வரலெஷ்மி விரதத்தை இப்படி செய்தால், அஷ்ட ஐஸ்வர்யமும் உங்கள் வீடு தேடி வரும்!

ஆகஸ்ட் 8, ஸ்ரீ வரலெஷ்மி விரதம்
Sri Varalakshmi Viratham worship
Sri Varalakshmi
Published on

காலெஷ்மிக்குரிய விரதங்களில் மேன்மையான ‘வரலெஷ்மி விரத’ தினத்தன்று,  ‘லெஷ்மி ராவே மா இண்டிகி’ – அதாவது, ‘லெஷ்மி தேவியே! எங்கள் வீட்டிற்கு வருகை தாருங்கள்!’ என அன்புடன் அவளை வீட்டிற்குள் வரவழைத்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாகக் கொண்டாடும் பண்டிகையாகும். ஸ்ரீ வரமகாலெஷ்மி விரதம் என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது.

மூன்று நாள் ஸ்ரீ வரலெஷ்மி விரதப் பண்டிகை கொண்டாட்டம்:

முதல் நாள்: அவரவர்கள் குடும்ப வழக்கப்படி ஸ்ரீ வரலெஷ்மி விரதம் நடத்தப்படும்.  முதல் நாள் வீட்டின் தென் கிழக்கு மூலையில் அழகான மண்டபம் அமைத்து வாழை மரம், மாவிலைத் தோரணம் கட்டி. அரிசி மாவுக் கோலமிடவேண்டும். சிலர் வரலெஷ்மி அம்மன் முகத்தை தேங்காயில் வரைவார்கள். எங்கள் வீட்டில் வெள்ளியிலான லெஷ்மி அம்மனின் முகத்திற்கு தோடு, மூக்குத்தி, செயின் என  அலங்கரித்து வைப்பது வழக்கம். தாழம்பூ பின்னலிட்டு பூச்சூட்டி, புது வஸ்திரம் அணிவிக்க வேண்டும்.

பின்னர், கலசம் ஒன்றினுள், அரிசி, சிறிது துவரம் பருப்பு, இரண்டு விரலி மஞ்சள், ஒரு எலுமிச்சம்பழம், நாணயம் ஆகியவற்றைப் போட்டு, வெளியே சந்தனம், குங்குமம் இட வேண்டும். கலசத்தின் மீது மாவிலைக் கொத்து, அதன் நடுவே மஞ்சள் தடவிய தேங்காய் வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
சிவனும், விஷ்ணுவும் ஒன்றெனக் காட்சி தந்த அதிசயம்! ஆடி தபசு திருநாள் சிறப்பு!
Sri Varalakshmi Viratham worship

கலசத்திற்கு அழகான ஆடை அணிவித்து கருகமணி மாலையை சுற்றிக் கட்ட வேண்டும். அலங்கரித்த ஸ்ரீ வரலெஷ்மி தேவி முகத்தை  கலசத்தின் மேலேயுள்ள மஞ்சள் தடவிய தேங்காயில் வைத்து, நல்ல மலர் மாலை அணிவித்து முதல்நாள், (வியாழக்கிழமை) மாலை வீட்டினுள், ‘லெஷ்மி ராவே மா இண்டிகி’ என்று பாடி அழைக்கையில், பஞ்சுத்திரி போட்ட குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அப்போது பாயசம் அல்லது பழங்கள் வைத்து நிவேதனம் செய்வது அவசியம். லெஷ்மி தேவி நம் வீட்டில் தங்கியிருந்து, நாம் அளிக்கும் உபசாரங்களை ஏற்று அருள்புரிய வேண்டுமென பிரார்த்தனை செய்ய வேண்டும்.

