கோயிலில் இறைவனை வேண்டிய பிறகு தேங்காய் உடைப்போம். அதைப்போல, ஒரு நல்ல காரியத்தை தொடங்குவதற்கு முன்பு தேங்காய் உடைப்போம். அந்தத் தேங்காய் எப்படி உடைந்தால் நம் வேண்டுதல் நிறைவேறும் என்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
தேங்காய் என்பது மனிதனுடைய ஆணவம், கன்மம், மாயை ஆகிய மூன்று விஷயங்களும் அடங்கியது என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது. தேங்காயின் மட்டை மாயை என்றும், அடுத்து இருக்கும் நார் கன்மம் என்று கடைசியாக இருக்கும் ஓடு ஆணவம் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றை நீங்கிவிட்டு பிறகு தேங்காயை கடவுளுக்குப் படைக்கும்போது, அதுதான் பரிசுத்த ஆன்மா என்று சொல்கிறார்கள். இந்த மூன்று விஷயங்களையும் வாழ்வில் இருந்து நீக்கி விட்டால் கடவுளின் அருளையும், ஆசியையும் பெற முடியும் என்பதே இதன் அர்த்தம்.
தேங்காய் உடைவது பொருத்துதான் நாம் செய்யப்போகும் செயல் எவ்வாறு அமையும் என்ற நம்பிக்கையை வைத்திருப்போம். தேங்காய் உடைக்கும்போது அது சரிபாதியாக உடைந்தால், குடும்பத்தில் இருக்கும் மனக்கசப்பு நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். தேங்காயின் கண் பாகம் இருக்கும் பகுதி பெரிதாகவும், கீழ்ப்பகுதி சிறிதாகவும் உடைந்தால், வீட்டில் செல்வம் பெருகும், பொருளாதாரம் உயரம், தொழிலில் முன்னேற்றம் அடையும் என்பது பொருள்.
கண் பகுதி சிறிதாகவும் கீழ்ப்பகுதி பெரிதாகவும் உடைந்தால், குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் கூடிய விரைவில் தீர்ந்து இல்லத்தில் மகிழ்ச்சியும், நிம்மதியும் பெருகும் என்று அர்த்தம். தேங்காய் உடைக்கும்போது உள்ளே பூ இருந்தால், நிச்சயம் நீங்கள் தொடங்கும் காரியம் வெற்றியில் முடியும். தேங்காய் நீள்வாக்கில் இரண்டாக உடைந்தால் பிரச்னை உண்டாகும். தேங்காய் உடைக்கும்போது அழுகியிருந்தால் நினைத்த காரியம் சற்று தள்ளிப்போகும் என்று பொருள்.
திருமணம் முடிந்து வரும்போது கண் திருஷ்டி நீங்க தேங்காய் உடைப்பார்கள். அந்த நேரத்தில் சகுணம் பார்ப்பார்கள். அப்போது உடைக்கும் தேங்காய் சுக்குநூறாக உடைந்து போனால், உங்கள் மீதிருக்கும் கண் திருஷ்டி, குடும்பத்தில் இருக்கும் கஷ்டங்களும் தூள்தூளாகப் போகும் என்று அர்த்தம். தேங்காய் உடைக்கும்போது உருண்டு ஓடி விட்டால், வாழ்க்கையும் அதுபோல உருண்டு ஓடிவிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
தேங்காய் நல்லமுறையில் சரிபாதியாக உடைந்தால் எடுத்த காரியம் நல்ல முறையில் நடக்கும் என்று கடவுள் ஆசிர்வதிப்பதாகப் பொருள். இதுவே நீள்வாக்கில் உடைந்தாலோ தேங்காய் அழுகிப்போனாலோ செய்யப்போகும் காரியத்தில் ஏதோ பிரச்னையிருப்பதாகக் கடவுள் எச்சரிப்பதாக எடுத்துக்கொண்டு கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகும்.