அகல் விளக்கு முதல் சொக்கப்பனை வரை: கார்த்திகை ஜோதியின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன?

வீட்டு வாசல் தீபம் முதல் மலை உச்சி ஜோதி வரை விரியும் நம்பிக்கையும் வாழ்வியல் மேம்பாடும்.
கார்த்திகை தீபம் - Spiritual Light
கார்த்திகை தீபம் - Spiritual LightImage credit: Gemini
ரெ. ஆத்மநாதன்

ரெ.ஆத்மநாதன், பொருளாதாரம், இதழியல்-மக்கள் தொடர்பியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவரது 4 நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. அனுபவம் மிக்க எழுத்தாளர்.ஆக்கபூர்வமான கட்டுரைகள், சிந்திக்க வைக்கும் சிறுகதைகள், கவிதைகள் என்று இவரது எழுத்துகள் பல பரிமாணங்களைக் கொண்டவை. கடந்த பல வருடங்களாக கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார்.

Updated on: 

ஒளியைத் தேடியே ஓடிடும் உயிர்கள்

தீப ஒளியில் திகட்டா வாழ்வை 

அனுபவித் தென்றும் அமைதியில் திளைக்கும்!

அகமிக மகிழ்ந்தே ஆனந்தம் கொள்ளும்!

நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயமென்று

பஞ்ச பூதங்களின் பார்வையால் என்றும் 

உலகம் தழைக்கும்!உன்னதம் நிகழ்த்தும்!

தினந்தினம் வீடுகள் தீப ஒளியில் 

மூழ்கி யெழுந்து முழுதாய் நிறைந்து

மனதின் மகிழ்ச்சியை மாறுதலின்றி 

அளித்து வந்தாலும் அண்ணாமலையார் தீபம் 

ஏற்றிடும் நாளில் எல்லோர் மனத்திலும் 

பீறிடும் உவகையை விளக்கிடல் கடினமே!

வாசலில் முற்றத்தில் வதிந்திடும் சுவர்களில் 

மாடியில் கூரையில் கைக்கெட்டும் உயரத்தில் 

எங்கணும் அகலினை எடுத்துப்போய் வைத்தே

மலையில் தீபம் ஏற்றியவுடனே

மனமது நெகிழ்ந்து மகிழ்ச்சி கொப்பளிக்கவே

ஏற்றும் தீபம் இதயம் நிறைக்கும்!

உதயம் உள்ளே ஒன்றாய் மிளிரும்!

தீபத்தன்று திகுதிகுவென எரியும் நெருப்பைப்

போற்றி வணங்கும் புனித நிகழ்வுக்காக

சொக்கப்பனை கொளுத்தி சொக்கனை வணங்குவோம்!

அறியாமையை அகவிருளை துன்பத்தைத் துயரத்தை

நெருப்பிலிட்டுப் பொசுக்கி விட்டு நாம் 

இன்பத்தின் வாயிலில் இளைப்பாறி நின்றிடுவோம்!

ஆற்றில் குளத்தில் அதிகமுள்ள நீர்நிலைகளில் 

மிதக்கும் வண்ணம் ஏற்பாடுகள் செய்து

அவற்றில் தீபத்தை அழகாய் ஏற்றி 

ஓடச் செய்தே உவகை மிகக்கொள்வோம்!

நீரின் நடுவே எரியும் விளக்கு

ஒன்றாய்ப் பலவாய் அழகைக் கூட்ட 

மனத்தில் ஆனந்தம் மல்டிப்ளை ஆகும்!

குன்றின் மீது குறைவில்லா நெய்யுடன் 

எரியும் தீபம் எங்கெங்கோ உள்ளோர்க்கும் 

உற்சாகம் கூட்டி ஊக்கம் பெருக்கி

அயர்ச்சியைப் போக்கும்! ஆரோக்கியம் சேர்க்கும்!

அகலும் கேன்டிலும் அனைத்து மதங்களின் 

ஞாபகச் சின்னங்கள்!ஞானம் வளர்ப்பவை!

இருளைப் போக்கும் திறங்கொண்ட ஒளியே

உலகை வாழ்விக்கும்!உன்னதத்தை வளர்த்தெடுக்கும்!

