
வானரக் கடவுள் ஶ்ரீ ஹனுமன் பக்தியின் முழு அடையாளமாகத் திகழ்கிறார். அஞ்சனை மைந்தனான இவர், தனது பக்தியின் புனிதம் காக்க பிரம்மச்சரிய விரதத்தை கடைப்பிடிப்பவர். ஹனுமன் பக்தியின் அடையாளம் மட்டுமல்ல, தியாகம் மற்றும் நம்பிக்கையின் மறு உருவமாக இருக்கிறார். இலங்கைப் போரில் ஸ்ரீராமர் வெற்றி பெற ஆதரவாக வானர சேனையினை வழி நடத்தியவர்.
இராமாயணத்தில் வரும் பல கதாபாத்திரங்களுக்கு ஸ்ரீராமரின் மூலம் லாபம் கிடைத்திருக்கும். அகலிகைக்கு ஸ்ரீராமரால் பாப விமோசனம் கிடைத்தது, போர் முடிந்ததும் விபீஷணனுக்கு இலங்கையின் சிம்மாசனம் கிடைத்தது, வாலி வதத்திற்குப் பின் சுக்ரீவனுக்கு கிஷ்கிந்தையின் கிரீடம் கிடைத்தது. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று கிடைக்க ஹனுமன் மட்டும் எதையும் எதிர்பாராமல் உதவி செய்து இருப்பார். அதன் பலனாக ஶ்ரீராமர் ஹனுமனுக்கு சிரஞ்சீவி வரத்தினை வழங்கி இருந்தார். சீரஞ்சிவி வரம் பெற்ற ஹனுமன் ராம நாமம் ஜபிக்கும் இடங்களில் தாம் வாசம் செய்வதாகக் கூறப்படுவது உண்டு.
ஹனுமன் கலியுகம் முடியும் வரையில் பூமியில் இருப்பார். கலியுகத்தில் அதர்மங்களை அழிக்க மஹாவிஷ்ணு கல்கி அவதாரம் எடுக்க உள்ளார். கல்கி பகவான் பூமியில் அவதரிக்கும்போது, அவருக்கு உதவ சிரஞ்சீவிகள் நீண்ட காலம் எவரும் அறியாமல் பூமியில் வாழ்ந்து கொண்டுள்ளனர். ஹனுமனும் அவ்வாறே கல்கி பகவான் அவதாரம் எடுக்கும் காலத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சில நம்பிக்கையின்படி, ஒருசில இடங்களில் ஹனுமன் அவ்வப்போது வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அதைப் பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
கந்தமாதன மலை: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள இமயமலை தொடரில் இந்த மலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இருந்துதான் ஹனுமன் சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு, இலங்கை சென்று ராம, லட்சுமணர் மற்றும் சேனை வீரர்களை உயிர்பித்தார். இமயமலையின் அடர்ந்த வனம் நிறைந்த பகுதியில் ஹனுமன் தவம் செய்வதாகக் கூறுகின்றனர். மனித நடமாட்டம் இல்லாத கந்தமாதன மலைக்கு செல்வது கடினமான செயல்.
சலசர் பாலாஜி கோயில்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள இந்தக் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சலசர் பாலாஜி கோயிலில் இருக்கும் ஹனுமன் சிலைக்கு உயிருள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர். எப்படிப்பட்ட தீய சக்தியாக இருந்தாலும் இங்குள்ள ஹனுமன் அதை விரட்டி விடுகிறார். தனக்குப் பிரியமான பாலாஜியுடன் இங்கு பக்தர்களுக்கு இவர் அருள்பாலிக்கிறார்.
சித்திரக்கூடம்: மத்திய பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேச எல்லையில் அமைந்துள்ள வனப்பகுதி இது. இராமாயண காவியத்தில் குறிப்பிடப்படும் பகுதி. இந்த வனப்பகுதியில்தான் ஸ்ரீராமர் வனவாசம் மேற்கொண்டார். இங்குள்ள ஹனுமன் தாரா நீரோடையில் அவ்வப்போது குளிக்க வருவாராம். ஸ்ரீராமர் சுற்றித் திரிந்த வனப்பகுதியில், ஸ்ரீராமரின் நினைவுகளை தேடி ஹனுமன் நடமாடிக் கொண்டிருக்கிறார் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
பூரி ஜெகன்னாத் கோயில்: ஒரிசாவில் உள்ள பூரி ஜெகன்னாதர் கோயில் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். ஹனுமன்தான் பூரி நகரின் பாதுகாவலராக இருந்தார். ஆயினும், அயோத்தியின் மீதான அதிகப் பற்றால், ஒரு நாள் அங்கு செல்ல, அன்று சமுத்திரம் பூரி நகருக்குள் புகுந்தது. இதனால் ஜெகன்னாதர் ஹனுமனை சங்கிலி கொண்டு பிடித்து வந்து பூரி நகரை சமுத்திரம் மற்றும் மற்ற பேரிடர்களிலிருந்தும் பாதுகாக்குமாறு பணித்தார். அதனால், இன்றும் பூரி நகரை ஹனுமன் காவல் செய்கிறார்.
அலிகஞ்ச் ஹனுமன் மந்திர்: லக்னோவில் உள்ள இந்தக் கோயில் பல அற்புதங்களுக்குப் பெயர் பெற்றது. நவாப்பின் மனைவி ஒருவர் இந்த ஹனுமன் கோயிலைக் கட்டினார். லக்னோ நாவாபின் குடும்பம் நோய்வாய்ப்பட்டபோது இந்த கோயிலுக்கு வந்து ஹனுமனை வழிபட்டு குணமாகினர். இங்கு வரும் நோய்வாய்ப்பட்ட மக்களை அவ்வப்போது ஹனுமன் குணமாக்குகிறார். ஹனுமனின் நடமாட்டம் உள்ள கோயிலாக பக்தர்கள் இதை உணர்ந்துள்ளனர்.
ராமேஸ்வரம்: இராமாயணத்தில் ராமேஸ்வரம் அயோத்திக்கு அடுத்ததாக அதிக புகழ் பெற்றுள்ளது. இங்குள்ள சிவலிங்கம் ஸ்ரீராமரின் கையால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அவ்வப்போது இங்கு ஹனுமன் நடமாடுவதாகக் கூறுகின்றனர். மேலும், இராம்நாடு ராஜாவின் கொடியில் ஹனுமன் இருந்து ராமேஸ்வரத்தை காப்பதாகவும் நம்புகின்றனர்.