

ஆறுநாள் விரதம், ஏழாம் நாள் திருக்கல்யாணம் என்று கொண்டாடப்படும் கந்த சஷ்டியின் பின்னணியில் ஒரு சுவாரஸ்யமான ஆன்மிகச் செய்தி ஒளிந்திருக்கிறது. முருகப்பெருமான் சூரபத்மனை அழித்தாரா அல்லது அவனுக்கு வேறொரு நிலையை அளித்தாரா? தெரிந்துகொள்வோமா?
தமிழர்களின் வழிபாட்டில் முருகப்பெருமானுக்கு என்று தனி இடம் உண்டு. ஆறுபடை வீடுகளிலும், எண்ணற்ற முருகன் கோயில்களிலும் பக்தர்கள் குவியும் புனிதமான காலம் கந்த சஷ்டி விரதக் காலம். தீபாவளிக்குப் பிறகு வரும் இந்த விரதம், இந்த ஆண்டு நவம்பர் 10ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி சூரசம்ஹாரத்துடன் நிறைவடைகிறது.
நவம்பர் 16ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இந்த ஆறு நாள் விரதத்தின் உண்மையான தத்துவம் என்ன? சூரசம்ஹாரத்தின் பின்னணியில் இருக்கும் வியப்பூட்டும் தகவல்கள் என்னென்ன?
'ஷஷ்டி' என்ற வடமொழிச் சொல்லுக்கு ஆறு என்று பொருள். அமாவாசைக்குப் பிறகு வரும் வளர்பிறையின் ஆறாவது திதியே சஷ்டி. ஒவ்வொரு மாதமும் சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஆனால் ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விரதம், முருகப்பெருமானின் சூரசம்ஹாரத்தை நினைவுகூரும் வகையில் ஆறு நாட்கள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
கந்த புராணத்தின்படி, சூரபத்மன் என்ற அசுரன் கடுமையான தவங்கள் செய்து வரங்களைப் பெற்று, தேவர்களுக்குத் துன்பம் விளைவித்தான். அவனது கொடுமைகளிலிருந்து தேவர்களைக் காப்பாற்ற சிவபெருமானின் திருவருளால் முருகப்பெருமான் அவதரித்தார். தேவர்களின் படைக்குத் தலைமை ஏற்று அசுரர்களுடன் ஆறு நாட்கள் போரிட்டார்.
இந்தப் போரின் இறுதியில் சூரபத்மன் மாமரமாக உருமாறி மறைந்தான். முருகப்பெருமான் தனது வேலால் அந்த மாமரத்தை இரண்டாகப் பிளந்தார். அப்போது ஒரு பகுதி மயிலாகவும், மற்றொரு பகுதி சேவலாகவும் மாறியது. அவற்றை அழிக்காமல், மயிலைத் தனது வாகனமாகவும் சேவலைத் தனது கொடிச்சின்னமாகவும் ஏற்றுக்கொண்டார். பகைவனுக்கும் அருள்புரியும் முருகப்பெருமானின் கருணைக்கு இதைவிடச் சிறந்த எடுத்துக்காட்டு என்ன இருக்கமுடியும்?
இங்கேதான் சூரசம்ஹாரத்தின் ஆழமான தத்துவம் வெளிப்படுகிறது. தீமையை அழிப்பது மட்டுமல்ல, தீய சக்தியைக்கூட நல்வழியில் மாற்ற முடியும் என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது. மனிதனுக்குள் இருக்கும் அகந்தை, கோபம், பொறாமை போன்ற குணங்களை அழித்து நல்ல சிந்தனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே இதன் ஆன்மிகப் பாடம்.
கந்த சஷ்டி நாட்களில் பக்தர்கள் கந்த சஷ்டி கவசம், கந்தபுராணம், திருப்புகழ் ஆகியவற்றைப் பாராயணம் செய்கின்றனர். விரத முறைகள் குடும்ப வழக்கத்திற்கும் உடல்நிலைக்கும் ஏற்ப மாறுபடும். சிலர் ஆறு நாட்களும் ஒருவேளை உணவு உட்கொள்கின்றனர்; சிலர் பழங்கள், பால் போன்றவற்றை மட்டும் எடுத்துக்கொள்கின்றனர். உணவைக் குறைப்பதைவிட மனதைக் கட்டுப்படுத்தி இறைச்சிந்தனையில் ஈடுபடுவதும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
ஆறுபடை வீடுகளின் தனிச்சிறப்பு!
