
கடவுள் குறித்த நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்பது தொடர்பான ஒரு குட்டி கதை உண்டு. தன்னுடைய இளம் மனைவியை அவளது கணவன் தனது இல்லத்திற்கு அழைத்துச் செல்ல வந்தான். அந்தப் பெண்ணுக்கு ஒரே சந்தோஷம், கணவனுடன் அவனது வீட்டுக்குக் கிளம்பப் போகிறோம் என்று. கணவனது ஊர் ஆற்றின் அக்கரையில் இருந்தது. அதற்கு வெகு தூரம் ஆற்றில் போக வேண்டும்.
படகில் இருவரும் ஏற, கணவன் படகைச் செலுத்த மனைவிக்கு ஒரே ஆனந்தம். ஆனால், அந்தச் சமயம் பார்த்து வானம் இருண்டது. இடியோடு, பளீர் பளீரென மின்னல். அருகில் சென்று கொண்டிருந்த ஏராளமான படகுகளிலிருந்து பயத்தின் கூக்குரல் கேட்டது. ஆனால் கணவனோ, அமைதியாக தனது ஊரை நோக்கி படகை செலுத்திக் கொண்டிருந்தான்.
இதைக் கண்ட அவனது மனைவிக்குச் சற்று ஆச்சரியமாக இருந்தது. ‘இப்படிப்பட்ட பயங்கரமான புயல் அடிக்க, மின்னல் ஒளி வெள்ளம் பாய்ச்ச, அருகில் உள்ள படகுகளில் பயத்தின் ஓலக்குரல்கள் கேட்க, தனது கணவன் மட்டும் பயப்படாமல் எப்படி இருக்கிறார்’ என்பதே அந்த ஆச்சரியம்.
அவள் தனது சந்தேகத்தை அவனிடமே கேட்டு விட்டாள். “உங்களுக்கு பயமாக இல்லையா?” என்று.
உடனே கணவன் தனது இடுப்பில் சொருகி இருந்த கூர்மையான கத்தியை எடுத்து தனது இளம் மனைவியின் கழுத்தில் வெட்டப்போவது போல வைத்தான்.
ஆனால், அந்தப் பெண்ணோ அதைக் கண்டு பயப்படாமல் சிரித்தாள்.
அதைக் கண்ட அக்கணவன், “என்ன உனக்கு பயமாக இல்லையா?” என்று கேட்டான்.
“எனக்கா? பயமா? எதற்கு பயம்? என்னை உயிராக நேசித்து என்னைக் காப்பாற்றத்தானே நீங்கள் இருக்கிறீர்கள்? நீங்கள் கத்தியை எனது கழுத்தில் வைத்தால் என்ன, வைக்காவிட்டால்தான் என்ன? நான் எதற்கு பயப்பட வேண்டும்?” என்றாள் அவள்.
“பார்த்தாயா? உனது கேள்விக்கு நீயே பதில் சொல்லி விட்டாய். நம்மைப் படைத்த கடவுளுக்கு நம்மைக் காப்பாற்றுவதை விட வேறென்ன வேலை? ஏதோ ஒரு சிறு புயலையும் கொஞ்சம் இடி, மின்னலையும் அனுப்பி இருக்கிறார். அவர் நம்மைப் பாதுகாக்க மாட்டாரா என்ன? உனது கழுத்தில் கத்தியை வைத்தாலும் நீ என்னை நம்புகிறாய் அல்லவா? அது போலக் கடவுளை நான் நம்புகிறேன். பத்திரமாக வீடு போய்ச் சேர்வோம். பயப்படாதே” என்றான்.
அதேசமயம் மழையும் புயலும் ஓய்ந்தது. இடி மின்னலும் நின்றது. படகு பத்திரமாக அக்கரை சேர்ந்தது.
உண்மையான பக்தன் எந்தக் காலத்திலும் சோர்வடைய மாட்டான்; பயப்படமாட்டான். அவனுக்குத்தான் அளவு கடந்த நம்பிக்கை கடவுள் மீது இருக்கிறதே! அவர் பார்த்துக் கொள்வார்.
இதுவல்லவா பக்தி?!