29.07.2026 குரு பூர்ணிமா: உங்கள் வாழ்வில் வளம் சேர்க்கும் குரு அருள்!

பகவத் கீதை காட்டும் குரு சேவை மற்றும் ஆத்ம ஞானம் அடையும் எளிய முறை!
குரு பூர்ணிமா - Guru Purnima 2026
குரு பூர்ணிமா - Guru Purnima 2026AI Image
ரேவதி பாலு

சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றிருக்கும் ரேவதி பாலு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறுகதை, நாடகம், குறுநாவல், ஆன்மிகம் என்று எல்லா துறைகளிலும் தடம் பதித்து பல்வேறு பரிசுகளை வென்றிருக்கிறார். இதுவரை ஏழு சிறுகதைத் தொகுப்பு நூல்கள், இரண்டு ஆன்மிகக் கட்டுரைத் தொகுப்பு நூல் மற்றும் ஒரு பல்சுவை கட்டுரை தொகுப்பு நூல் வெளியாகியுள்ளன. இவருடைய நாடகங்கள் சென்னை வானொலி, பொதிகை தொலைக்காட்சியில் ஒலி, ஒளி பரப்பாகியுள்ளன. சமீபத்தில் ஒரு நாடகம் மெரீனா தியேட்டர்ஸால் மேடையேற்றப்பட்டது. சென்னை வானொலியில் ஐந்து வருடங்கள் தொடர்ந்து 'நகர்வலம்' நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கிறார்.

Updated on

குரு பூர்ணிமா அல்லது வியாச பௌர்ணமி, குருவை கடவுளுக்கு நிகராகக் கருதி நன்றி செலுத்தும் புனித நாள் எனக் கட்டுரை விளக்குகிறது. வேத வியாசர், கிருஷ்ணர், ஆதிசங்கரர் போன்ற மஹான்களின் வழிகாட்டுதலால் ஆத்ம ஞானம் பெறும் முக்கியத்துவம் கூறப்படுகிறது. குருவின் அருளால் அக இருள் நீங்கி, சம்சார சாகரத்தை கடக்க முடியும் என வலியுறுத்தப்படுகிறது.

நமது கலாசாரத்தில் குரு அல்லது ஆசிரியர் எப்போதும் கடவுளுக்கு நிகராகக் கருதப்படுகிறார். குரு பூர்ணிமா அல்லது வியாச பூர்ணிமா என்பது நாம் நமது குருமார்களுக்கு நன்றி செலுத்தும் நாளாகும். மாதா, பிதா, குரு தெய்வம் என்பார்கள். பிறப்பைக் கொடுத்த தாய், வளர்த்தெடுக்கும் தந்தை, அறிவை கொடுக்கும் குரு ஆகியோரின் மூலமாக தெய்வத்தைப் பார்க்கலாம் என்பதற்காக இவ்வாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்து மதத்தின் நான்கு வேதங்களான ரிக் வேதம், சாமவேதம், யஜூர் வேதம் மற்றும் அதர்வண வேதம் ஆகியவற்றை எழுதிய ஒரே குருவான வியாசருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த நாளை வியாச பௌர்ணமி என்றும் சிறப்பித்துக் கொண்டாடுகிறார்கள்.

'ரிஷிகளில் நான் வியாசராக இருக்கிறேன்' என்கிறார் பகவான் கிருஷ்ணர். வியாசரை, அவர் வேதங்களை தொகுத்து வழங்கியதால் வேத வியாசர் என்று அழைப்பதுண்டு. வேத வியாசர் அவதரித்த நாள் ஆதலால் ஆஷாட மாத பௌர்ணமி வியாச பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது.

நேபாளத்தில் இந்தப் பண்டிகை ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. பௌத்தர்களும் குருபூர்ணிமாவை புத்த பூர்ணிமா என்று சிறப்பித்து வழிபடுகிறார்கள். இந்த நாளில் சீடர்கள் கடவுளுக்கு நிகரான தங்கள் குருக்களை வழிபட்டு மரியாதை செலுத்துகிறார்கள். ஜைனர்கள் ஸ்ரீ மகாவீரரையும், பௌத்தர்கள் ஸ்ரீ புத்தரையும் வணங்குகிறார்கள். இந்துக்கள் வேத வியாசர் என்னும் மகரிஷியை வணங்குகிறார்கள்.

