
சண்டை, வன்முறை, ரத்தம், அடிதடி, போதைக் கலாச்சாரம், சாதி பிரச்சினைகள் என்று சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவை வேறு பக்கம் மாற்றி விட்ட ஒரு படம் பொங்கலுக்கு வந்து பெரிய வெற்றியடைந்த மதகஜராஜா. ஒரு காலத்தில் விசு, வி.சேகர், கஜேந்திரன் போன்ற இயக்குனர்கள் குடும்ப உறவுகளை மையப்படுத்தி நகைச்சுவை கலந்த குணச்சித்திர படங்களைத் தொடர்ந்து கொடுத்து வெற்றிப்பட இயக்குனர்களாக இருந்தார்கள். தற்போது அது போன்ற படங்களுக்கு எல்லாம் வரவேற்பு இருக்காது. தமிழ் சினிமா வேறு தளத்திற்குப் பயணித்துவிட்டது என்று பேச்சு சுற்றிக்கொண்டிருக்கும்போது வந்திருக்கும் படம் தான் குடும்பஸ்தன். மேற்சொன்ன இயக்குனர்கள் படங்களில் என்னென்ன அம்சங்கள் இருக்குமோ அவையத்தனையும் வைத்துச் சமகாலப் படமாக வந்திருக்கிறது.
மணிகண்டன் நடிப்பில் இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி (நக்கலைட்ஸ்) இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்தப் படம் காமெடியும், குடும்ப சென்டிமென்டும் இருந்தால் போதும் மக்கள் திரையரங்கிற்கு வருவார்கள்; ரசிப்பார்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது.
ஒரு விளம்பரப்பட நிறுவனத்தில் பணிபுரிபவர் மணிகண்டன். தான் காதலித்த வெண்ணிலாவை (சான்வி மேகனா) பெற்றோர் அனுமதியின்றித் திருமணம் செய்துகொள்கிறார். ஒரு மத்தியத் தரக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுக்கு ஏற்படும் எல்லாப் பிரச்சினைகளும் இவருக்கும் ஏற்படுகிறது. மாமியார் மருமகள் சண்டை (அவள் எஸ்சி சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதால் கூடுதல் பிரச்சினை வேறு), பணக்கஷ்டம், மாப்பிள்ளையால் பிரச்சினை, எனப் பிரச்சினைகளால் சூழப்படுகிறார் மணிகண்டன். ஒரு சூழ்நிலையில் தன் நண்பனை அடித்தார் என்பதால் ஒரு வாடிக்கையாளரைத் திருப்பி அடிக்க, வேலையை விட்டே துரத்தப்படுகிறார். பின்னர் குடும்பத்தை நடத்த ஆன்லைனில் கடன், வட்டிக்காரர்களிடம் கடன் எனக் கடனுக்கு மேல் கடன் வாங்குகிறார். இந்தக் கடன்களால் அவர் சந்திக்கும் பிரச்சினைகளும் அதிலிருந்து அவர் எப்படி வெளியே வருகிறார் என்பதும் தான் கதை.
மணிகண்டனின் தந்தையாக ஆர் சுந்தர்ராஜன். அம்மாவாக மலையாள நடிகை கனகம், மாமாவாகக் குரு சோமசுந்தரம், கம்பெனி முதலாளியாகப் பாலாஜி சக்திவேல் அனைவரும் கச்சிதம். இதைத் தவிர பிரசன்னா பாலச்சந்திரன் (இயக்குனர் ராஜேஸ்வர் காளிச்சாமியுடன் சேர்ந்து இவர் கதையை எழுதியுள்ளார்) உள்பட பலர் நடித்துளார்கள். சிரிக்க வைப்பது ஒன்றே நோக்கம் என்று முடிவு செய்து புறப்பட்டிருக்கிறது இந்த அணி. இது போன்ற படங்களில் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் மிக முக்கியம். இதிலும் அவை அங்கங்கே இருந்தாலும் அடுத்தடுத்து வரும் நகைச்சுவைக் காட்சிகளால் அந்த ஆழத்தை ரசிகர்களால் உணர முடியவில்லை. தனது மனக்குமுறலை மணிகண்டன் கொட்டும் காட்சி ஒன்று இருக்கிறது. அதன் வீரியம் சென்று சேர்வதற்குள் பின்னணியில் நடக்கும் நகைச்சுவைக் காட்சிகளில் பார்வையும் மனமும் சென்று விடுவதால் அது வீணாகிவிடுகிறது.
நாயகனாக மணிகண்டன். இது அவருக்குத் தொடர்ந்து மூன்றாவது வெற்றியாக அமையும் என்பதில் ஐயமில்லை. மனைவிக்கும் பேச முடியாமல், அம்மாவிற்கும் பேச முடியாமல், மாமாவையும் எதிர்க்க முடியாமல் தவிக்கும் காட்சிகளில் தான் ஒரு நல்ல நடிகர் என்பதை நிரூபிக்கிறார். பிரச்சினையென்றால் குளியலறைக்கு சென்று கதைவைச் சாத்திக்கொண்டு புலம்பும் இடத்திலும், பிறக்கப் போகும் குழந்தையிடம் பேசும் இடங்களிலும் ரசிக்க வைக்கிறார். ஆனாலும் இது இரண்டும் கொஞ்சம் ஓவர்டோஸாகி விட்டதோ என்ற எண்ணமும் வராமல் இல்லை.
