பிறரிடம் கோபப்படுவதற்கு நமக்கு என்ன யோக்கியதை? - காஞ்சி மகா பெரியவரின் அருளுரை!

Kanchi Mahaperiyava
Kanchi Mahaperiyava
Published on

நமக்கு அநேக சந்தர்ப்பங்களில் கோபம் வருகிறது. முக்கியமாக இரண்டு விதங்களில் கோபம் வருகிறது. ஒருவன் ஒரு தவறு செய்தால் அவனிடம் கோபம் ஏற்படுகிறது. அல்லது ஒருவன் நம்மைத் தூஷித்தால் அவனிடம் கோபம் வருகிறது. யோசித்துப் பார்த்தால், இந்த இரண்டு விதங்களிலும் எவரிடமும் கோபப்படுவதற்கு நமக்கு யோக்கியதை இல்லை என்று தெரியும்.

ஒருவன் தவறு செய்கிறான் என்றால், கோபம் கொள்கிறோமே, அப்படி என்றால் நாம் தவறு செய்யாதவர்களா?

ஒருவனைப் பாவி என்று நாம் துவேஷிக்கும்போது, நாம் அந்தப் பாவத்தைச் செய்யாதவர்தானா என்று நினைத்துப் பார்க்க வேண்டும். காரியத்தில் செய்யாவிட்டாலும், மனதால் செய்திருப்போம்.

நம்மைவிடத் தவறும் பாவமும் செய்பவர்களும் இருக்கலாம். ஆனால் நாமும் அநேக தவறுகளையும் பாவங்களையும் செய்துகொண்டேதான் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.

நம் மனசு ஏதோ ஓரளவுக்குப் பக்குவம் அடைந்திருப்பதால், நாம் இந்த அளவு பாவத்தோடு நிற்கிறோம். அவனுடைய மனசுக்கு இந்தப் பக்குவம் கூட வராததால், இன்னும் பெரிய பாவம் செய்கிறான்.

நாம் செய்கிற தவறுகளைத் திருத்திக்கொள்வதற்கு எத்தனை பாடுபட வேண்டி இருக்கிறது! நம்மையும்விட மோசமான நிலைக்கு இறங்கிப் பாவங்களைச் செய்யப் பழகிவிட்ட இன்னொருத்தனின் மனதுக்கும் அதிலிருந்து மீள்வது சிரமமான காரியம்தான்.

ஒருவன் பாவம் செய்ய அவனுடைய மனசு, சந்தர்ப்பம் இரண்டும் காரணமாகின்றன. நாம் பல பாவங்களைச் செய்ய முடியாமல் சந்தர்ப்பமே நம்மை கட்டிப்போட்டிருக்கலாம்.

எனவே, ஒரு பாபியைப் பார்க்கும்போது, "அம்பிகே, இந்த பாவத்தை நானும் கூடச் செய்திருக்கலாம். ஆனால், அதற்குச் சந்தர்ப்பம் தராமல் நீ கிருபை செய்தாய். அந்தக் கிருபையை இவனுக்குச் செய்யம்மா!" என்று பிரார்த்திக்க வேண்டும்.

பாவிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பயனில்லை. அவர்களுடைய மனதும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பலமாகப் பிரார்த்திப்பதே நாம் செய்ய வேண்டியது.

இதையும் படியுங்கள்:
இந்து மதத்தின் 8 சிரஞ்சீவிகள்: இவர்களை வழிபடுவது ஏன் அவசியம் தெரியுமா?
Kanchi Mahaperiyava

நம் கோபம் எதிராளியை மாற்றாது. அவனுக்கும் நம்மிடம் கோபத்தை வளர்ப்பதுதான் அதன் பலன். இரண்டு பக்கங்களிலும் துவேஷம் வளர்ந்துகொண்டே போகும்.

ஒருவன் தன் தவறைத் தானே உணர்ந்து திருந்தச் செய்யாமல், நம் கோபத்துக்குப் பயந்து சரியாக நடக்குமாறு செய்வதில் நமக்கு பெருமை இல்லை. இது நிலைத்தும் நிற்காது. அன்பினாலே பிறரை மாற்றுவதுதான் நமக்கு பெருமை. அதுதான் நிலைத்து நிற்கும்.

நம்மை ஒருத்தர் துவேஷிக்கிறார் என்று கோபம் கொள்ள வேண்டியதில்லை. நாம் எத்தனை தூஷணைக்குத் தக்கவர் என்பது நம் உள் மனசுக்குத் தெரியும்.

ஒருவேளை நம்மைத் தூஷிக்கிறவர் நாம் செய்யாத தவறுக்காக நம்மைத் திட்டிக்கொண்டு இருக்கலாம். ஆனால், நாம் செய்த தவறுகள் அதைவிடப் பெரியவை என்றும் நம் அந்தரங்கத்துக்குத் தெரியும். நம் தவறுகளைக் கழுவிக்கொள்வதற்காக, ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் பச்சாதாபத்துடன் அழ வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம்.

இந்த நிலையில் உள்ள நாம், பிறரைக் தவறு கண்டுபிடித்துக் கோபிக்க நியாயம் எது? நாம் தவறு செய்யவில்லை என்றால் அப்போது பிறரை கோபிக்கலாமா என்றால், இப்படித் தவறு செய்யாத நிலையில் நாம் அன்புமயமாகிவிடுவோம். இப்போது நமக்கு பாவியிடமும் கருணை தவிர எந்தப் பாவனையும் இராது. கோபமே உண்டாகாது.

இதையும் படியுங்கள்:
கோயில், வீட்டில் பூஜை செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!
Kanchi Mahaperiyava

நாம் தவறு செய்தவர்கள் என்றாலும் நமக்கு பிறரைக் கோபிக்க யோக்கியதை இல்லை. தவறு செய்யாத நிலையிலே எல்லாம் அம்பாளின் லீலைதான் என்று தெரிகிறது. லீலையில் யாரைப் பூஷிப்பது, யாரைத் தூஷிப்பது? எப்படிப் பார்த்தாலும் கோபம் கூடாதுதான்.

பெரும்பாலும் நம்முடைய கோபத்தை எதிராளி பொருட்படுத்துவதே கிடையாது. நம் கோபத்தினால் நமக்கேதான் தீங்கு செய்துகொள்கிறோம். ஆத்திரப்படுவதால் நாமே நம் சரீரம், மனது இரண்டையும் கெடுத்துக்கொள்வதோடு சரி.

அன்பாக இருப்பதுதான் சுபாவமான தர்மம். அதுதான் ஆனந்தமும். அன்பு நமக்கும் ஆனந்தம், எதிராளிக்கும் ஆனந்தம். "அன்பே சிவம்" என்பதன் அர்த்தமும் இதுவே.

(காஞ்சி பெரியவரின் கனிமொழிகள் என்ற நூலில் இருந்து)

இதையும் படியுங்கள்:
ஆவணி மாதத்தில் இந்த விஷயங்களை செய்தால் நீங்கள் நினைத்தது உடனே நடக்கும்!
Kanchi Mahaperiyava

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com