சஷ்டி விரதம் ஒரு நாள் மட்டும் இருப்பது எப்படி? சூரசம்ஹார நாள் வழிபாடும் பலன்களும்!

முழு விரதம் இருக்க இயலாதவர்களுக்கான சாத்வீக வழிபாட்டு முறைகள் மற்றும் மௌன விரதத்தின் சிறப்பு.
சஷ்டி விரதம் - Murugan worship
சஷ்டி விரதம் - Murugan worshipImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

கந்த சஷ்டி விரதத்தை பக்தர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையில் அனுஷ்டிப்பார்கள். அந்த வகையில் கந்த சஷ்டி விரதத்தை ஒரு நாள் விரதமாக சூரசம்ஹார நாளில் மட்டும் எப்படி அனுசரிப்பது என்று பார்ப்போமா?

கந்த சஷ்டி விரதம் தீபாவளி பண்டிகைக்கு பின்பு வரும் 6 நாட்கள் நடைபெறும். திருச்செந்தூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற திருத்தலங்களிலும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கந்தனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாக சொல்லப்படுவது கந்த சஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்தால் முருகனே குழந்தையாக வந்து பிறப்பார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

வசிஷ்ட முனிவரிடம் முசுகுந்தச் சக்கரவர்த்தி கந்த சஷ்டி விரதத்தைப் பற்றி கேட்டறிந்து அதை கடைபிடித்து பெரும்பயன் அடைந்ததாக சொல்வதுண்டு. இந்த விரதத்தை முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்துள்ளனர்.

மகா கந்த சஷ்டி விழாவில் 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சூரசம்ஹாரம் நடக்கும் 6வது நாளன்று (சஷ்டி திதி) மட்டும் ஒரு நாள் முழுவதும் விரதம் கடைபிடித்து முருகனின் அருளைப் பெறலாம். இந்த வருடம் மகா கந்த சஷ்டியின் சூரசம்ஹார நாள் நவம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை அன்று வருகிறது.

விரத தொடக்கம் மற்றும் காலை வழிபாட்டு முறை:

அதிகாலையில் எழுந்து நீராடி விட்டு அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் என இட்டுக்கொண்டு, சுத்தமான உடை அணிந்து வீட்டில் முருகனின் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்திற்கு தீபம் ஏற்றி கந்த சஷ்டி கவசம் மற்றும் 'ஓம் சரவணபவ நமஹ' போன்ற மந்திரங்களைச் சொல்லி வழிபட வேண்டும். முருகனின் முக்கிய ஆயுதமான வேலை வீட்டில் வைத்து வழிபடுபவர்கள் வேலுக்கு செவ்வரளி, முல்லை போன்ற மலர்கள் சூட்டி, சந்தனம், குங்குமம் வைத்து, முடிந்தால் பூக்கள் அல்லது குங்குமம் கொண்டு வேலுக்கு அர்ச்சனை செய்து மனம் ஒன்றி வழிபடலாம்.

இதையும் படியுங்கள்:
ஆறாகப் பிரியும் அசுரனின் அகந்தை! கந்த சஷ்டி சொல்லும் வியக்கத்தக்க ரகசியம்!
சஷ்டி விரதம் - Murugan worship

நிர்பல விரதம்:

நிர்பல விரதம் அல்லது நிர்ஜல விரதம் என்பது சூரசம்ஹாரம் நடைபெறும் சஷ்டி நாளில், அன்று முழுவதும் உணவு மற்றும் தண்ணீர் என எதுவும் எடுத்துக் கொள்ளாமல் முழுமையாக உபவாசம் (பட்டினி) இருப்பதைக் குறிக்கும். உடல்நிலை காரணமாக முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்கள் மட்டும் உட்கொள்ளலாம்.

அதுவும் முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் எளிய சாத்வீக உணவை (அசைவம், வெங்காயம், பூண்டு போன்றவை இல்லாமல்) எடுத்துக்கொள்ளலாம். முக்கியமாக அன்றைய நாளில் சில மணி நேரமாவது யாருடனும் பேசாமல் மௌனமாக இருப்பது (மௌன விரதம்) மன அமைதியையும், விரதத்தின் பலனையும் அதிகரிக்கும்.

