

பொதுவாக, சிறிய வகை பறவைகள் நமது வீட்டு வாசலிலும் திண்ணையிலும் அடிக்கடி வந்து போய்க் கொண்டிருக்கும். சில சமயம் வாசல்புறங்களில் சிட்டுக் குருவிகள் கூடு கட்டி குடியேறுவதும் உண்டு. ஒவ்வொரு பறவையும் வீட்டுக்கு வருவதில் ஒவ்வொரு அர்த்தம் உள்ளதாக சாஸ்திரம் கூறுகிறது. காகம் வீட்டிற்கு அருகில் வந்து கரைந்து கொண்டிருந்தால், சில தினங்களில் வீட்டிற்கு விருந்தாளிகள் வருவார்கள் என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
ஒருசில இடங்களில் ஆந்தை இரவில் வீட்டுக்கு வந்தால் மகாலட்சுமி வீட்டுக்கு வருவதாக அர்த்தம் என்றும், அதேசமயம் ஒருசில பகுதிகளில் ஆந்தை அலறினால் அது அபசகுணம் என்றும் கூறப்படுகிறது. பெரும்பாலும், சிறிய வகை பறவைகள் வீட்டிற்கு வருவது ஒரு நல்ல அறிகுறியாக சாஸ்திரம் கூறுகிறது.
ஆன்மிகத்தின் அடிப்படையில் சிட்டுக்குருவிகள் வீட்டிற்கு வருவது மகிழ்ச்சி, செழிப்பு, தன வரவு ஆகியவற்றின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இயற்கையாகவே நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்களின் வீட்டில் வசிக்கத்தான் சிட்டுக்குருவிகள் விரும்புகின்றன. அவை உங்கள் வீட்டிற்குள் அடிக்கடி வருகிறது என்றால், உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் நிறைய இருக்கிறது என்று அர்த்தம். சிட்டுக் குருவிகளின் கீச் சத்தம் செல்வத்தின் அதிபதி மகாலட்சுமி சிரிப்பதற்கு ஒப்பாகக் கருதப்படுகிறது. இதனால், அந்த வீட்டில் செல்வம் மற்றும் ஐஸ்வர்யம் பெருகப் போகின்றது என்று பொருள்.
சிட்டுக்குருவிகள் எப்போதும் சிறுகச் சிறுக தானியங்களை சேர்க்கக்கூடியவை. அவை உழைப்பு மற்றும் சிக்கனம், சேமிப்பு ஆகியவற்றின் அடையாளமாக இருக்கிறது. ஒரு நாட்டின் தானிய வளத்தை, அங்கு நிறைந்துள்ள பறவைகளை பார்த்து எடை போட்டுக் கொள்ளலாம். நல்ல பறவைகள் அடிக்கடி தென்படும்போது வீட்டில் உள்ள எதிர்மறை எண்ணங்களும் துர்சக்திகளும் விலகிச் செல்லும். சில பறவைகள் முன்னோர்களின் வடிவங்களாகப் பார்க்கப்படுகின்றன. அவற்றிற்கு நன்மை செய்வதன் மூலம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். அந்த இடத்தில் நிம்மதியும் மன அமைதியும் தங்கி விடும்.
ஆன்மிகவாதிகளின் வாக்கின்படி சிட்டுக் குருவியின் வருகை, வர இருக்கும் செல்வ செழிப்பை முன்கூட்டியே உணர்த்துவதாக இருக்கிறது. அவை உள்ள இடத்தில் மகாலட்சுமி தாயாரின் அருள் கடாட்சம் கிடைத்து பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண்டைய காலத்திலிருந்தே, குருவிகள் கூடு கட்டும் வீடுகளில் வறுமை இருக்காது என்பது கிராமப்புற மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
ஜோடியாக சிட்டுக்குருவிகள் வீட்டில் வந்து அடைந்தால், அந்த வீட்டில் ஒற்றுமையும், தம்பதிகளுக்குள் நெருக்கமும் அதிகரிக்கும். இது மிகவும் மங்கலகரமானது. இது விரைவில் அந்த வீட்டில் ஒரு சுபகாரியம் நடைபெறப்போகிறது என்பதற்கான அறிகுறியாகும். குறிப்பாக, திருமணமாகாதவர்களுக்குத் திருமண யோகம் கூடிவரும் அல்லது குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், தடைப்பட்ட அனைத்து காரியங்களும் கைகூடும்.
சிட்டுக்குருவிகள் உங்கள் வீட்டில் கூடு கட்டும்போது, ஒருபோதும் கலைக்கவோ அல்லது குருவிகளை விரட்டவோ கூடாது. அவை இயற்கையாகவே சிறிய பூச்சிகள் மற்றும் விதைகளை உண்பதால், உங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகின்றன. குருவிகள் கூடு கட்டுவது உங்கள் வீடு பாதுகாப்பானது என்பதைக் குறிக்கிறது.
பழங்காலத்தில் வீடு கட்டும்போதே, அதன் வெளிப்புறத்தில் பறவைகள் வந்து தங்குவதற்கு ஏற்றவாறு மாடம் வைத்துக் கட்டுவதும், வீட்டு வாசலில் பறவைகள் வந்து தங்க ஏதுவாக தானியங்களை மேலே கட்டி வைப்பதும் நம் பாரம்பரியத்தில் ஒன்றாக இருந்தது. எனவே, சிட்டுக் குருவிகள் உங்கள் வீட்டிற்கு வந்தால், அவற்றிற்குத் தினமும் சிறிது தானியங்களும், ஒரு சிறிய கிண்ணத்தில் தண்ணீரும் வைப்பது உங்களுக்கு அதிர்ஷ்டத்துடன் புண்ணியத்தையும் தரும்.