

முதல் சுதேசி தேவாலயம்: CSI லெக்லர் மெமோரியல் சர்ச் (CSI Lechler Memorial Church) சேலம் மரக்கடை ஷேபாத் பகுதியில் அமைந்துள்ளது. 1840ல் சேலத்திற்கு வந்த ஜெர்மன் மிஷனரி ஜான் மைக்கேல் லெக்லர் (John Michael Lechler) நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் சேலத்தில் தொழில்துறை கல்வியின் தந்தை என்று அழைக்கப்படுகிறார், அவர் நிறுவிய தொழில்நுட்ப பள்ளியில் பயின்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த ஆலயத்திற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் தாமே உருவாக்கி இந்த தேவாலயத்தை உருவாக்கினார்கள்.. எனவே, இதை இந்தியாவின் முதல் ‘சுதேசி தேவாலயம்’ என்கிறார்கள்.
இயேசு சிலுவையின் ஒரு பகுதி உள்ள தேவாலயம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற கடற்கரை கிராமமான மணப்பாட்டில் அமைந்துள்ளது புனித சிலுவை தேவாலயம் (Holy Cross Church). இது இயேசு கிறிஸ்துவின் உண்மையான சிலுவையின் (True Cross) ஒரு பகுதியைக் கொண்டிருப்பதால், ஒரு முக்கிய புனித யாத்திரை தலமாக விளங்குகிறது. பல பகுதிகளில் இருந்தும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.
தங்க சிலுவை தேவாலயம்: கன்னியாகுமரியில் அமைந்துள்ள பழைமை வாய்ந்த, புகழ் பெற்ற கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலம் புனித அலங்கார உபகார மாதா தேவாலயம் ஆகும். இது 1956ல் கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலயத்தின் முற்றத்தில் நடப்பட்டு இருப்பது கப்பல் கொடி மரம். தூத்துக்குடியைச் சேர்ந்த பக்தர் ஒருவர் தனது கப்பலின் கொடிக்கம்பத்தை காணிக்கையாக இந்த தேவாலயத்துக்கு வழங்கினார். இது சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களிடையே பிரசித்தி மிகவும் பெற்றது, இதன் கோபுர உயரம் 153 அடி, இதன் உச்சியில் தங்கச் சிலுவை 8 அடி உயரம் கொண்டது. இது வேறு எங்கும் காண முடியாதது.
கைதிகள் கட்டிய கல் கோயில்: நாகர்கோவில் நகரில் ‘CSI ஹோம் சர்ச்’ அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் பழைமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இது 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ளது. தற்போது தெற்காசியாவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் இருப்பதை விட அதிக எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 1819ல் கட்டப்பட்ட இது, அடித்தளத்தில் இருந்து மேல் தளம் வரை அனைத்து பகுதியும் கருங்கற்களால் கட்டப்பட்டதால் இக்கோயில் 'கல் கோயில்' என அழைக்கப்படுகிறது.
இந்த தேவாலயம் கட்டும்போது கூலியாட்கள் கிடைக்காததால் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள சிறைச்சாலைகளில் இருந்த கைதிகளை கொண்டு இது கட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இங்கிருக்கும் ஆலய மணி இங்கிலாந்து நாட்டில் இருந்து வந்தது. அதிக எடையுள்ள இதன் மணியோசை பல கி.மீ. தூரம் வரை கேட்கும்.
இந்து கோயில் பாணியில் ஒரு தேவாலயம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நல்லயன்புரம் சர்ச் (நல்லாயன் ஆலயம்), 1930களில் கட்டப்பட்டது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஜேம்ஸ் தெம்பர் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைப் பார்த்து வியந்தார். அதேபோல ஒரு தேவாலயம் கட்டும் எண்ணத்தில் கட்டப்பட்டதுதான் இந்த தேவாலயம். இதன் முகப்பு பகுதி கோபுரம் போல் இருக்கும். இந்த ஆலயத்தின் மண்டபத்தில் உள்ள தூண்களும் வாழைக்குலைகளுடன் இந்து கோயில் தூண்கள் போலவே உள்ளது. புனித நீராட்டு தொட்டி தாமரை வடிவிலும், நற்கருணை ஆசீர் பெட்டகம் கருவறை வடிவிலும் அமைந்துள்ளன.
குளம் உள்ள தேவாலயம்: கோயில்களில் குளங்கள் இருப்பதைப் போல தேவாலயங்களில் குளங்கள் இருப்பதைப் பார்க்க முடியாது. ஆனால், புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள வில்லியனூர் லூர்து மாதா தேவாலயம் எதிராக நோய் தீர்க்கும் அதிசய குளம் ஒன்று உள்ளது. இந்தியாவிலேயே தமிழர் பண்பாட்டின்படி தேவாலயத்தின் எதிரே அமைக்கப்பட்டுள்ள இந்தக் குளத்தை சுற்றி வந்தால் தீராத நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தமிழ்நாட்டில் தேரோட்டம் நடந்த முதல் தேவாலயம்: கோவில்பட்டி அருகே உள்ள காமநாயக்கன்பட்டியில் புனித பரலோக மாதா பேராலயம் (Holy Heavenly Mother Basilica) உள்ளது. இது 18ம் நூற்றாண்டில் இக்கிராம மக்கள் ஒன்றிணைந்து பதநீர், கடுக்காய் மற்றும் சுண்ணாம்பு கொண்டு கட்டிய ஒரு பழைமையான மற்றும் முக்கிய கத்தோலிக்க திருத்தலமாகும். இது 1684ல் புனித சான் டி பிரிட்டோவால் கட்டப்பட்டது. பின்னர் 1850ல் விரிவுபடுத்தப்பட்டது.
வீரமாமுனிவர் இங்கு பங்குத்தந்தையாகப் பணியாற்றினார். இது தமிழகத்தின் புகழ் பெற்ற பேராலயங்களில் ஒன்று. இங்கு நடைபெறும் விண்ணேற்பு திருவிழா (ஆகஸ்ட் மாதம்) மிக முக்கியமானது. இதில் பெரிய தேர் பவனி நடைபெறும். தமிழ் நாட்டில் முதல் முறையாக தேரோட்டம் நடைபெற்றது இந்த தேவாலயத்தில்தான்.