
நாம் அனைவருக்கும் ஶ்ரீராமர் பிறந்த பூமியான அயோத்தியை பற்றி தெரியும். உலகின் மிகவும் பழமையான நகரான அயோத்திக்கு இணையாக பழமை கொண்ட நகரம் இந்தியாவை தவிர வேறு எங்கும் பார்க்க முடியாது. சூரிய குலத்தை சேர்ந்த மன்னர்கள் பல நூற்றாண்டுகளாக அயோத்தியை தலைநகராகக் கொண்டு சிறப்பாக ஆட்சி செய்தனர். ஶ்ரீராமரும் ஆட்சி செய்த புண்ணிய பூமி அது.
தாய்லாந்து நாட்டிலும் ஒரு அயோத்தி உள்ளது என்பது தெரியுமா?
ராமர் பிறந்த சூரிய குலத்தில் இருந்து தென்னாடு வந்து ஆட்சி செய்தவர்கள் சோழ மன்னர்கள். இது பற்றி சோழ மன்னர்கள் மெய்க் கீர்த்திக்களிலும், கல்வெட்டுக்களிலும் சோழ உலாக்கள் மூலமாக தெரிவித்துள்ளனர். சோழ நாட்டின் ஒரு பகுதியாக சயாம் (தாய்லாந்து) நாடும் இருந்தது. மற்ற இந்திய அரசர்கள் தாய்லாந்து நாட்டை ஆட்சி செய்யவில்லை. சோழர்கள் காலத்தில் ராமாயணம் தமிழ் நாட்டில் பரவலாக புகழ் பெற ஆரம்பித்தது. சோழர்கள் தங்களை சூரிய குலத்தினர் என்று பெருமை கொண்டனர். அதனால் தாய்லாந்து மக்களிடமும் அவர்கள் ராமாயணத்தை கொண்டு சென்றிருக்கலாம்.
ராமாயணத்தின் தாக்கம் தாய்லாந்து முழுக்க உள்ளது. ராமாயணத்தை அங்குள்ள மக்கள் 'ராமக்கியன்' என்று அழைக்கின்றனர். திருவிழாக் காலங்களில் ராமாயண நாடகம் அங்கு கட்டாயமாக இடம்பெறுகிறது. தாய்லாந்தில் மூன்று நதிப்படுகையில் அருகே அமைந்துள்ள நகரை அயோத்தி என்று முற்காலத்தில் பெயர் சூட்டியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக தாய்லாந்தின் தலைநகராக அது இருந்துள்ளது.
10 ஆம் நூற்றாண்டின் சில ஆவணங்களின் படி அயுத்தயா நகரம் அயோத்தி ஸ்ரீ ராம தேப் நகோன் (அயோத்தி ஶ்ரீ ராம தேவ நகரம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. 1350ஆம் ஆண்டு ராமதபோடி என்பவர் அயுத்தயா நகரத்தில் தனது சாம்ராஜ்ஜியத்தை நிறுவி, அயுத்தயா ராஜ்ஜியத்தின் அரசராக முடி சூட்டிக் கொண்டார். ராமதபோடி அரசனை தாய்லாந்து ஆய்வாளர்கள் சிலர் சோழ வம்சத்தில் வந்த இளவரசன் என்றும், நாடு கடத்தப்பட்ட சீன இளவரசன் என்றும் கருத்து கூறுகின்றனர். எது ஆயினும் அவர் தமிழ் மரபினை பின்பற்றினார். அவரது வம்சத்தினர் பெயரில் ராமர் பெயர் நிச்சயம் இருக்கும். அவரது மகன் பெயர் கூட ராமேசுவான். அந்த வம்சத்து ஒரு இளவரசியின் பெயர் சூர்யோதை என்பதாகும்.
இந்த மன்னர்கள் புத்த மதத்தினராக இருந்த போதிலும், தமிழ் ஹிந்து கலாச்சாரத்தை பின்பற்றினார்கள். இவர்கள் பட்டாபிஷேகம் செய்யும் வேளையில் தேவாரம் திருவாசகத்தை தழுவிய மந்திரங்கள் தமிழ் வம்சவளியில் வந்த தாய்லாந்து பிராமணர்களால் ஓதப்படுகிறது. இந்தியாவில் ராமர் கடவுளாகக் கருதப்படுகிறார். அதே சமயம் தாய்லாந்தை ஆட்சி செய்யும் சக்ரி வம்ச மன்னர்கள் தங்கள் பெயர்களில் 'ராமா' என்று சேர்த்துக் கொள்கின்றனர். தாய் மக்களும் ராமா என்று தான் அரசர்களை அழைக்கின்றனர்.
பல நூற்றாண்டுகளாக அயுத்தயா பெருமை வாய்ந்த நகராக இருந்துள்ளது. தலைநகராகவும் வர்த்தக நகராகவும் பெரிய அரண்மனைகள், பிரம்மாண்டமான கோயில்களுடன் பிரமிக்க வைக்கும் வகையில் இருந்துள்ளது. அன்றைய காலத்தின் ஆசியாவின் பெரிய மூன்று நகரங்களில் அயுத்தயாவும் ஒன்றாக இருந்துள்ளது. இந்தியாவின் விஜயநகரத்தோடு அயோத்தி ராஜ்ஜியம் தொடர்பில் இருந்துள்ளது. புகழ்பெற்ற அயுத்தயாவை 1767 இல் பர்மியர்கள் தாக்கி அழித்து தீக்கிரையாக்கினர். அதன் பிறகு இன்று வரையில் பாங்காக் தாய்லாந்தின் தலைநகரகமாக உள்ளது.
இன்று அயுத்தயா நகரம் சிதிலமடைந்து காணப்படுகிறது. பல அரண்மனைகள், கோயில்கள், வீடுகள் அனைத்தும் இடிந்து உள்ளன.
தாய்லாந்து மக்கள் புத்த மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் கூட அங்கு ஹிந்துக்களின் மரபே அனைத்திலும் பின்பற்றப்படுகிறது. அங்கு புத்த மதத்தினரால் ஹிந்து கடவுள்கள் வழிபடப்படுகின்றனர். ஹிந்து மத புராணங்கள் அங்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன். இந்தியாவின் அயோத்தி மீண்டும் புகழ்பெற்றது போல தாய்லாந்தின் அயுத்தயாவும் புகழ் பெற வேண்டும்.