‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை’யின் பொருள் தெரியுமா?
விநாயகர் எளிமையான மூர்த்தி, வலிமையான கீர்த்தி கொண்ட முழுமுதற்கடவுள். இவரில்லாமல் எந்த வழிபாடும் இல்லை என்பதுதான் இவரது சிறப்பம்சம். கோயில் என்றில்லை, குளக்கரை; அரசமரத்தடி என எங்கும் எளிதாக இவரை தரிசிக்கலாம். கொஞ்சம் அறுகம்புல் வைத்துக்கூட இவரை வணங்கிக் கொள்ளலாம். எளிமையே வடிவான இவர்தான் துன்பப்படும் எல்லா ஜீவன்களுக்கும் ஆறுதலும் அமைதியும் வழங்கும் முதல்வனாக மூலப்பொருளாக விளங்குகிறார்.
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட திதி விசேஷமாக இருக்கும். அது வளர்பிறை, தேய்பிறை என்று ஏதாவது ஒன்றில்தான் வரும். ஆனால், விநாயகருக்கு மட்டுமே சதுர்த்தி என்றால் இரண்டுமே விசேஷம். வளர்பிறையில் வரும் சுக்லபட்ச சதுர்த்தியானது விநாயகர் சதுர்த்தி என்றும், தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தியானது சங்கஹர சதுர்த்தி என்றும் அழைக்கப்படுகிறது.
சிவபெருமானுக்கும் அம்பாளுக்கும் இடையில் விநாயகர் அமர்ந்திருந்தால் அந்த வடிவத்தை, ‘கஜமுக அனுக்ரஹ வடிவம்’ என்று புராணங்கள் தெரிவிக்கின்றன. விநாயகர் வழிபாட்டில், ‘கணபதி பஞ்சாயதனம்’ என்ற ஒரு வழிபாடு உண்டு. சூரியன், அம்பிகை, விஷ்ணு, பிள்ளையார், சிவன் ஆகிய 5 தெய்வங்களை ஒரே நேரத்தில், ஒரே பீடத்தில் பூஜை செய்து வழிபடுவதற்குதான் ‘கணபதி பஞ்சாயதனம்’ என்று பெயர். இந்த வழிபாட்டில் உப சன்னிதிகளும் மூர்த்தியாக விநாயகரை மத்தியில் வைத்து மற்ற 4 தெய்வங்களை நான்கு மூலைகளிலும் வைத்து வணங்குவர்.
மண்ணால் செய்த விநாயகரை வழிபட்டால் நற்பதவி கிடைக்கும். புற்று மண்ணில் உருவாக்கப்பட்ட விநாயகரை வணங்கினால் லாபம் கிட்டும். உப்பால் உருவான விநாயகரை வணங்கிட எதிரிகள் அழிவர். கல்லால் அமைந்த விநாயகரை வழிபட சகல பாக்கியங்களும் பெறலாம்.
மற்ற தெய்வங்களை விட விநாயகருக்கு ஒரு சிறப்பு உண்டு. விநாயகரை தரிசனம் செய்தாலே நவகிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான பலன் கிடைக்கும். அரச மரத்தடி விநாயகரை வணங்கினால் புத்திர விருத்தியும், ஆலமரத்தடி விநாயகரை வணங்கினால் பூமி யோகமும், வன்னி மரத்தடி விநாயகரை வணங்கினால் தேவைகள் அனைத்தும் நிறைவேறும், நெல்லி மரத்தடி விநாயகரை வணங்கினால் செல்வ வளம் கிடைக்கும்.
‘பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை’ என்ற பழமொழி வந்த கதை உங்களுக்கு தெரியுமா? ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் ஆவணி மாதம் சுக்கில சதுர்த்தியில் பிள்ளையார் பூஜை தொடங்கி, ஆண்டு இறுதியில் அனுமன் ஜயந்தி வரை எல்லா தெய்வங்களுக்கும் விழா எடுத்துக் கொண்டாடுகிறோம். அனுமன் ஜயந்தி முடிந்ததும் மூன்று நான்கு மாதங்கள் வழிபாடுகள் எதுவும் இல்லை. இதைத்தான், ‘பிள்ளையாரில் ஆரம்பித்து குரங்கில் முடிந்தது’ என்பர்.
தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைத்தால் ‘கம்முன்னு இரு, காரியம் நடைபெறும்’ என்பார்கள். இதற்கு என்ன விளக்கம் தெரியுமா? சும்மா இருந்தால் காரியம் நடைபெறும் என்பது இதற்கு பொருள் அல்ல, ‘கம்’ என்பது மந்திரங்களில் மூல மந்திரமாகும், ‘கணபதியை பற்றிக்கொள்; காரியம் கை கூடும்’ என்பதே இதன் உண்மையான பொருளாகும்.
ஒருவருக்கு கேது திசை நடக்கும்போது ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அச்சமயங்களில் கேதுவுக்கு உரிய தெய்வமாக விளங்கும் விநாயகப் பெருமானை வழிபட்டு வந்தால் இன்பமான வாழ்க்கையை அமைத்துக்கொள்ளலாம். கேது ஒருவருடைய ஜாதகத்தில் எந்த வீட்டில் இருக்கிறார் என்பதை அறிந்து, அந்த திசை நோக்கி இருக்கும் விநாயகரைத் தேர்ந்தெடுத்து வழிபட்டால் இன்னும் சிறப்பான பலன்களைப் பெறலாம்.
விநாயகப் பெருமானை எளிமையாக வழிபடலாம். அவருக்கு உகந்த அருகம்புல் மாலை மலிவானது. அதேபோல், வன்னி மர இலையும் அவருக்குப் பிடித்தமானதுதான். வன்னி இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானுக்கு எலிதான் வாகனம். ஆனால், கோவை குருபதேசி கவுண்டர்பாளையத்தில் உள்ள விநாயகர் குதிரையை வாகனமாகக் கொண்டு அருள்பாலிக்கிறார்.
நிலத்தடிக்கு கீழே அருள்பாலிக்கும் மூன்று விநாயகர்கள்: ஸ்ரீ காளஹஸ்தி ராகு -கேது பரிகாரத் தலத்திற்கு வெளியே பாதாள விநாயகர் கோயில் உள்ளது. பூமியின் மட்டத்திலிருந்து 30 அடி கீழே இவர் அருள்பாலிக்கிறார். இவரை சுற்றி தண்ணீர் கசிந்து கொண்டே இருக்கும்.
கடலூர் மாவட்டத்தின் மேற்கில் உள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ளது. பழைமையான பழமலைநாதர் சிவாலயம். இதன் முதல் வெளிப் பிராகாரத்தில் ஆழத்து விநாயகர் எனப்படும் பாதாள விநாயகர் சன்னிதி கிழக்கு நோக்கி சுமார் 18 அடி பள்ளமான இடத்தில் அமைந்துள்ளது. விநாயகரின் அறுபடை வீடுகளில் இந்த விநாயகர் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கனூரில் உள்ளது விருத்தாசலேசுவரர் கோயில். இந்தக் கோயிலில் உள்ள பாதாள விநாயகரை முக்கனிகள் கொண்டு அபிஷேகம் செய்தால், பக்தர்களிடம் உள்ள அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.