நரசிம்மரின் உக்கிரம் தணித்த பானகம் - தயாரிப்பது எப்படி?

Lord Narasimha
Lord Narasimha
Published on

நரசிம்மருக்கு உகந்த நைவேத்தியம் பானகம் ஆகும். இரணியாட்சனை அழித்த பின்பும் நரசிம்மர் உக்கிரம் தணியாமல் இருந்தார். மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் செய்து அவன் பெற்ற வரத்தின்படியே அவனைக் கொன்று அவனுடைய குடலை மாலையாக அணிந்து கொண்டார். பின்னர் தன்னுடைய நாக்கை அடிக்கடி வெளியே நீட்டி பயங்கரமாக கர்ஜனை செய்தவாறே இரணியனின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவருடைய கண்களை யாராலும் பார்க்க இயலவில்லை. கண்களில் அவ்வளவு உக்கிரம் தகித்துக் கொண்டிருந்தது. அவருடைய கோபம் அடங்கியபாடில்லை. நரசிம்மப் பெருமாளைக் குளிர்விக்க பானகம் நைவேத்தியமாகப் படைக்கப்பட்டது. அதுவே மரபாக இருந்து வருகிறது.

பானகம் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடைய ஒரு பிரசாதம். ஆயுர்வேத மருத்துவத்தில் பானகம் “பானக கல்பனா” என்று அழைக்கப்படுகிறது. அருந்தியவுடன் உடலுக்கு உடனடி சக்தியைத் தரக்கூடிய ஒரு சக்தி மிக்க பிரசாதம் பானகம். கோடை வெப்பம் மற்றும் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து நம்மைக் காப்பாற்றும் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பானம் பானகம். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி பானகத்தை நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால் பல நன்மைகள் விளையும் என்பது ஐதீகம்.

ஆந்திரமாநிலத்தில் உள்ள பல கோவில்களில் ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராமர் ஸ்ரீசீதாதேவியின் திருமணத்தைக் கொண்டாடும் கல்யாணோத்ஸவம் நடைபெறுகிறது. அன்றைய நாளில் ஸ்ரீராமபிரானுக்கு பானகம் சமர்ப்பிப்பது தொன்று தொட்டு கடைபிடிக்கப்படும் ஒரு வழக்கமாகும்.

ஆந்திர மாநிலத்தில் மங்களகிரி மலை மீது பானக நரசிம்மர் குடைவரைக் கோயில் உள்ளது. பானக நரசிம்மர் கோவிலில் பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கர்ப்பக்கிரகத்தில் சிலாமூர்த்தம் இல்லாமல் உட்சுவற்றில் நரசிம்ம ஸ்வாமியின் முகம் மட்டும் வாய் திறந்த நிலையில் இருக்கும். இத்தலத்தில் நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் மிகவும் விசேஷமாகும். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கேற்ப ஒரு குடம் அல்லது அரை குடம் என்று கோயிலில் சொல்லி தயாரித்து நைவேத்தியம் செய்வர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நைவேத்தியம் செய்யும் பானகத்தை ஒரு சங்கினால் நரசிம்மப் பருமானின் வாயில் விட குடிப்பதுபோல் ‘களக்... களக்” என்ற சப்தத்துடன் பானகம் உள்ளே செல்லும். எவ்வளவு நைவேத்தியம் செய்கிறோமோ அதில் பாதிதான் உள்ளே இறங்கும். மற்ற பாதி வழியத் தொடங்கி விடும். மீதியை பானகத்தை சமர்ப்பிக்கும் பக்தரிடம் பிரசாதமாக தந்துவிடுவார்கள். ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிலிருந்து குண்டூர் செல்லும் சாலையில் 26 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது மங்களகிரி.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வெற்றி தரும் வசந்த நவராத்திரி!
Lord Narasimha

பானகம் தயாரிப்பது எப்படி?

தேவையானப் பொருட்கள்:

பொடித்த வெல்லம் – 1 கப்

எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்

ஏலக்காய்த் தூள் – ½ டீஸ்பூன்

சுக்குத் தூள் - ½ டீஸ்பூன்

தண்ணீர் – 4 கப்

செய்முறை:

வெல்லத்தை தண்ணீரில் சுமார் அரைமணிநேரம் ஊற வைக்க வேண்டும். வெல்லம் தண்ணீரில் நன்றாகக் கரைந்ததும் அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய வெல்ல நீரில் எலுமிச்சைச் சாறு, ஏலக்காய்த் தூள், சுக்குத் தூள் முதலானவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இப்போது நரசிம்மருக்கு மிகவும் பிடித்த பானகம் தயார்.

இதையும் படியுங்கள்:
'சித்திரை அப்பன் தெருவினிலே'! என்னாது?
Lord Narasimha

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com