
தீபாவளி என்றாலே காசியும், கங்கையும்தான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், காசியைப் போலவே புண்ணியம் தரும் கோயில்களும் தமிழகத்தில் இருக்கின்றன. அதுபோன்ற சில கோயில்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
ஸ்ரீரங்கம் - ஜாலி அலங்காரம்: திருவரங்கம் ஸ்ரீரங்கநாத பெருமாளுக்கு தீபாவளி திருநாளை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். தீபாவளி அன்று பெருமாளுக்கு எண்ணெய் காப்பிட்டு, திருமஞ்சனம் செய்து புதிய வஸ்திரம் அணிவித்து அலங்காரத்துடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அன்று ஆழ்வார்களையும், ஆச்சாரியார்களையும் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளச் செய்து, பின் திருமஞ்சனம் நடைபெறும். இது முடிந்த பின் பெருமாள் சந்தை மண்டபத்துக்கு வந்து வழிபாடுகள் நடைபெறும். அதற்குப் பின் அவர் ஆஸ்தான மண்டபத்துக்கு வந்து, அங்கே பெருமாளுக்கு விசேஷமான 'ஜாலி' அலங்காரம் செய்வார்கள்.
ஜாலி அலங்காரம் என்பது தீபாவளி அன்று மட்டும் நடைபெறும். ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி பெருமாள் திருவடிகளில் மேள தாளங்கள் முழங்க நாதஸ்வர இசை ஒலிக்க வேத பாராணயத்துடன் சமர்ப்பிப்பேதே இவ்விழாவின் சிறப்பு. இந்த விசேஷத்தில் பெருமாள் அங்கு எழுந்தருளியுள்ள அனைவருக்கும் அருள்பாலித்து விட்டு கோயிலுக்கு திரும்புவார். இந்தக் காட்சியை தீபாவளி நாளில் தரிசனம் செய்தால் ஆடைகளுக்கும் பண வரவுக்கும் தட்டுப்பாடுகள் ஏற்படாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருநறையூர் - மகாலட்சுமிக்கு தீபாவளி சீர்வரிசை: தஞ்சை மாவட்டம், கும்பகோணம் - திருவாரூர் சாலையில் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது நாச்சியார்கோவில். இங்கு நர நாராயணர் பட்சி ரூபமாக எழுந்தருளியதால் இந்த ஊருக்கு திருநரையூர் என்ற பெயர் ஏற்பட்டது. மேதாவி மகரிஷி கடும் தவம் இருந்து சிவபெருமானிடம் மகாலட்சுமி எனக்கு மகளாக வந்து பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு பெற்றதால் அதன்படி மகாலட்சுமி இத்தலத்தில் அவதரித்து குபேரனுக்கு அருள்புரிந்ததாக தல புராணம் கூறுகிறது.
இத்தலத்தின் சிறப்பம்சம் மகாலட்சுமிக்கு வழங்கப்படும் தீபாவளி சீர்வரிசை. தீபாவளிக்கு முதல் நாள் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் ஆலயத்தில் இருந்து பட்டுப் புடவை, வேஷ்டி, துண்டு, பூமாலை, பழங்கள் மற்றும் தாமரை மலர்கள் ஆகியவற்றை மேள தாளத்துடன் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலுக்கு எடுத்துச் சென்று தீபாவளி சீராக மகாலட்சுமிக்கு வழங்குவது இன்றும் சிறப்பாக தொடர்கிறது.
மயிலாடுதுறை - கங்கா அனுக்கிரக ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி: நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் அமைந்துள்ளது வடாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோயில். அம்பாளின் பெயர் ஸ்ரீ ஞானாம்பிகை. மூலவர் வரம் தரும் வள்ளல் அதனால் 'வள்ளலார் கோயில் எனவும் இது அழைக்கப்படுகிறது. கங்கை, யமுனை, சரஸ்வதி தங்களது பாவங்களைப் போக்க காசி விஸ்வநாதரிடம் முறையிட்டதால், அவர் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் ஐப்பசி மாதம் முழுவதும் நீராடி என்னை வழிபட்டால் மீண்டும் பாவங்கள் நீங்கி பொலிவு பெறுவீர்கள் என்று அருள் பாலித்தார்.