இரண்டாம் நாள்: ஸ்ரீ வரலெஷ்மி விரத நோன்பு தினத்தன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை எழுந்து, பூஜைக்குரிய பொருட்களான தேங்காய், வெற்றிலைப்பாக்கு, பழங்கள், பூக்கள் மற்றும் மஞ்சள் தடவிய நோன்புச்சரடு ஆகியவற்றை கலசத்தின் முன்புறம் வைக்க வேண்டும். கலச பூஜை, கணேச பூஜை போன்றவற்றை செய்தபிறகு, ஸ்ரீ வரலெஷ்மி பூஜை மேற்கொள்ள வேண்டும். நோன்பு சரடிற்கு தனியாக மந்திரங்கள் கூறி பூஜை செய்த பின், மஞ்சள் நோன்பு சரட்டை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
நாம் நிம்மதியாக வாழக் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரே மொழி!
Sri Varalakshmi Viratham worship

கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல், வடை, அப்பம், சாதம் என்று ஐந்து வகை பொருட்களை நிவேதனம் செய்து, வரலெஷ்மி தேவியை வணங்கி, ஆரத்தி எடுத்த பிறகு வந்திருக்கும் பெண்மணிகளுக்கு தாம்பூலம் அளிக்க வேண்டும். வரலெஷ்மி பாடல்கள், ஸ்தோத்திரங்கள் பாடுவது அவசியம். மாலையில் சுண்டல் செய்து வரலெஷ்மி அம்மனுக்கு நிவேதனம் செய்த பிறகு அழைத்திருக்கும் பெண்களை உபசரிக்க வேண்டும். இரவில் பழம் நிவேதனம் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.

மூன்றாம் நாள்: மூன்றாம் நாளாகிய சனிக்கிழமை அதிகாலை நீராடி, தூய உடையணிந்து வரலெஷ்மி அம்மனுக்கு விளக்கேற்றி ஸ்தோத்திரங்கள் கூறி, பூஜை செய்து, பழங்களை நிவேதனம் செய்ய வேண்டும். மாலையிலும் இதேபோல செய்து, ஆரத்தி எடுத்த பின், கலசத்துடன் அம்மனை மெதுவாக வீட்டிலுள்ள அரிசி டப்பாவினுள் இறக்கிய பின் நமஸ்கரிக்க வேண்டும். டப்பாவின் அருகே பாலும், பழமும் வரலெஷ்மி அம்மனுக்கு வைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்நானம் செய்த பின் வரலெஷ்மி அம்மனை அரிசி டப்பாவிலிருந்து வெளியே எடுத்து வணங்கி மெதுவாக உள்ளே வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பஞ்சமுக அனுமன் உருவானது எப்படி? அதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன?
Sri Varalakshmi Viratham worship

உபரி தகவல்கள்: வரலெஷ்மி நோன்பன்று, அஷ்டலெஷ்மி ஸ்தோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், மகாலெஷ்மி ஸ்தோத்திரம், மகாலெஷ்மி அஷ்டயோத்கர சத நாமாவளி போன்றவற்றைக் கூற வேண்டும்.

மஞ்சள், குங்குமம், எலுமிச்சை, மாக்கோலம், மாவிலைத் தோரணம், உருவத்தை பிரதிபலிக்கும்  கண்ணாடி, பூரண கும்பம், மாவிலை, வில்வ இலை, வாசமுள்ள மலர்கள் வரலெஷ்மி அம்மனுக்கு பிடித்தவைகளாகும்.

ஸ்ரீ வரலெஷ்மி நோன்பு விரதம் மேற்கொள்பவர்களுக்கு உயர்ந்த ஞானம், மங்கல வாழ்வு, எட்டு வித ஐஸ்வர்யங்கள், விரும்பிய நலன்கள் போன்ற பலன்கள் கிடைக்கும்.

‘லெஷ்மி ராவே மா இண்டிகி’ என்று கூறி ஸ்ரீ வரலெஷ்மி தாயாரை  மனதார வணங்கி நாமும் நமது இல்லத்துக்கு வரவேற்போம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com