
நாகப்பட்டினம் அதிபத்த நாயனார் அவதரித்து, வழிபட்டு, முக்தி அடைந்த இடமாகும். அதிபத்த நாயனார் வழிபட்ட அமுதீசர் திருக்கோவில் நுளைப்பாடியில் (நம்பியார் நகர்) உள்ளது. அதிபத்த நாயனாரின் திருவுருவச் சிலை நாகைக்காரோணம் திருக்கோவிலில் உள்ளது.
தல வரலாறு:
அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் தேவார பாடல் பெற்ற சிவத்தலங்களுள் 82-வது தலமாக விளங்குகிறது திருநாகைக் காரோணம். ஈசனின் பெயர் காயாரோகணேஸ்வரர். இங்குள்ள லிங்கம் சுயம்பு மூர்த்தியாகும். அம்பிகையின் பெயர் நீலாயதாட்சி. தல விருட்சம் மாமரம். தீர்த்தம் புண்டரீக தீர்த்தம். ஐந்து நிலை ராஜகோபுரம் கொண்ட அற்புதமான திருத்தலம். அழுகுணி சித்தரின் ஜீவ சமாதி இக்கோவிலில் உள்ளது. சுந்தரர் பதிகம் பாடி சிவனிடமிருந்து முத்தாரம், வைர மாலை, கஸ்தூரி, கமழ்சாந்து மற்றும் குதிரை ஆகியவற்றை இத்தலத்தில் பெற்றார்.
அதிபத்த நாயனார்:
சோழ நாட்டில் நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகில் நுளைப்பாடி என்னும் கிராமம் உள்ளது. அங்கு பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடித் தொழில் செய்து வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவராக அதிபத்தர் என்பவர் இருந்தார். இவர் சிறுவயதில் இருந்தே சிறந்த சிவபக்தராக இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் கடலுக்கு மீன்பிடிக்கப் போகும்பொழுது தன்னுடைய வலையில் சிக்கக் கூடிய முதல் மீனை எடுத்து இந்த மீன் இறைவனாகிய சிவபெருமானுக்கு உரியது என்று சொல்லி கடலில் விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
தங்க மீன்:
பக்தரின் அன்பை உலகுக்கு வெளிப்படுத்த சிவபெருமான் அதிபத்த நாயனாரின் வலையில் ஒரே ஒரு மீனை மட்டும் சிக்குமாறு செய்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் வழக்கம் போல "இந்த மீன் என்னை படைத்த சிவபெருமானுக்குரியது சிவார்ப்பணம்" என்று கூறி கடலில் விட்டுவிடுவார். தொடர்ந்து வந்த நாளெல்லாம் இவ்வாறு ஒரு மீன் கிடைப்பதே வழக்கமாக நிகழ்ந்தது. இருந்தாலும் அதிபத்தர் தன்னுடைய பக்தியில் இருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார். காலப்போக்கில் அதிபத்த நாயனாரின் குடும்பமே கடுமையான வறுமையில் வாடி வதங்கியது. அதிபத்த நாயனாரின் உடலும் நாளுக்கு நாள் தளர்ந்து கொண்டே வந்தது.
தல சிறப்பு:
அதிபத்தரை சோதிக்க எண்ணிய சிவபெருமான் ஒருநாள் மீனுக்கு பதிலாக பொன்மீனை அதிபத்தரின் வலையில் பிடிப்படுமாறு செய்தார். அந்த மீன் ரத்தின மணிகள் பதிந்த பொன்மீனாக இருந்தது. அதனை வலையில் பிடித்த வலைஞர்கள் மிகவும் மகிழ்ந்து அதிபத்தரிடம் கூறினார்கள். அதிபத்த நாயனார் பொன்னும் ஒளியுடைய நவமணிகளும் விளங்கும் மீனைக் கண்டு "இது ரத்தினங்களால் உறுப்பமைந்த பொன் மீன் ஆதலால் என்னை ஆட்கொண்டருளிய பரமசிவனுக்கே உரியது" என்று கடலில் விட்டார். அதிபத்த நாயனாரின் இந்த செயலைக் கண்டு அருகில் இருந்தவர்கள் எல்லோரும் திகைத்து நின்றனர். பொன்னாசை என்னும் பெரும் பற்றை முழுமையாக நீக்கிய ஒப்பில்லாத மெய்த் தொண்டர் முன்னே இறைவன் விடையூர்தியின் மேல், மேகம் தவழும் வானத்தில் எழுந்தருளினார். இதைக் கண்ட தேவர்கள் கற்பகப் பூ மழை சொரிந்தனர். சிவபெருமான் தமது உலகத்திலே அடியார்களோடு இருக்கும்படி நாயனாருக்கு அருள் செய்தார்.
தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா:
அதிபத்த நாயனாரின் குருபூஜை ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரம் அன்று நடைபெறுகிறது. அதிபத்தர் தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா ஆண்டுதோறும் நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி கோவிலில் ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தன்று இன்றும் நடைபெறுகிறது. அதிபத்தர் உற்சவர் சிலையை ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளச் செய்து கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதாகவும், அப்போது மீனவர்கள் தங்க மீனை வலையில் வைத்து கடலில் பிடித்ததைப் போல பாவனைகள் செய்வார்கள். இது அதிபத்தர் தங்க மீனை பிடித்ததாக கொள்ளப்படும். அவ்வேளையில் சிவபெருமான் கடற்கரையில் எழுந்தருளும் பொழுது தங்கமீனை படைத்து பூஜை செய்வார்கள். பிறகு சிவபெருமான் அதிபத்தருக்கு முக்தி தரும் நிகழ்ச்சி நடைபெறும்.
இந்த கோவில் நாகப்பட்டினம் ரயில் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நிறைய பஸ் வசதிகளும் உள்ளன. கோவில் காலை 6:00 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.