
திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூந்தோட்டத்துக்கு அருகில் நாலு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது செதலபதி திருக்கோயில். அமாவாசை மற்றும் முன்னோரை வழிபாட்டு தினங்களில், ‘தட்சிண கங்கை' எனப் புகழப்படும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசலாற்றின் கரையில் அமைந்திருக்கும் செதலபதி அருள்மிகு முக்தீஸ்வரரை தரிசிப்பவர்கள் ஏராளம்.
அன்னை சீதா தேவியை, அசுரன் ராவணன் அபகரித்துச் சென்றபோது ஜடாயு பறவையின் இறக்கைகளை வெட்டினான். உயிருக்குப் போராடிய ஜடாயு, ஸ்ரீராமனிடம் இந்தத் தகவலை சொல்லிவிட்டு இறந்துபோனது. ஸ்ரீராமனின் வனவாச காலத்தில் தந்தை தசரதரும் இறந்துவிட்டார். அதற்காக சிராத்தம் செய்ய எண்ணி இத்தலத்திற்கு வந்தார் ராமபிரான். அரசலாற்றில் நீராடி, சிவ பூஜை செய்து தசரதருக்கு பிண்டம் வைத்து சிராத்தம் செய்தார்.
அப்போது தனது மனைவிக்காகப் போராடி உயிர் விட்ட ஜடாயுவுக்கும் மரியாதை செய்யும் விதமாக பிதுர் தர்ப்பணம் செய்தார். இத்தலத்தில் தர்ப்பணம் செய்வோரின் முன்னோர்கள் பிறப்பற்ற நிலையாகிய முக்தி அடைவர் என்பதால் இத்தல ஈசனுக்கு, ‘முக்தீஸ்வரர்’ என்றும், தலம் ‘திலதர்ப்பணபுரி' என்றும் பெயர் பெற்றது. 'திலம்' என்றால் 'எள்.' அம்பாள் பொற்கொடி அம்மை. பெண்களுக்கு மங்கல வாழ்வைத் தருபவள். திருஞானசம்பந்தரால் பாடப்பட்ட திருத்தலம் இது.
ஸ்ரீராமர் தர்ப்பணம் செய்தபோது நான்கு பிண்டங்கள் பிடித்து வைத்து பூஜித்தார். இந்த பிண்டங்கள் லிங்கங்களாக மாறி விட்டனவாம். தற்போதும் இக்கோயில் மூலஸ்தானத்திற்கு பின்புறம் இந்த லிங்கங்களையும் தர்ப்பணம் செய்த ஸ்ரீராமரையும் தரிசிக்க முடியும். இவர் தனது வலது காலை மண்டியிட்டு வடக்கு நோக்கி திரும்பி வணங்கியபடி காட்சி தருகிறார். ஸ்ரீராமரின் இத்தகைய அரிய கோலத்தைக் காண்பது அபூர்வம். சிவாலயம் ஆயினும், மகாவிஷ்ணுவை நின்ற, அமர்ந்த, கிடந்த கோலங்களில் இத்தலத்தில் தரிசிக்கலாம். கோயிலுக்கு வெளியில் அழகுநாதர் சன்னிதி உள்ளது.
இக்கோயில் சிவலிங்கம் ஸ்ரீராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. காசியில் கங்கை வடக்கில் இருந்து தெற்கு நோக்கி பாய்வது போல் இங்குள்ள காவிரியின் துணை நதியான அரசலாரும் பாய்வது சிறப்பாகும். இங்குள்ள முருகப்பெருமானைக் குறித்து அருணகிரிநாதர் பாடியிருக்கிறார்.
முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் என இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர். சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே இருவரும் இணைந்து இருப்பதால் இக்கோயிலில் தினமும் அமாவாசை தர்ப்பணம் செய்கின்றனர். இதனை நித்திய அமாவாசை என்பர். இத்தலத்தில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளில் வேண்டுமானாலும் சிராத்தம், தர்ப்பணம் செய்யலாம் என்பது இக்கோயிலின் சிறப்பு.
இக்கோயிலுக்கு அருகில் சூரிய புஷ்கரணி, சந்திர தீர்த்தங்களும் உள்ளன. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய காசி, ராமேஸ்வரம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, செதலபதி, கயா, அலகாபாத்தில் உள்ள திருவேணி சங்கமம் ஆகிய ஏழு தலங்கள் சிறந்த தலங்களாகக் கருதப்படுகின்றது. இதில் ஐந்தாம் இடத்தில் உள்ள தலம் செதலபதி. ஸ்ரீராமர் 'திலம்' வைத்து தர்ப்பணம் செய்ததால், ‘திலதர்ப்பணபுரி’ என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் 'சிதலைப்பதி' என்று மருவியதாகக் கூறப்படுகிறது.
இக்கோயிலில் மனித முகத்துடன் மேற்கு பார்த்த தனி சன்னிதியில் அருளும் விநாயகருக்கு மட்டை தேங்காய் கட்டி வேண்டினால் வேண்டுதல்கள் நிறைவேறும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள். நவகிரக சன்னிதியில் சூரிய பகவான் மட்டும் உயர்ந்த பீடத்தில் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி, காசி விஸ்வநாதர், நாகர் சன்னிதிகளும் இங்கு இருக்கின்றன.