கந்தசஷ்டி வழிபாட்டில் திருச்செந்தூருக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு. மற்ற ஐந்து படை வீடுகளும் முருகப் பெருமானின் வெவ்வேறு திருக்கோலங்களையும் அருள் சிறப்புகளையும் எடுத்துரைக்கின்றன . திருப்பரங்குன்றம் திருமணம் நடைபெற்ற தலமாகவும், திருச்செந்தூர் சூரனை வென்ற திருத்தலமாகவும் போற்றப்படுகின்றன.. பழநியில் தண்டாயுதபாணியாகவும் , சுவாமி மலையில் தந்தைக்கே பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த ஞானகுருவாகவும் முருகப் பெருமான் அருள்பாலிக்கிறார்.
திருத்தணியில் சாந்தஸ்வரூபமாகவும், பழமுதிர் சோலையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்த திருக்கோலத்திலும் காட்சி தருகிறார். இந்த ஆறு தலங்களும் முருக வழிபாட்டின் ஆழத்தையும் தமிழர்களின் ஆன்மிகப் பாரம்பரியத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.
ஆறுபடை வீடுகளையும் ஒரே பயணத்தில் தரிசிக்க வேண்டும் என்பது பல பக்தர்களின் வாழ்நாள் விருப்பமாக உள்ளது. கந்தசஷ்டி காலத்தில் இந்த திருத்தலங்களை நினைத்து வழிபடுவதும் சிறப்பாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு தலத்திற்கும் ஒரு தனித்த புராணப் பின்னணியும் வழிபாட்டு மரபும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பெசன்ட் நகர் அறுபடை வீடு முருகன் கோவில்!
ஆறுபடை வீடுகளுக்கும் நேரில் சென்று தரிசிக்க வேண்டும் என்பது முருக பக்தர்கள் பலரின் விருப்பம்.. ஆனால் வயது, உடல்நிலை, பயணச் சூழல் போன்ற காரணங்களால் ஆறுதிருத்தலங்களுக்கும் செல்ல முடியாதவர்களுக்கு சென்னையிலேயே ஒரு சிறப்பான வாய்ப்பு அமைந்துள்ளது.
பெசன்ட் நகர் கலாஷேத்ரா காலனியில் அமைந்துள்ள அறுபடை வீடு முருகன் கோவிலில் பழநி, திருச்செந்தூர், சுவாமிமலை /திருப்பரங்குன்றம்,திருத்தணி, பழமுதிர் சோலை ஆகிய ஆறு திருத்தலங்களின் முருகப் பெருமான் சந்ததிகளையும் அங்கே நடக்கும் வழிபாட்டையும் ஒரே வளாகத்தில் தரிசிக்கலாம்.
காஞ்சி மஹா பெரியவா ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் ஆசியுடன் உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் 2002ம்ஆண்டு குடமுழுக்கு கண்டது.
ஆறுதிருத்தலங்களுக்கும் பயணம் செய்ய இயலாத பக்தர்கள் ஒரே இடத்தில் ஆறுபடை வீடுகளின் முருகப் பெருமானை வணங்கி அருள்பெற ஏற்ற சிறப்புமிக்க திருத்தலமாக இது விளங்குகிறது.இக்கோவில் கடற்கரை ஓரமாக இருப்பதால் சூரசம்ஹார நிகழ்வும் வெகு விமரிசையாக நடைபெறும்.
திருச்செந்தூரில் கடற்கரையில் நடைபெறும் சூரசம்ஹாரக் காட்சி உலகெங்கும் உள்ள முருக பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த கந்த சஷ்டியில் நம் அகந்தையை ஒழித்து, அன்பையும் பொறுமையையும் வளர்ப்போம். வேலுண்டு வினையில்லை; மயிலுண்டு பயமில்லை!