மந்திரங்களும் வழிபாடும்:

நாள் முழுவதும் முருகனின் சிந்தனையில் இருப்பது சிறப்பு. காலையிலும் மாலையிலும் திருப்புகழ், வேல்மாறல், கந்த சஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம், ஸ்கந்தகுரு கவசம், சண்முகக் கவசம் போன்ற துதிப்பாடல்களை பாராயணம் செய்யலாம். ஆறெழுத்து மந்திரமான "ஓம் சரவணபவ" என்ற மந்திரத்தை 108 முறை மனதுள் உச்சரித்து தியானிப்பது சிறந்த பலனைத்தரும்.

மாலை நேர சூரசம்ஹார தரிசனம் மற்றும் விரத நிறைவு:

மாலையில் அருகிலுள்ள சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும் முருகன் கோவிலுக்குச் சென்று சூரசம்ஹார நிகழ்வைக் காண்பது மற்றும் வழிபடுவது நல்லது. இயலாதவர்கள் வீட்டிலேயே சூரசம்ஹாரம் நிறைவுற்ற பிறகு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப் பிரார்த்தனை செய்து வழிபாட்டை முடிக்க வேண்டும். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு அல்லது அடுத்த நாள் காலையில் இறைவனை தரிசனம் செய்துவிட்டு பச்சரிசி சாதம், தயிர் போன்ற எளிய சைவ உணவை முருகனுக்கு நைவேத்தியம் செய்துவிட்டு பின்பு அந்த எளிய உணவை உட்கொண்டு விரதத்தை முடிக்கலாம்.

சஷ்டி விரதம் - Murugan worship
சஷ்டி விரதம் - Murugan worshipImage credit: Gemini

பாவாடை நைவேத்திய தரிசனம்:

மகா கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளில், சூரனை வதம் செய்த முருகப் பெருமானின் சினம் தணிந்து குளிர்வடையச் செய்வதற்காக 100 படி அரிசி கொண்டு சாதம் வடித்து, அதில் தயிர் ஊற்றிக்கிளறி சுவாமிக்கு பிரம்மாண்டமாக படைக்கப்படும் வழிபாடே "பாவாடை நைவேத்திய தரிசனம்" ஆகும்.

பாவாடை என்ற சொல்லுக்கு நிலத்தில் விரிக்கும் துணி அல்லது சேலை என்று பொருள். கோவில்களில் சுவாமி சன்னதிக்கு முன்பாக தரையில் பெரிய துணியை விரித்து அதன் மேல் பெருமளவில் தயிர் அன்னத்தைக் கொட்டி முருகனுக்கு நைவேத்தியமாகப் படைப்பதால் இப்பெயர் பெற்றது. சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் கோவில்களில் நடைபெறும் இந்த பிரம்மாண்ட பாவாடை நைவேத்தியத்தை நேரில் தரிசனம் செய்து, அந்த பிரசாதத்தைப் பெற்ற பின்னரே சிலர் தங்களது சஷ்டி விரதத்தை முறைப்படி நிறைவு செய்கிறார்கள்.

இந்த விரதத்தை யார் இருக்கலாம்:

உடல் ஆரோக்கியம் நன்றாக உள்ளவர்களும், அதிக பக்தி மற்றும் மனஉறுதி கொண்டவர்கள் மட்டுமே இந்த முழுமையான விரதத்தை இருக்கவேண்டும். வயதானவர்கள், சிறுபிள்ளைகள், உடல்நிலை சரியில்லாதவர்கள் என்றால் ஒருவேளை சைவ உணவை எடுத்துக்கொண்டு விரதம் இருப்பது சிறந்தது.

விரத பலன்:

வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, ஆரோக்கியம், நல்வாழ்வு, புகழ், செல்வம், ஆயுள் என வேண்டிய அனைத்து நட்பேறுகளும் கிட்டும்.

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
சஷ்டி விரதம் - Murugan worship