

மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஜெஜூரி எனும் ஆன்மீகத்தலம் உள்ளது. இங்கு சிவபெருமான் அசுரர்களை வதைக்க கண்டோபா என்ற பெயரில் மனிதனாக அவதரித்தார். அவரது அருளைப்பெறும் வகையில் சோனாரி ஜெஜூரி (தங்கக் கோட்டை) என்றழைக்கப்படும் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது. காண்டோபா கடவுள் மிகவும் உக்கிரமாக இருந்தாலும் பக்தர்களுக்கு கருணைமிக்கவராக இருக்கிறார். இந்த கோயிலின் தல வரலாறு மற்றும் அதன் சிறப்புகளை இங்கு விரிவாக காண்போம்.
கண்டோபா போர் தெய்வம்:
புராணங்களின்படி தாரகாசுரன் என்ற அசுரனின் மகன்களான மணி மற்றும் மல்லா என்ற பெயருடைய அரக்கர்கள், பிரம்ம தேவரை நோக்கி கடுமையாக தவம் இருந்தனர். இவர்களின் தவத்தில் மெச்சிய பிரம்மதேவரும் அவர்கள் விரும்பிய வரத்தினை கொடுத்தார். வரத்தின் சக்தியால் அவர்களின் வலிமை கூடியது, அவர்களை அழிப்பது கடினம் என்பதை உணர்ந்த அசுரர்கள், பூமியில் உள்ள முனிவர்கள் மற்றும் தேவலோகத்தில் உள்ள தேவர்களை கொடுமைப்படுத்த தொடங்கினர்.
தேவர்கள் அசுரனின் கொடுமை தாளாமல் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இறைவன் கண்டோபாவின் வடிவத்தில் பூமியில் அவதாரம் எடுத்தார். காண்டோபா என்றால் போர் வீரன் என்றும் அர்த்தம் கொள்ளலாம். சிவன் கையில் வாள் ஏந்தி குதிரையின் மீதமர்ந்து போர் வீரனை போன்று காட்சியளித்தார், இரு அசுரர்கள் மீதும் காண்டோபா போரை தொடங்கினார்.
மனித உருவில் வந்தது இறைவன் என்பதை உணர்ந்த மணி அசுரன், அவரது பாதம் பணிந்து மன்னிப்பு கோரினான். அவனது தவறுகளை மன்னித்து இறைவன் அவனுக்கு முக்தியளித்தார். மல்லாசுரன் தொடர்ந்து காண்டோபாவை எதிர்த்து போரிட்டான், இறுதியில் இறைவன் அவனை வதைத்தார். அசுரர்களை காண்டோபா அழித்ததை கொண்டாடும் வகையில் ஜெஜூரி மலைக்கோயில் கட்டப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது.
ஜெஜூரி மலைக்கோயில் அமைவிடம்:
இந்த கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2356 அடி உயரத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இந்த கோயிலை அடைய சுமார் 200 படிகள் வரை ஏறிச்செல்ல வேண்டும். இந்த பாதையில் வரிசையாக தீபத்தூண்கள் அமைக்கப்பட்டு கோயில் பாதைக்கு மேலும் அழகூட்டுகின்றன. திருவிழாக் காலங்களில் இந்த பெரிய தீபத்தூண்களில் விளக்கேற்றி ஒளி வெள்ளத்தில் மிதக்க செய்கிறார்கள்.
ஜெஜூரி கோயில் கட்டிடக்கலை:
புராண காலம் தொட்டே இருக்கும் இந்த கோயிலை, பின்னாளில் வித்தல்தேவ் என்ற உள்ளூர் ஆட்சியாளர் இன்றைக்கு இருக்கும் வடிவில் கோயிலை கட்டினார். இந்த கோயிலை, மராட்டிய வம்சத்தை சேர்ந்த ஹோல்கர் மற்றும் பேஷ்வாக்கள் விரிவுபடுத்தி கட்டியுள்ளனர். மராட்டிய அரசரான சத்ரபதி சிவாஜியின் தந்தை சாஹாஜி ராஜே போஸ்லே கண்டோபாவின் தீவிர பக்தராக இருந்தார். சிவாஜியும் இவரது வழியிலேயே இந்த கோயிலை பராமரித்தார். ராணி அகல்யா பாய் ஹோல்கர் கோயிலுக்கு பல வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து கட்டிடங்களை விரிவுபடுத்தினார். மலைக் கோட்டையை போலவே காட்சியளிக்கும் ஜெஜூரி கோயில் ஹேமத்பந்தி கட்டிடக்கலை பாணியில் செதுக்கப்பட்டுள்ளது.
கோயில் கருவறை:
மலைக்கோயில் கருவறையில் மூலவரான கண்டோபா போர் கடவுள், தனது மனைவி மல்சா தேவியுடன் குதிரை மீது அமர்ந்தவாறே பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். போர் கடவுள் என்பதால் கையில் வாளுடன் அருள் புரிகிறார்.
பண்டாரா வீசுதல் திருவிழா:
இந்தக் கோயிலின் முக்கிய திருவிழா பண்டாரா என்று அழைக்கப்படுகிறது. பாண்டாரா என்றால் மஞ்சள் பொடி என்று பொருள். காண்டோபா தெய்வத்தினை வேண்டி பலன் பெற்றவர்கள், திருவிழாவின்போது காற்றில் மஞ்சள் பொடியினை விசிறி அடிக்கின்றனர். அந்த நேரத்தில் கோயில் பகுதி முழுக்க மஞ்சள் பொடி பறந்துகொண்டே இருக்கும். கோயிலின் தரைகள், சுவர்கள் மற்றும் பக்தர்களின் ஆடைகள் என அனைத்தும் மஞ்சள் நிறமாக மாறிவிடுகின்றன. இது மங்கலத்தின் குறியீடாகவும், தீமைகளை அழிக்கும் சக்தியாகவும் நம்பப்படுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், அமாவாசை நாட்களிலும் இங்கு மஞ்சள் பொடித் திருவிழா நடைபெறுகிறது.
கோயிலுக்கு செல்வது எப்படி?
சென்னையில் இருந்து புனே வரை ரயில் அல்லது விமான மார்க்கம் மூலமாக பயணிக்கலாம். புனேயில் இருந்து கோயிலுக்கு செல்ல ரயில், பஸ், கார் வசதிகள் உள்ளன. கோயில் தினசரி காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்து இருக்கும்.