

பொங்கல் என்னும் பாரம்பரியமிக்க தமிழர் திருநாளில் போகி, பொங்கல், மாட்டுப் பொங்கல் என்ற இந்த மூன்று நாட்களும் முக்கிய இடம் பிடிக்கின்றன. அவை கொண்டாடப்படுவதன் தாத்பரியம் என்ன? பொங்கல் எந்த திசையில் பொங்கினால் சுபிட்சம் உண்டாகும் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
போகி பண்டிகை: பழையன கழிதல் வேண்டும் என்பதற்காக வீட்டை சுத்தம் செய்து அன்று வீட்டின் மூதாதையருக்கு பூஜை செய்வது போகி பண்டிகை .பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும், வளனும் சுரக்கென வாழ்த்தி’த்தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. எனவே, செந்நெல் விளைந்து அறுவடையாகும் தை மாதம் முதல் நாளை ஒட்டி இந்திர விழா வருவதில் இன்பமே. இந்திரன் பயிர்கள் வளர மழையைக் கொடுத்து நமக்கு இன்பம் தருபவன். ஆதலால், இந்திர விழாவை இந்திரப் பொங்கலாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.
வரவேற்பு: பொங்கும் மங்கலம் எங்கும் நிறைந்திட,வாசலில் கூரைப்பூ கட்டி, செங்கதிரோன் கீழ்வானில் வரும் இளங்காளைப் பொழுதை வரவேற்கிறோம். இயற்கையின் நிறங்களுக்குள் ஹேமந்ருதுவிற்கு உரியது மஞ்சள் நிறம். ஹேம என்றாலே பொன் என்று பொருள். பொன் நிறமே மஞ்சள் நிறம். மார்கழி, தை மாதங்களில் மஞ்சள் நிற பூக்கள் அதிகம் மலர்கின்றன. பரங்கிப்பூ, சாமந்திப்பூ, ஆவாரம் பூ முதலானவை மலர்ந்து மனதை மகிழ்விக்கின்றன. நாட்டு கரும்பிலும் வெளிர் மஞ்சளையே காணலாம். மஞ்சள் விளைந்து அறுவடையாகி இல்லங்களுக்கு வருவதும் இந்த மாதத்தில்தான். எனவேதான் பொங்கல் பண்டிகையில் பரங்கியும், கரும்பும், மஞ்சளும், ஆவாரம் பூவும் முக்கிய இடம் பெறுகின்றன.
பொங்கல்: பொங்கலும் தீபாவளியை போன்று ஒரு வகையில் ஒளித் திருவிழாதான். ஒளியை ஏற்றி மகிழ்ச்சி காண்பது தீபாவளி திருநாள். ஒளியைக் கண்டு மகிழ்ச்சி காண்பது பொங்கல் திருநாள். பொங்கல் அன்று கிழக்கே கதிரவனை பார்த்தவாறு வாசலில் பொங்கல் இடுவதே சிறந்தது. இதற்காக செங்கல்லில் மண் அடுப்பு அல்லது இரும்பு அடுப்பு வைத்து அதன் மீது மண் பானை அல்லது புதிய வெண்கல பாத்திரம் வைத்து பொங்கல் இடுவது நடைமுறை.
மங்கலம் தரும் மஞ்சள்: பொங்கலிடும் இடத்தில் தரையில் வண்ணக் கோலமிட்டு கோலத்திற்கு வடக்கு பக்கம் சூரியனையும், தெற்கு பக்கம் சந்திரனையும் வரைவது சிறப்பு. அதற்கு மேல் பூசணி பூவை பசுஞ்சாணத்தில் அருகம்புல்லுடன் வைத்து பூஜை செய்வதற்குப் பயன்படுத்துவது வழக்கம். சூரியனுக்கு பூசணியும், அருகம்புல்லும் உகந்தவை என்பதால் அப்படி செய்வது மரபு. பொங்கல் பானையின் விளிம்பில் மங்கலம் பொங்குவதற்காக இலையுடன் கூடிய மஞ்சள் கொத்தினை கட்டி வைக்க வேண்டும். மஞ்சளில் திருமகளான மகாலட்சுமி வாசம் செய்கிறார். மேலும், தோகையுடன் கூடிய கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றையும் பூஜைக்கு வைக்க வேண்டும்.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்றாகிய பஞ்சபூதங்களில் ஆதவனுக்கும், அக்னிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் விதத்தில் வீட்டு வாசலில் பொங்கல் இடுவதுதான் சிறப்பானது. நகர்ப்புறங்களில் அதுபோல் செய்ய முடியாது என்பதால் புதிதாக வாங்கிய செங்கல் அடுப்பு அல்லது மண்ணடுப்பில் பொங்கல் இடலாம். வீட்டு அறைக்குள் பொங்கல் இட்டாலும் கிழக்கு நோக்கி வைத்து ஜன்னல் வழியாக கதிரவனைப் பார்த்து வணங்குவதன் மூலம் கனிவான வாழ்க்கையைப் பெறலாம். பொங்கல் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்க வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் சிறப்பானது. சிலர் பொங்கல் பொங்கும்போது மங்கலச் சின்னமான சங்கினை முழங்குவதும் உண்டு. பானையில் இருந்து பொங்கல் பொங்கி முதலில் வடியும் திசை கிழக்காக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் எல்லாம் நல்லவிதமாகவே நடக்கும். வாழ்க்கையில் வசந்தம் வீசும் என்பது நம்பிக்கை.
மாட்டுப் பொங்கல்: பால் தரும் பசுக்களை கோமாதாவாக எண்ணி வழிபடுவதும், உழவுக்கு உதவி செய்யும் காளைகளை அவற்றின் சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுகிறோம். அன்று மாடுகளை குளிப்பாட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு, மாலை போட்டு அலங்கரித்து உணவூட்டி, சூரைத் தேங்காய் உடைத்து பசுவிற்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைத்துச் செல்லும்பொழுது, பசு வீட்டிற்குள் கோமியம் விட்டாலோ அல்லது சாணமிட்டாலோ அந்த ஆண்டு மிகவும் சிறப்பாக அமையும் என்பது நம்பிக்கை.
நம் மனதில் இருக்கும் அசுத்தங்களை அகற்றுவதே போகி. மனம் என்னும் வீட்டில் நல்லவன சிந்திப்பதே வண்ணக் கோலமும் தோரணமும், அப்போது உண்மை, ஒளி, உள்ளத்தில் பிறக்கும். அன்பு, தூய்மை, வாய்மை, ஒழுக்கம் போன்ற நற்குணங்களான அரிசி, வெல்லம், நெய், பருப்பினால் செய்த சர்க்கரை பொங்கலை போல் படையல் செய்தால் இறையருளை பெறலாம் என்பதே பொங்கல் பண்டிகையின் தாத்பர்யம். பொங்கல் திருநாளில் இல்லம் எங்கும் மங்கலம் பொங்கட்டும்!