ஹோமப் பிரசாத ரட்சையின் ஆன்மீக ரகசியமும் அறிவியல் உண்மைகளும்!

நெற்றியில் ரட்சை அணிவதால் கிடைக்கும் அற்புத நன்மைகள் என்ன தெரியுமா?
ஹோம ரட்சை - Homam Raksha in Tamil
ஹோம ரட்சை - Homam Raksha in Tamil
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

ஹோமம், யாகம் போன்றவைகள் காலம் காலமாக வீடுகளிலும் கோவில்களிலும் நடத்தப்பட்டு வருகின்றது. உலக நன்மைக்காக நடத்தப்படும் யாகங்கள் கோவில்கள் அல்லது பொதுவெளியில் மட்டுமே நடத்தப்படும். அதுவே குடும்பத்தின் நலத்திற்காகவும், தனி நபருக்கு ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்காகவும் நடத்தப்படும் ஹோமங்கள் வீடுகளிலும் கோவில்களிலும் நடத்தப்படுவதுண்டு.

ஹோமம் என்பது:

அக்னி பகவானை சாட்சியாக வைத்து, குறிப்பிட்ட தேவதைகளை மந்திரங்கள் ஓதி நெய், மூலிகைகள் மற்றும் நைவேத்தியங்களை அக்னியில் அர்ப்பணிக்கும் வழிபாடாகும். ஹோமம் செய்வதன் நோக்கம் கிரக தோஷங்களைப் போக்கவும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் பெறவும், குடும்பத்தில் அமைதியும் சந்தோஷமும் நிலைக்கவும் செய்யப்படுகின்றன.

ஹோம பிரசாதம் ரக்ஷை (ஹோம பஸ்மம்) என்பது ஹோமத்தின் நிறைவில் அக்னி குண்டத்தில் இருந்து சேகரிக்கப்படும் புனிதமான சாம்பல் ஆகும். ஹோமத்தின் போது வளர்க்கப்படும் புனிதமான நெருப்பில் இருந்து (அக்னி) பெறப்படும் கருகிய சாம்பல் அல்லது மையை 'ரக்ஷா' என்றும் அழைப்பார்கள். ரக்ஷா என்ற வடமொழிச் சொல்லுக்கு 'காப்பது' அல்லது 'பாதுகாப்பு' என்று பொருள்.

ஹோமத்தின் சூட்சமம்:

அக்னியில் அர்ப்பணிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் இறைவனைச் சென்றடைந்து அதற்குரிய பலன்கள் நம்மை வந்தடையும் என்பதே ஹோமம் செய்வதன் சூட்சுமமாகும். கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லக்ஷ்மி குபேர ஹோமம், சண்டி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், புத்திரகாமேஷ்டி யோகம் என பலவகையான ஹோமங்கள் உள்ளன. ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு வகையான பலன்களைப் பெறுவதற்காக நடத்தப்படுகிறது.

அறிவியல் பூர்வமான காரணங்கள்:

ஹோம அக்னியில் இருந்து வெளிப்படும் உயர் அதிர்வு அலைகள் மற்றும் ஆற்றலை இந்த சாம்பல் துகள்கள் ஈர்த்து வைத்திருக்கின்றன. இதனை உடலில் பூசும்போது அந்த ஆற்றல் நம் உடலுக்கு கடத்தப்படுகிறது.

ஹோம ரட்சை - Homam Raksha in Tamil
ஹோம ரட்சை - Homam Raksha in Tamil

ரட்சை பொதுவாக இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள 'ஆக்ஞா' சக்கரத்தில் (பிட்யூட்டரி மற்றும் பீனியல் சுரப்பிகள் உள்ள இடம்) வைக்கப்படுகிறது. அங்கு லேசான அழுத்தம் கொடுத்து வைக்கும் பொழுது நரம்பு மண்டலம் தூண்டப்பட்டு மன ஒருமுகப்பாடு மற்றும் ஞாபக சக்தி அதிகரிக்கிறது.

தூய சாம்பலுக்கு காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் குணம் உண்டு. நெற்றியில் இதனை பூசும்போது, அது தலைப்பகுதியில் உள்ள தேவையற்ற நீர் மற்றும் ஈரப்பதத்தை உறிஞ்சி தலைவலி மற்றும் சளி பிடிப்பதைத் தடுக்கிறது.

மூலிகைகள் எரிந்து உருவான சாம்பலில் கிருமிநாசினி (Antiseptic) பண்புகள் உள்ளன. இது சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்து, சரும தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

ஹோமத்தில் ஓதப்படும் சக்திவாய்ந்த மந்திரங்களின் அதிர்வுகளும், மூலிகைகளின் மருத்துவ குணங்களும், சக்தியும் இந்த ரக்ஷையில் நிறைந்திருக்கும். இதனை நெற்றியில் திலகமாக அணிந்து கொள்ளும் பொழுது, அது தீய சக்திகள், கண் திருஷ்டி மற்றும் எதிர்மறை ஆற்றல்களில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் அரணாகச் செயல்படுகிறது.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
ஹோம ரட்சை - Homam Raksha in Tamil

மருத்துவ குணங்கள்:

ஹோம குண்டத்தில் போடப்படும் மூலிகைகள், நெய் மற்றும் சமித்துகள் (குச்சிகள்) எரிந்து சாம்பல் ஆவதால் இந்த ரட்சையில் இயற்கையான கிருமிநாசினி குணங்கள் உள்ளன. அத்துடன் அவற்றின் நுட்பமான ஆன்மீக ஆற்றலும் இந்த ரட்சையில் தங்கியிருக்கும். பாரம்பரியமாக இது மன அமைதியைத்தரவும், பயத்தைப் போக்கவும் உதவும் எளிய மருந்தாகக் கருதப்படுகிறது.

அணியும் முறை:

தினமும் குளித்து முடித்த பின்பு இந்த ஹோம ரட்சையை நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்வது ஆன்மீக பலத்தை பெருக்கும். இதனை வழக்கமாக வலது கை மோதிர விரலால் தொட்டு, நெற்றியில் (புருவ மத்தி அல்லது ஆக்ஞா சக்கரத்தில்) இட்டுக்கொள்ள வேண்டும். குளித்து முடித்த பின் தூய்மையான உடலோடும், இறை சிந்தனையோடும் இதனை அணிவது அதிக பலனைத் தரும்.

ஹோம பிரசாதமாகப் பெறப்பட்ட ரட்சையை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்து பூஜை அறையில் வைத்து வழிபடலாம். வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை நீக்குவதற்கு ஒரு சிறிய மஞ்சள் அல்லது சிகப்புத் துணியில் இந்த ஹோம சாம்பலை (ரட்சையை) போட்டு முடிந்து, வீட்டின் பிரதான நிலை வாசலின் மேற்பகுதியில் கட்டுவது மரபாகும். இறைவனின் முழுமையான அருளையும், நேர்மறை ஆற்றலையும் நம்முடன் வைத்திருக்க உதவும் ஒரு உன்னதமான பாதுகாப்பு கவசமாக, ஆன்மீகப் பொருளாக இந்த ஹோமப் பிரசாத ரட்சை விளங்குகிறது.

இதையும் படியுங்கள்:
யார் பார்த்தாலும் வியந்து போற்றும் புத்தம் புதிய தீபாவளி கோல டிசைன்கள் இதோ!
ஹோம ரட்சை - Homam Raksha in Tamil