குரு பூர்ணிமா - Guru Purnima 2026
குரு பூர்ணிமா - Guru Purnima 2026AI Image

மாணவர்கள் தங்களுக்குக் கல்வி கற்று கொடுத்த குருவை வழிபடுவதுடன் தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணர், வேதங்களை தொகுத்த வேத வியாசர் உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதிசங்கரர், மத்வர், மற்றும் இராமானுஜர் போன்றவர் களையும் குருபூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர்.

தன்னையறிய விரும்புவர்களுக்கு, அதைப் பற்றிய தேடலில் ஈடுபடுகிறவர்களுக்கு குருவிடம் அடைக்கலம் புகுமாறும் குருவிற்கு சேவை செய்யும் மாறும் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறுகிறார். ஸ்ரீ கிருஷ்ணரே அவதார புருஷராக இருந்தபோதிலும் சாந்தீபினி என்னும் குருவிடம் குருகுலவாசம் செய்து தானே ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கிறார். இதை விளக்கும் விதமாக பகவத் கீதையில் ஒரு பிரசித்தி பெற்ற ஸ்லோகம்.

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஷ்னேன ஸேவயா

உபதேஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ்தத்வதர்ஷின:

குருவிடம் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தும், குருவிடம் கேள்விகள் கேட்டும் அவருக்கு பணிவிடை செய்தும் இந்த ஞானம் என்பது என்ன என்பதை அறிவாயாக. அப்போது உண்மை ஞானத்தின் சத்பொருளை (பிரம்மத்தை) எய்திய அந்த ஞானிகள், ஞானோபதேசத்தை உனக்கு நல்குவார்கள் என்பது இதற்குப் பொருள்.

இதையும் படியுங்கள்:
காளித் தாயின் தரிசனம் முதல் கண்ணனின் கருணை வரை; விவேகானந்தர் வாழ்க்கையின் அதிசயப் பக்கங்கள்!
குரு பூர்ணிமா - Guru Purnima 2026

ஆத்ம ஞானமானது ஒருவர் தன்னுடைய சுய முயற்சியால் அடைந்து விட முடியும் என்று நினைத்துப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு சூட்சுமமாகவும் அறிவு நிலைக்குக்கு அப்பாற்பட்டும் இருக்கிறது. மனிதர்களின் அக இருளை (அஞ்ஞானத்தை) நீக்கி (மெய்ஞானத்தை) ஆத்ம ஞானத்தை ஓளிர வைப்பவர்தான் குரு.

இவ்வுலக வாழ்க்கையில் இன்ப துன்பங்களில் உழன்று சம்சார சாஹரத்தை நீந்தி கடக்க முடியாமல் அவதிப்படும் மாந்தர்களை கருணையோடு கரையேற்றவே மஹான்கள் அவதரித்து குருவாக வழிகாட்டுகிறார்கள். குரு பூர்ணிமா நம் மனதிலிருந்து இருளை அகற்றும் ஆசிரியர்களைப் போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.

இந்து மதத்தின் அனைத்து புனித நூல்களிலும் குருவின் இன்றியாமையைப் பற்றியும் குருவிற்கும் சிஷ்யனுக்கும் இருக்கும் அசாதாரணமான பந்தத்தையும் பற்றிக் கூறப்படுகிறது. நம் பாரம்பரியத்தில் தெய்வத்திற்கும் முன்பாக குருவை வைத்து கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றும் உரிமை யாருக்கு என்பது தெரியுமா?
குரு பூர்ணிமா - Guru Purnima 2026

இந்த பாரத புண்ணிய பூமியில் எத்தனையோ மஹான்கள் அவதார புருஷர்களாக இந்த மண்ணில் பிறந்திருந்த போதிலும், மனிதர்களோடு கலந்து பழகி, அவர்களோடு ஒருவராக எளிமையாக வாழ்ந்து, அதே சமயம் அவர்கள் ஆன்மிகத்தில் முன்னேற்றமடையவும் ஒரு குருவாக இருந்து வழி காட்டியிருக்கிறார்கள். குருவுக்குகந்த குரு பூர்ணிமா இந்த வருடம் 29.07.26 (புதன்கிழமை) அன்று வருகிறது. அன்று நாம் வணங்கும் மகானை நினைத்து அவர் படத்துக்கு ஒரு மலராவது சாற்றி வணங்குவது நம்மை என்றென்றும் நல்ல நிலைமையில் வைக்கும்.

logo
Kalki Online
kalkionline.com