அதே போலப் பிரச்சினைகள் அடுத்தடுத்து அவரை மூழ்கடிக்கிறது. கடன் மட்டுமே பிரச்சினை என்றான பிறகு எவ்வளவுதான் அடுக்குவார்கள்? ஒரு கட்டத்திற்கு மேல் சற்று சலிப்பு உண்டாகிறது. இத்தனைக்கும் இவரது பிரச்சினைக்கு இவரது முன்கோபமும், விட்டுக் கொடுத்துப் போகாத தன்மையும் ஒரு காரணம். இதை அவர் மனைவி கடைசியில் சொல்லும்போது கூட அவர் உணர்வதாகத் தெரியவில்லை. இவரது நண்பர்களாக வருபவர்கள் எப்பொழுது பார்த்தாலும் குடித்துக் கொண்டு பொறுப்பு இல்லாமல் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
சொல்வதற்கு இருக்கும் அத்தனையையும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்துக் காட்சிகளை அடுக்கிவிட்டதால் படம் ஓடிக்கொண்டே இருப்பது போல ஒரு உணர்வு. ஒரு நல்ல நடிகரான குரு சோமசுந்தரத்தை கார்ட்டூன் கேரக்டர் போல ஆக்கி இருக்கிறார்கள். அவரது சீனா தொடர்பான நகைச்சுவை காட்சிகள் தான் படத்தில் சிரிப்பே வராத காட்சிகள். வில்லன் இல்லாத குறையை இவர் தனது கூர்மையான நாக்கால் மணிகண்டனை வாட்டுவதில் இருந்தே அப்படியொரு தோற்றத்தைக் கொண்டு வந்து விடுகிறார். அடுத்தடுத்து வரும் பேக்கரி காட்சிகள் சற்று அயர்ச்சியை உருவாக்குகின்றன. படத்தின் நீளத்தைக் கண்டிப்பாகச் சற்று குறைத்திருக்கலாம்.
படத்தில் அனைத்துப் பாத்திரங்களும் ஏதாவதொரு விதத்தில் யாரையாவது குறை சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் கிளைமாக்ஸ் காட்சிகளில் ஒட்டு மொத்த குடும்பத்தினரும் காரில் பயணம் செய்யும்பொழுது இவையத்தைனையும் வெளிப்படுவது அழகு. அந்தப் பத்து நிமிடப் பயணம்... திரையரங்கில் சிரிக்காதவர்கள் இருக்கவே முடியாது. ஹெட் லைட்டுக்குப் பதிலாக மொபைல் டார்ச் அடிக்கும் ஆர் சுந்தர்ராஜன், தனது கணவனை வாங்கு வாங்கென்று வாங்கும் குரு சோமசுந்தரத்தின் மனைவியென அனைவரும் சபாஷ் பெறுவது இந்தக் கிளைமாக்சில் தான்.
எடுத்துக் கொண்ட கதைக்கு நேர்மையாக நடந்து கொண்டிருந்தாலும் இன்னும் கொஞ்சம் செலவு செய்திருக்கலாமோ என்று தான் தோன்றுகிறது படத்தின் மேக்கிங்கைப் பார்த்தால். தயாரிப்பாளர் பைக்குள் இருந்து பணத்தை எடுக்கவே இல்லை போல.
பாலாஜி சக்திவேல் ரூமில் அடைபட்டுக் கிடப்பது, மாமனார் மாமியாரின் அறுபதாம் கல்யாணம் நடத்த குரு சோமசுந்தரம் படாத பாடு படுவது, காருக்குள் நடக்கும் க்ளைமாக்ஸ், ரிஜிஸ்திரார் ஆபீஸ் களேபரங்கள் எனப் படத்தில் வெடித்துச் சிரிக்க வைக்கும் காட்சிகள் அநேகம். கோவை சம்பந்தப்பட்ட கதை என்பதால் கொங்குத்தமிழ் வசனங்கள் அழகு. அதே சமயம் அந்தக் காந்திபார்க் சம்பந்தப்பட்ட ஆட்களும் காட்சிகளும் வலிந்து திணிக்கப்பட்டவையாகத் தெரிகின்றன.
நகைச்சுவையும், குடும்ப சென்டிமெண்டும் தமிழ் சினிமாவில் என்றும் விலைபோகும் சரக்கு. அதை உணர்ந்து அந்தக் காலப் படங்களைப் பார்ப்பது போல வந்து பாருங்கள் என்று சொல்லியடித்திருக்கிறது இந்த டீம். ஆபாசம், இரட்டை அர்த்த வசனங்கள், கெட்ட வார்த்தைகள், முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் இல்லாத ஒரு நகைச்சுவைப் படம் தான் உங்கள் சாய்ஸ் என்றால் கண்டிப்பாக இதைத் திரையரங்குகளில் பார்க்கலாம். மணிகண்டன் போலக் காசுக்குச் சிரமப்படும் மிடில் கிளாஸ் ஆசாமிகளாக ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாமென இருந்தால் அதிலும் சக்கை போடு போடும் சாத்தியம் இருக்கிறது.