

இந்திய கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமில்லாமல் மேம்பட்ட அறிவியல், கணிதம், மருத்துவம் மற்றும் கட்டிடக்கலை ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. நம் முன்னோர்கள் ஆன்மீகத்தின் வழியே கோவில்களை உருவாக்கியதன் பின்னால் சில முக்கிய ஆழமான கோவில் அறிவியல் ரகசியங்களும் ஒளிந்துள்ளன.
புவியீர்ப்பு மற்றும் காந்த அலைகள் (Magnetic and Electric Energy):
கோவிலின் முதன்மைச் சிலை நிறுவப்பட்டிருக்கும் கர்ப்பக்கிரகம் அல்லது கருவறைதான் ஆற்றலின் மையப்புள்ளி. சிலையின் அடியில் வைக்கப்படும் செப்புத்தகடுகள் பூமியின் நேர்மறை ஆற்றலை உறிஞ்சி கருவறைக்குள் பரவச்செய்கின்றன.
கோயில்கள் உள்ள கருவறை அமைப்பு பெரும்பாலும் பூமியின் காந்த அலைகள் மற்றும் நேர்மறை ஆற்றல் அதிகம் உள்ள (Magnetic Equator) குறிப்பிட்ட இடங்களில் கட்டப்படுகின்றன. கருவறையின் மையத்தில் வைக்கப்படும் சிலை பூமியின் ஆற்றலை உறிஞ்சி அங்கு வரும் பக்தர்களுக்கு நேர்மறை அதிர்வுகளை வழங்குகிறது.
ஒலியியல் அறிவியல் (Acoustics):
கோவிலில் மணி அடிப்பது வெறும் சடங்கு அல்ல, அது ஒரு சிறந்த ஒலியியல் அறிவியல் ஆகும். கோவில் மணிகள் சாமானிய உலோகத்தால் செய்யப்படுவதில்லை. அவை செம்பு, வெள்ளி, துத்தநாகம், ஈயம் உள்ளிட்ட உலோகங்களின் துல்லியமான கலவையால் செய்யப்படுகின்றன.
இந்த மணியை ஒலிக்கும் பொழுது அது மூளையின் இடது மற்றும் வலது பக்கங்களை ஒருங்கிணைக்கும் தனித்துவமான ஒலியை உருவாக்குகிறது. மணியோசையிலிருந்து வெளிப்படும் அதிர்வு குறைந்தது 7 வினாடிகள் காற்றில் நீடிக்கும். இது மனித உடலில் உள்ள 7 சிகிச்சை மையங்களை (சக்கரங்களை) தூண்டி, மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்களை போக்குகிறது.
மேலும் கோவிலின் மண்டபங்கள், தூண்கள் மற்றும் கருவறை அமைப்பு ஒலியியல் விதிகளின்படி உருவாக்கப்பட்டுள்ளன. அங்கு உச்சரிக்கப்படும் மந்திரங்கள் அல்லது மணிகளின் ஓசை எதிரொலித்து கருவறையில் அதிர்வுகளை ஏற்படுத்தி மனதை ஒருநிலைப்படுத்தி மூளையின் திறனை மேம்படுத்த உதவுகிறது.
வாஸ்து மற்றும் வானியல் (Vastu & Astronomy):
இந்திய கோவில்களின் கட்டுமானத்தில் வானியல் ஒரு முக்கிய பங்கு வகித்தது. பெரிய சன்னதிகள் மட்டுமின்றி குகைகள் கூட சூரியக்கதிர்களை சுவாரசியமான வழிகளில் பயன்படுத்தி உள்ளது. கோனார்க், ஹம்பி விட்டலார் கோவில், தஞ்சை பெரிய கோவில் போன்ற பல கட்டடங்கள் சூரியனின் இயக்கம், நிழல் மற்றும் வானியல் கணக்குகளின் அடிப்படையில் துல்லியமாகக் கட்டப்பட்டுள்ளன. 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோனார்க் கோயிலில் நுணுக்கமாக செதுக்கப்பட்ட 24 சக்கரங்கள் உள்ளன.
அவை வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல. அவற்றில் பல துல்லியமான சூரிய கடிகாரங்களாகச் செயல்படுகின்றன. அவற்றின் ஆரங்களும் விளிம்புகளும் தாங்கள் உருவாக்கும் நிழலின் மூலம் நிமிடக் கணக்கில் நேரத்தைக் காட்டுகின்றன. தமிழ்நாட்டுக் கோவில்களின் பொறியியல் நுணுக்கங்கள் இன்றுவரை நவீன அறிவியலுக்கு சவாலாகவே உள்ளன.
தஞ்சை பெரிய கோயிலின் பிரம்மாண்டமான கோபுரத்தின் நிழல் நிலத்தில் விழாது என்றும், அதன் பிரம்மாண்டமான ஒற்றைக்கல் கோபுர அமைப்பும் அன்றைய பொறியியல் திறனுக்கு சான்றாகவும் கூறப்படும் அளவுக்கு கட்டடக்கலை வியக்கத்தக்கது.
கேதார்நாத் முதல் ராமேஸ்வரம் வரை உள்ள 8 முக்கிய சிவன் கோவில்கள் (காளஹஸ்தி, காஞ்சிபுரம், சிதம்பரம் உட்பட) ஒரே தீர்க்கரேகையில் (Longitude) 3000 ஆண்டுகளுக்கு முன்பே துல்லியமாக நேர்கோட்டில் கட்டப்பட்டுள்ளது ஒரு வியக்கத்தக்க பிரபஞ்ச ரகசியமாகும்.
உடல் நலம் மற்றும் மருத்துவம்:
கோவிலை வலம் வருதல் உடலுக்கும் மனதுக்கும் ஒரு சீரான நடைப்பயிற்சியைத் தருகிறது. பிரகாரத்தை வலம் வரும்போது புவி காந்த ஆற்றல் மையங்கள் மூலம் ஏற்படும் நேர்மறை ஆற்றல் நம் உடலில் பாய்ந்து மன அமைதியையும் உடல் ஆரோக்கியத்தையும் தருகிறது. கோவிலில் தரப்படும் தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன.
ஏலக்காய், பச்சை கற்பூரம் கலந்த துளசி தீர்த்தம் மற்றும் பிரசாதங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளன. செம்பு பாத்திரத்தில் உள்ள நீர் பாக்டீரியாக்களை அழிக்கும் திறன்கொண்டது. துளசி போன்ற மூலிகைக் கலந்த தீர்த்தத்தை உட்கொள்ளும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் அறிவியலை நேரடியாகச் சொன்னால் மக்கள் பின்பற்ற மாட்டார்கள் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் அதை ஆன்மீகத்தோடும் வாழ்வியலோடும் இணைத்து நமக்குக் கொடையாக அளித்துள்ளனர்.