
இலங்கையில், திருகோணமலை மாவட்டத்தில், திருகோணமலை நகரத்திலிருந்து 3.9 கிலோ மீட்டர் தொலைவில் இயற்கையாக அமைந்த ‘கன்னியா வெந்நீரூற்று’ அமைந்திருக்கிறது. இந்த இடத்தில் 90 முதல் 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த இந்த வெந்நீரூற்றில், நாளடைவில் செயற்கைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிணற்றிலுமிருந்து வெவ்வேறு வெப்பநிலையில் நீர் ஊறி வந்து கொண்டிருக்கும். இலங்கை செல்லும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இந்த கன்னியா வெந்நீரூற்றுகள் அமைந்ததற்கும் ஒரு கதை சொல்லப்படுகிறது.
இலங்கையை ஆட்சி செய்து கொண்டிருந்த சிவபெருமானின் தீவிர பக்தனான இராவணன், திருகோணமலையில் குடிகொண்டிருக்கும் கோணேஸ்வரர் கோயிலுக்குச் சென்றான். அக்கோயிலில் இருந்த சிவலிங்கத்தைக் கண்டு வியந்த இராவணன், அந்தச் சிவலிங்கத்தை அவன் தாய் வழிபடுவதற்காக அங்கிருந்து எடுத்துக் கொண்டு செல்ல விரும்பினான். அதனால் பாறையின் மீது இருந்த சிவலிங்கத்தை தனது வாளால் வெட்டி பெயர்த்து எடுக்க முற்பட்டான்.
அதனால் கடும் கோபம் கொண்ட சிவன், அந்த பாறையைத் தனது காலால் அழுத்தினார். அதனால், அந்தப் பாறைக்குள் சிக்குண்டான் இராவணன். அதிலிருந்து வெளியேற முடியாமல் இராவணன் தவித்தான். ஆனால், பாறைக்குள் சிக்கிக் கொண்ட இராவணன் இறந்துவிட்டதாகப் பலரும் நினைத்தனர். அவனின் தாய்க்கும் அந்த செய்தி சென்றடைந்தது. அதனை நினைத்து வருந்திய அவனின் தாய், அதிர்ச்சியில் உயிரிழந்தாள். ஆனால், இராவணனோ இறக்கவில்லை. சிவனை பிரார்த்தனை செய்து, தாம் செய்த செயலை மன்னிக்கும்படி வேண்டினான். சிவபெருமானும், தனது பக்தனை மன்னித்தார்.
அதன் பின்னர் சிவபெருமானிடமே, அங்கிருந்த லிங்கத்தைக் கேட்டுப் பெற்ற இராவணன், அந்த லிங்கத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கிளம்பினான். அவன் செல்லும் வழியில், விஷ்ணு அந்தணர் வடிவம் எடுத்து இராவணனைச் சந்தித்து, அவனது தாயார் உயிரிழந்த செய்தியைத் தெரிவித்தார்.
அதைக் கேட்டதும் இராவணன் வருத்தத்தில் ஆழ்ந்தான். அந்த அந்தணர், இராவணனைத் தேற்றி, அந்த இடத்திலேயே, இறந்த தாயாருக்குச் செய்ய வேண்டிய இறுதிக்கடமைகளைச் செய்யும்படி அறிவுறுத்தினார். இப்பகுதியிலேயே, அவனுடைய தாயாருக்கான இறுதிக் கடமைகளைச் செய்தால், அவனது தாயாரின் ஆன்மா சொர்க்கம் செல்வது உறுதி என்று சொன்னார். இராவணனும் அதனை ஏற்றுக் கொண்டதுடன், அந்தணர் உருவிலிருந்த விஷ்ணுவிடமே, இறுதிக்கடமைகளைச் செய்ய ஒத்துழைப்பு நல்கும்படி வேண்டினான்.
அதற்குச் சம்மதித்த அந்தணர், இராவணனை அழைத்துக் கொண்டு திருகோணமலைக்கு மேற்கிலுள்ள கன்னியா என்னும் இடத்திற்குச் சென்று, அவ்விடத்தில் தமது கையில் இருந்த தடியினால் ஏழு இடங்களில் ஊன்றினார். அந்தணர் உருவத்திலிருந்த மகாவிஷ்ணு தடி ஊன்றிய ஏழு இடங்களிலும் வெந்நீரூற்றுக்கள் தோன்றின. அதன் பிறகு, அந்தணர் உருவத்திலிருந்த மகாவிஷ்ணு, இராவணனைக் கொண்டு, அவனின் தாய்க்கான இறுதிக் கடமைகளைச் செய்தார் என்று இந்த கன்னியா வெந்நீரூற்று குறித்துப் புராணக்கதைகள் சொல்கின்றன.
எனவே இந்தக் கன்னியா நீரூற்றுப் பகுதி இறந்தோருக்கான இறுதிக் கடமைகள் செய்யும் புனிதத்தலமாகவும் ஆகிவிட்டது. இப்பகுதியில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் பலரும் தங்கள் குடும்பத்தினரின் இறப்புகளுக்குப் பின்பான இறுதிக்கடமைகளைச் செய்து கொண்டிருக்கின்றனர்.