அகலும் எண்ணையும் திரியும் காற்றும் 

கூட்டணி சேர்ந்தே கொடுத்திடும் ஒளியை!

குடும்பவுறவு குவலயவுறவு விட்டுவிடாமல் 

விரும்பியே நாமும் விலகாமல் அவற்றைத்

தொடர்ந்திட வாழ்வில் இனிமை சேரும்!

என்றும் இன்பம் இயல்பாய் மலரும்!

இதையும் படியுங்கள்:
சபரிமலை ஆன்மீக அனுபவ கட்டுரை: அழைத்ததும் அவனே… அருளியதும் அவனே!
கார்த்திகை தீபம் - Spiritual Light

தேங்கும் மகிழ்வே திறமிக்க மனத்தின் 

வளர்ச்சியின் அளவுகோல்!வளத்தின் திறவுகோல்!

பொருளாதாரத்தில் புகுந்திடும் ஒளியால் 

புதுமைகள் பலவும் வாழ்வில் சேரும்!

வறுமை யகன்று வளமது தழைத்தால்

உடலின் உறுதி மலையாய் மேம்படும்!

அறிவை வளர்க்கும் அத்தனை முயற்சியும் 

கைக்கு எளிதாகும்!கவனம் குவியும்!

பிறழாது குவியும் கவனந்தானே

கடின உலகில் செயற்கரிய செயலை

செய்யத் தூண்டிச் சிறப்பினைச் சேர்க்கும்!

மனத்தின் இருளை அறிவாற்றல் ஒளியே

ஓடச் செய்திடும்! உலகில் இன்பத்தை 

அருளச் செய்திடும்! அனைத்தையும் நிறைத்திடும்!

அகல் விளக்கேற்றி அண்ணாமலையார் நினைவுடன் 

உள்ளம் உருகி ஒருமையுடன் தொழுதிட 

பிறவியின் நெருடல்கள் பிறழ்ந்து மறைந்திடும்!

மழைக்கால மாலையிலே மலையானை மனமிறுத்தி 

விளக்கை ஏற்றுவோம்!வினைதனை மாற்றுவோம்!

முதலுங் கடைசியுமான நிலமும் ஆகாயமும் 

என்றும் நிலையானவை!ஏற்றவிறக்கம் இல்லாதவை!

நீர் நெருப்பு காற்று மூன்றும் 

அடிக்கடி மாறுபவை! அகிலத்தை மாற்றுபவை!

அவற்றின் போக்கை அடியார் மகிழ்ந்திடவே

அண்ணா மலையாரே!அணுசரனையாய் மாற்றிடுக!

ஆற்றுநீர் தேங்கி அகல வாய்க்கால்களில் 

பாய்ந்தே பயிரைப் பக்குவமாய் வளர்த்திட்ட

பழங்கதை யெல்லாம் வரலாறாகிப் போயின்று 

குடத்து நீரைத் தெளிக்கும் சோகம் 

டெல்டா விலேயே நீள்வதும் வருத்தமே!

அரிசிச் சோற்றுக்கே ஆலாய்ப் பறக்கும் 

நிலையைப் பூமியில் நெடிய அண்ணாமலையாரே

தடுத்திட வேண்டும்! தகைவான மழையைப் 

பெய்விக்க வேண்டும்! பெருங்குடி மக்களை

உய்விக்க நீயும் உதவிட வேண்டும்!

உண்டி கொடுத்து உயிர்காக்கும் அவரின் 

உழைப்புக் கேற்ற ஊதியந் தனையே

வழங்கியே நீயும் வையம் வாழ 

அருளிட வேண்டும்! அழிவைப் போக்கி 

அத்தனை உயிர்களும் பிழைத்திட நீயும் 

பெருமனங் கொண்டு உதவிட வேண்டும்!

உந்தன் தீபம் உயர்ந்த மலையில் 

எரிந்து அடங்கும் நிலைக்கு முன்னரே

தீயாய் மழையைத் தீந்தமிழ் நாட்டில் 

பெய்திடச் செய்திடு!பேருலகைக் காத்திடு!

இதையும் படியுங்கள்:
கார்த்திகை தீபம் வெறும் பண்டிகை இல்ல... இது ஒரு வானியல் அதிசயம்! இதோ முழு விவரம்!
கார்த்திகை தீபம் - Spiritual Light