
ஆஷாட நவராத்திரி வழிபாடு ஜூன் 26ம் தேதி தொடங்கி. ஜூலை 4ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. வாராகி அம்மன் துர்கை தேவியின் உக்கிரமான மற்றும் சக்தி வாய்ந்த வடிவமாகும். சப்த மாதர்களில் ஒருவராகப் போற்றப்படும் இவள், ரக்தபீஜன் என்ற அரக்கனை தோற்கடிப்பதற்காக துர்கா தேவியால் உருவாக்கப்பட்டவள். சப்த மாதர்கள் ஒவ்வொருவருமே ஒரு ஆண் கடவுளின் சக்தியை உள்ளடக்கியதாகக் கூறப்படுகிறது. வாராகி அம்மன் மகாவிஷ்ணுவின் பன்றி அவதாரத்தின் பெண்மையை குறிப்பதாகக் கூறப்படுகிறது.
லலிதா சகஸ்ரநாமத்தில் வாராகி அம்மன் லலிதாம்பிகையின் பாதுகாப்பு மந்திரியாகக் குறிப்பிடப்படுகிறார். லலிதா பரமேஸ்வரியின் சேனைகளின் தளபதியாகத் திகழும் இவள், 'தண்டினி' என்ற திருநாமத்துடனும் அருள்கிறாள். நீதியின் தெய்வமாகப் போற்றப்படும் இவள், கொடிய அரக்கனான விசுகரனை தோற்கடித்தவள் என்ற பெருமையும் பெற்றவள்.
வாராகியின் தோற்றம்: காட்டுப் பன்றியின் தலையுடன், பெண்ணின் உடலுடன் சிங்கத்தின் மீது கம்பீரமாக அமர்ந்து காட்சி தருபவள் இவள். வாராகி அம்மன் தனது திருக்கரங்களில் ஏர் கலப்பையும், உலக்கையும் கொண்டு காட்சி தருகிறாள். கருப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட இவள், எட்டு தெய்வீக ஆயுதங்களையும், சின்னங்களையும் ஏந்தி இருப்பவள். கலப்பை, திரிசூலம், கதாயுதம், சங்கு, சக்கரம், அங்குசம் மற்றும் அபய, வரத முத்திரைகளைக் கொண்டவள். அன்னைக்கு 'பஞ்சமி' என்கிற திருநாமமும் உண்டு.
வாராகி நவராத்திரியின் முக்கியத்துவம்: இவள் புராண நூல்களின்படி கருவுறுதலை உறுதி செய்வதாகவும், தாவரங்களை பசுமையாக வைத்திருப்பதாகவும், பயிர்களை பாதுகாப்பதாகவும் நம்பப்படுகிறாள். இதனால் விவசாயம் செய்ய மக்கள் இவளை வேண்டி நிற்கின்றனர். உழவுத் தொழிலுக்கும் வாராகியே தலைமை தாங்குபவள். அதனால்தான் அந்தக் காலத்தில் உழவுத் தொழில் தொடங்கும் முன்பாக அன்னை வாராகியை வழிபட்டுத் தொடங்கும் வழக்கம் இருந்தது. ஆஷாட நவராத்திரியில் பூஜைகள், ஹோமங்கள் செய்வதும், விரதங்கள் இருந்து மந்திரங்களை உச்சரிப்பதும் என இவளைக் கொண்டாடுகின்றனர்.
அஷ்ட சுகத்தை அருளுபவள்: எட்டு வகையான இன்பங்களான ஆரோக்கியம், செல்வம், அறிவு, வலிமை, செருப்பு, சந்ததி, மகிழ்ச்சி மற்றும் ஆன்மிக ஞானத்தை வழங்குபவள் எனப் போற்றப்படுகிறாள். தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சையில் உள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ராஜராஜன் வாராகி அம்மனுக்கு தனிச் சன்னிதி அமைத்து வழிபட்டான். ஆஷாட நவராத்திரியின்போது இங்கு ஒன்பது நாட்களும் நவதானியம், தேங்காய்ப்பூ, சந்தனம், குங்குமம், இனிப்புகள், காய்கறிகள், மாதுளை முத்துக்கள் என பல்வேறு பொருட்கள் கொண்டு அலங்காரம் செய்து வழிபடுகிறார்கள்.
ஆஷாட நவராத்திரியை கொண்டாடுவது எப்படி?
பூஜையைத் தொடங்குவதற்கு முன்பு விநாயகரை வழிபடவும். வாராகி அம்மனை கோயிலிலோ அல்லது வீட்டிலோ வணங்கலாம். வீட்டில் அம்மனின் படத்தை வைத்து, கோலமிட்டு, விளக்கேற்றி நவராத்திரி ஒன்பது நாட்களும் வாராகி ஸ்துதி, அஷ்டோத்திரம் மற்றும் கவசத்தைப் படித்து, வாசனை மிகுந்த பூக்கள் மற்றும் குங்குமப்பூ கொண்டு அர்ச்சிக்கலாம். ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வாராகியை வழிபட முடியாதவர்கள் பஞ்சமி நாளன்று (5வது நாள்) வழிபடுவது சிறப்பு. அத்துடன் அஷ்டமி, நவமி நாட்களிலும் வழிபடுவது சிறப்பு. அருகில் உள்ள வாராகி அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும், அர்ச்சனைகள் செய்வதும் சிறப்பு.
நிவேதனங்கள்: அன்னை வாராகிக்குப் பிடித்தமான கிழங்குகள், பூண்டு கலந்த உளுந்து வடை, தயிர் சாதம், சுண்டல், சுக்கு கலந்த பானகம், மிளகு தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலக்காய், பச்சை கற்பூரம், லவங்கம் கலந்த பால், கருப்பு எள்ளுருண்டை, தேன் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை நிவேதனம் செய்து வழிபடலாம்.
பூஜையின் பலன்கள்:
* வாராகியம்மனை பூஜிக்க, கண் திருஷ்டி, உடல் நலக்குறைவு போன்றவை நீங்கும்.
* வாராகியை வழிபட, பகை இருக்காது. துன்பங்கள் நீங்கி, எதிரிகளை வெற்றி கொள்ளவும் முடியும். அதனால்தான் அந்தக் காலத்தில் மன்னர்கள் யுத்தம் செய்வதற்கு முன்பு வாராகி அம்மனை வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
* பயத்தைப் போக்கவும், மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்காகவும் இந்த பூஜை நடத்தப்படுகிறது.
* துன்பங்கள் நீங்கி வாழ்வை இன்பமயமாக மாற்றும் வாராகி அம்மன் வழிபாடு என்று தேவி மகாத்மியம் கூறுகிறது.