அதன்படி துர்வாசர் வழிகாட்ட காவிரி துலாக்கட்டத்தை அடைந்த மூன்று நதிப்பெண்களும் அங்கு நீராடி சிவ வழிபாடு செய்தார்கள். ஐப்பசி அமாவாசை திருநாளில் ஈசன் அவர்களுக்கு 'மேதா தட்சிணாமூர்த்தியாக காட்சி தந்து அருள்பாலித்து கங்கையை மீண்டும் தன் திருமுடியில் சூடிக் கொண்டார். ஆகவே இவரை, ‘கங்கா ஸ்ரீ மேதா தட்சிணமூர்த்தி’ என்று புராணங்களில் கூறப்படுகிறது. அமாவாசை நாளில் இந்தப் புனித நிகழ்ச்சி இன்றும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அன்னம்புத்தூர் - குபேர நிதீஸ்வரர்: திண்டிவனம் - புதுச்சேரி சாலையில் வரகுப்பட்டி ஊருக்கு அடுத்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அன்னம்புத்தூர் ஊரில் அருள்மிகு நிதீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தனது கடும் தவத்தால் ஈசனிடம் இருந்து பெற்றவர் குபேரன். அவர் வழிபட்ட தலங்களுள் இந்த ஆலயமும் ஒன்றாகும். இங்கு தீபாவளியன்று லட்சுமி குபேர பூஜை செய்து வழிபடுவார்கள். இப்படி தீபாவளி நாளில் குபேரன் வழிபட்ட நிதீஸ்வரரை வழிபட்டால் அவரருளால் இல்லத்தில் அஷ்ட ஐஸ்வர்யங்களில் பொங்கிப் பெருகும்.
தஞ்சை - பங்காரு காமாட்சி கோயில்: தஞ்சை மேல வீதியில் அழகாகக் காட்சி அளிக்கிறது ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில். காஞ்சி ஸ்ரீ காமாட்சியின் நெற்றியில் இருந்து தோன்றிய சக்தியே ஸ்ரீ பங்காரு காமாட்சியாக திகழ்கிறாள் என்கின்றனர். மராட்டிய மன்னன் கனவில் வந்து அம்பிகையே உத்தரவிட்டு அதன்படி சுட்டிக்காட்டிய இடத்தில், தஞ்சை மேல வீதி பகுதியில் கோயில் மன்னர் எழுப்பினார் என்கிறது தல வரலாறு.
தீபாவளி நன்னாளில் ஸ்ரீ பங்காரு காமாட்சி அம்மனுக்கு முறம் ஒன்றில் அதிரசம், முறுக்கு என பண்டங்கள் வைத்து படையல் இடுவார்கள். தங்களால் முடிந்த அளவில் 11, 21 என்ற எண்ணிக்கையில் எடுத்து வந்து படையலிட்டு அம்மனை வணங்கி, அன்று புத்தாடை அணிந்து கொண்டால் வீட்டில் சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும். மாங்கல்யம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருச்செங்கோடு - கேதார கௌரி நோன்பு விரதம்: ஈரோட்டிலிருந்து 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருச்செங்கோடு மலையின் உச்சியில் உள்ளது அர்த்தநாரீஸ்வரர் கோயில். இத்தலத்தில் இறைவி தவம் செய்து இறைவனது திருமேனியில் ஒரு பாதி பகுதியை பெற்றார் என்று புராணம் கூறுகிறது. ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல கணவனையும், திருமணம் ஆகி இருந்தால் கணவனின் அன்பையும், குறைவற்ற இல்லறத்தையும் செல்வங்களையும் பெறலாம் என்பதற்காக தொடங்கியதே கேதார கௌரி விரதமாகும்.
இந்த விரதத்தை முதலில் கடைபிடித்தவள் உமையவளே. சிவனிடமிருந்து ஒரு பாதி பாகத்தை பெற்றதால், ‘பாகம் பிரியாள்’ என்று பெயர் பெற்றாள். தீபாவளி நாளில் கேதார கௌரி நோன்பு இருப்பவர்கள் அவசியம் திருச்செங்கோடு சென்று வழிபட்டு வர கேதார கெளரி விரத பலன் பல மடங்காகக் கிடைக்கும். தீபாவளி நாளில் இந்த அரிய சிறப்பு வாய்ந்த கோயிலுக்குச் சென்று வழிபட்டு இறைவனின் அருளைப் பெறலாம்.