற மந்திரத்தை ஜபிப்பது மன அமைதியைத் தரும்.

  • அதிகப்படியான கோபத்தைத் தவிர்த்து, சந்திரமௌலீஸ்வரரை அல்லது குலதெய்வத்தை மனதார வேண்டவும்.

  • வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். உங்கள் பேச்சில் கவனம் தேவை.

  • முக்கியமான முடிவுகள் எடுப்பதையும், புதிய செயல்களைத் தொடங்குவதையும் தவிர்க்கவும்.

  • கடன் கொடுக்கல் வாங்கல்களை தவிர்க்கலாம்.

  • பேச்சைக் குறைத்து இறைவனை மனதில் வழிபட்டு தியானித்தல் நல்ல பலன்களைத் தரும்.

  • ஏழைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் அன்னதானம் அல்லது இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

  • சந்திரனின் ஆதிக்கத்திற்குரிய வெள்ளை நிற ஆடைகளை அணிவது மனதை அமைதிப்படுத்த உதவும்.

  • கோபத்தைக் குறைத்து, மனதை ஒருமுகப்படுத்த தியானம் அல்லது இறை வழிபாட்டில் கவனம் செலுத்தலாம்.

  • புதிய தொழில் தொடங்குதல், ஒப்பந்தங்களில் கையெழுத்திடுதல் போன்றவற்றை ஒத்திவைக்கலாம்.

என்ன செய்யக் கூடாது?

  • புதிய முதலீடுகள் செய்ய வேண்டாம்.

  • அவசரப்பட்டு எந்தவொரு முக்கிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது.

  • சுபகாரிங்களை செய்யக்கூடாது.

  • நீண்டதூர பயணங்களை தவிர்ப்பது நல்லது.

இதையும் படியுங்கள்:
சந்திராஷ்டம தின அச்சத்தைப் போக்கும் ரகசிய வழிமுறை!
Chandrashtama |சந்திராஷ்டமம்

சந்திராஷ்டம நாளில் ஒவ்வொரு ராசியினரும் வழிபட வேண்டிய தெய்வங்கள்:

சந்திராஷ்டம நாளில் மன அமைதியைப் பெறவும், தோஷங்கள் விலகவும் அவரவர் ராசிக்குரிய தெய்வம், குலதெய்வம் மற்றும் இஷ்ட தெய்வத்தை மனமுருகி வழிபட வேண்டும். மேலும், 12 ராசியினர் தங்களுக்குரிய சிறப்பு தெய்வங்களை கீழே காணலாம்:

மேஷம் : முருகப்பெருமான் (அல்லது) ஸ்ரீ ஆஞ்சநேயர்.

ரிஷபம் : துர்க்கை அம்மன் (அல்லது) மகாலட்சுமி.

மிதுனம் : பெருமாள் (நாராயணன்) அல்லது ஸ்ரீ கிருஷ்ணர்

கடகம் : பார்வதி தேவி (அல்லது) அன்னபூரணி.

சிம்மம் : சிவபெருமான் (நடராஜர்) அல்லது விநாயகர்.

கன்னி : தட்சிணாமூர்த்தி (அல்லது) பெருமாள்.

துலாம் : மகாலட்சுமி (அல்லது) சரஸ்வதி.

விருச்சிகம் : யோக நரசிம்மர் (அல்லது) முருகப்பெருமான்.

தனுசு : ஐயப்ப சுவாமி (அல்லது) தத்தாத்ரேயர்.

மகரம் : விநாயகர் (அல்லது) ஆஞ்சநேயர்.

கும்பம் : சிவபெருமான் (அல்லது) சனி பகவான்.

மீனம் : மீனாட்சி அம்மன் (அல்லது) ஸ்ரீரங்கநாதர்.

இதையும் படியுங்கள்:
சந்திராஷ்டம பாதிப்பிலிருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!
Chandrashtama |சந்திராஷ்டமம்
logo
Kalki Online
kalkionline.com