
* திருவாரூரில் பிறந்த அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய தண்டியடிகள் நாயனார், பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தவர். இருப்பினும், தண்டியடிகள், ‘இறைவன் திருவடிகளை மனதிற்குள் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை மனதில் கொண்டு செயல்பட்டு வந்தார்.
* திருவாரூர்ப் பூங்கோயிலில் இறைவன் முன் வலம் வந்து, நமச்சிவாயத்தின் மீது அன்பு கொண்டு, திருத்தொண்டுகள் பல செய்து வந்தார் தண்டியடிகள்.
* திருவாரூர் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கமெங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிய காரணம் குளத்தின் இடம் குறைவானதை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தில் முன்போல தண்ணீர் பெருக வேண்டி, தோண்ட எண்ணினார். இறைவன் நாமத்தை தினமும் மனதில் நினைத்தவாறு, குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போட ஆரம்பித்தார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்ட சமணர்கள் பொறாமைப்பட்டு, ‘மண்ணைத்தோண்டும் பணியைக் கைவிடுமாறும், இதனால் ஒரு பயனும் இல்லை" என்றும் அவரிடம் கடுமையாகக் கூறினர்.
* அதுகேட்ட தண்டியடிகள், "இது சிவத்தொண்டு. இதற்குப் பலன் சிவத்தொண்டு மூலம் அடைகின்ற பயன். சிவத் தொண்டின் பெருமையை அறிகின்ற ஆற்றலும், இப்பணியின் அழகைக் காணவும் உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை" என பதிலளித்தார்.
* உடனே சமணர்கள் அவரை நோக்கி, "நீ மட்டும் கொடுத்து வைத்திருக்கிறாயா என்ன? ஏற்கெனவே பார்வையற்றவன். இப்போது செவியும் இழந்து விட்டாயோ?" என்று இகழ்ந்துரைத்தனர்.
* மனம் தளராத தண்டியடிகள், ‘"மந்த உணர்வும், விழிக்குருடும், கேளாச்செவியும் உங்களுக்கே உள்ளன. நான் சிவபெருமானுடைய திருவடிகளை அன்றி வேறு காணேன். ஒருவேளை உங்கள் கண்கள் குருடாகி, உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீங்கள் என்ன செய்வீர்கள்..?" என்றார்.
* அதுகேட்ட சமணர், "நீ வணங்கும் சிவனின் அருளால் கண்பெற்றுவிட்டால், பிறகு வேலை செய்யலாம்" என்று சொல்லி தண்டியடிகள் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து, நட்ட தறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.
* தண்டியடிகள் சிவபெருமான் முன் சென்று "ஐயனே! இன்று சமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்த்தருள வேண்டும்," என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றார். இறைவனுக்கு பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதவாறே உறங்கினார்.
அன்றிரவு சோழ மன்னர் கனவில் சிவபெருமான் தோன்றி, "தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்டுகையில் சமணர்கள் இடையூறு விளைவித்துள்ளனர். நீ அவனுக்கு உதவி செய்" என்று உத்தரவிட்டு மறைந்தார்.
* விழித்தெழுந்த சோழ மன்னன், பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை அடைந்து விசாரித்தார். தண்டியடிகள் நிகழ்ந்தவைகளைக் கூற, சமணர்க்கும், தண்டிக்கும் இடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான் மன்னன். சமணர்களின் கருத்தையும் அறிந்து கொண்டான். பின்னர் சமணர்கள் மற்றும் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான் மன்னன்.
* மன்னன், தண்டியடியாரை நோக்கி, "பெரிய சிவனடியாரே! நீங்கள் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுங்கள் என்றான். அதுகேட்ட தண்டியடிகளார், "நான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப் பெற்று சமணர்கள் தங்கள் கண்களை இழப்பர்," என்று சொல்லி சிவபெருமானை வணங்கி குளத்தில் மூழ்கி எழுகையில், கண்ணொளி பெற்றார். அங்கிருந்த சமணர்கள் கண் பார்வை பறி போனது. உடனே சமணர்கள் குளக்கரையை விட்டு வெளியேறினர்.
* பிறகு மன்னன் தண்டியடிகளிடம், அவரது பணியைத் தொடருமாறு பணித்து, வணங்கிச் சென்றான். அகக்கண்ணுடன் புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் தன்னுடைய திருத்தொண்டினை பல காலம் தொடர்ந்து செய்து, சிவபதம் அடைந்தார்.