குருதேவ் என்றும் ஶ்ரீ ஶ்ரீ என்றும் அழைத்துப் போற்றப்படும் ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் 1956ம் வருடம் மே மாதம் 13ம் தேதி தமிழ்நாட்டில் பாபநாசத்தில் பிறந்தார். வருடத்திற்கு குறைந்த பட்சம் 40 நாடுகளுக்கேனும் சென்று ஆன்மீகத்தையும் ‘தி ஆர்ட் ஆஃப் லிவிங்’ என்னும் வாழும் கலையையும் இளைஞர்களிடமும் பெரியோர்களிடமும் பரப்பி வருபவர் அவர்.
அவர் எந்த நாட்டிற்குச் சென்றாலும் ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் அவர் உரையைக் கேட்பதுடன் அங்குள்ள பிரதம மந்திரி, ராஜீய தூதர்கள், வணிக நிறுவன உரிமையாளர்கள், உயர்தர போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் அவரை வரவேற்று அவருடன் உரையாடல் நிகழ்த்தி தங்கள் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவது வழக்கம். இந்திய அரசு அவருக்கு 2016ல் பத்ம விபூஷன் விருதை வழங்கிக் கௌரவித்தது. அவரது உரைகள் புத்தக வடிவில் வெளிவந்து அனைவரையும் உத்வேகம் பெற வைத்து மகிழ்விக்கின்றன.
பளிச்சென்று கருத்துக்களை அள்ளித் தூவி விடும் அவரது உரை எப்படி இருக்கும்?
இதோ சில எடுத்துக்காட்டுகள்.
வார்த்தைகள்:
நீ வார்த்தைகளை சூழ்ச்சியுடன் மாற்றி அமைக்க ஆரம்பித்தால் அது பொய்.
நீ வார்த்தைகளுடன் விளையாட ஆரம்பித்தால் அது ஜோக்.
நீ வார்த்தைகளை நம்ப ஆரம்பித்தால் அது அறியாமை.
நீ வார்த்தைகளைக் கடந்து சென்றால் அது ஞானம்.
1996ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி இந்தோனேஷியாவில் (பாலியில்) பாலி க்ளிஃப் ரிஸார்ட்டில் ஆற்றிய உரையில் கூறியது.
பிரார்த்தனை:
நீரைப் பருகத் தரமுடியவில்லை எனில் எனக்குத் தாகத்தைத் தராதே.
உணவைத் தரமுடியவில்லை எனக்குப் பசியைத் தராதே.
நல்ல பணிகளுக்குப் பயன்படுத்தமுடியவில்லை எனில் எனக்குத் திறமைகளைத் தராதே.
அறிவைக் கடந்து என் பார்வையைச் செலுத்த முடியவில்லை எனில் எனக்கு நுண்ணறிவைத் தராதே.
உள்வாங்கி ஜீரணிக்க முடியவில்லை எனில் எனக்கு அறிவைத் தராதே.
சேவை செய்ய முடியவில்லை எனில் எனக்கு அன்பைத் தராதே.
உன்னை அடைய வழி வகுக்கவில்லை எனில் எனக்கு ஆசையைத் தராதே.
இல்லத்திற்கு அழைத்துச் செல்லவில்லை எனில் எனக்கு வழியைத் தராதே.
உன்னால் கேட்கமுடியவில்லை எனில் எனக்கு பிரார்த்தனையைத் தராதே.
அமெரிக்காவில் ஹவாயில் 1999, ஏப்ரல் 15ம் தேதி ஆற்றிய உரை. கடைசி வரியை அவர் கூறிய போது ஒரே சிரிப்பு மயம்!
ஐந்து ரகசியங்கள்:
ஐந்து ரகசியங்கள் இந்த படைப்பில் நுண்ணறிவுள்ளவர்களாலும் தேவதைகளாலும் பாதுகாக்கப்படுகின்றன.
1. ஜன்ம ரகசியம்: பிறப்பு ஒரு ரகசியம். ஒரு ஆத்மா எப்படி உடலை எடுக்கிறது. பிறக்கும் இடம், பிறக்கும் நேரம், உடல் வாகு, பெற்றோர் அனைத்துமே ரகசியம் தான்.
2. மரண ரகசியம்: மரணம் என்பது யாருக்கும் தெரியாத ஒரு ரகசியம். அது ஒரு மர்மம். உடலிலிருந்து ஆன்மா பிரிந்து யாத்திரையை மேற்கொள்வது என்பது ஒரு ரகசியம்.
3. ராஜ ரகசியம்: அனைத்தையும் காப்பது, ஒழுங்கைப் பராமரிப்பது உள்ளிட்டவை படைப்பின் ரகசியம்.
4. ப்ரகிருதி ரகசியம்: இயற்கை ஒரு மர்மம். அதை அதிகமாக அறிய அறிய மர்மம் இன்னும் அதிகமாகிறது. படைப்பைப் பற்றி அறிந்து அதன் மர்மத்தை விளக்க அறிவியல் முயன்றாலும் அது இன்னும் அதிக ஆழமான ரகசியமாகிறது.
5. மந்திர ரகசியம்: மந்திரங்களும் அதன் பலன்களும் அதன் செல்வாக்கு, வழிமுறைகள், அது வேலை செய்யும் பாங்கு அனைத்தும் மர்மம் தான். பிரக்ஞையின் லயத்தின் துடிப்புகளே மந்திரங்கள். அது ஒரு பெரும் மர்மம்.
ஒரு ரகசியம் என்பது பொதுவாக அவமானத்துடன் தொடர்பு கொண்டதாக இருக்கும். ஆனால் இந்திய பாரம்பரியத்தில் அது புனிதத்துடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கும்.