

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா (குலசை தசரா) ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற திருவிழாவாகும். இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்த படியாக இங்குதான் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் காளி, சிவன், ராஜா, குறத்தி போன்ற பல்வேறு வேடங்களை அணிந்து விரதம் மேற்கொண்டு காணிக்கை சேகரித்து இறுதி நாளில் அந்த காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்துவார்கள். இந்த விழாவின் பத்தாம் நாள் தசரா அன்று கடற்கரையில் மகிஷாசுரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் மிகவும் பிரசித்தானது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டத்தில் உள்ள கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோவில், 300 ஆண்டுகள் பழமையான சக்தி தலமாகும்.
பாண்டிய நாட்டை ஆண்ட குலசேகர பாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சியளித்து அருள் வழங்கினாள். மன்னனின் நினைவாக இவ்வூர் குலசேகரபட்டினம் என அழைக்கப்பட்டது.
மூலவர் பீடத்தில் அம்மனும் அப்பனும் (ஞானமூர்த்தீஸ்வரர்) ஒருசேர ஒரே பீடத்தில் காட்சியளிக் கின்றனர். பாதத்தின் அருகில் சுயம்பு உருவம் உள்ளது. சுயம்பு என்பது தானே தோன்றியது, உளி கொண்டு செதுக்காதது. இங்கு சிவன் சுயம்புவாக உள்ளார். மதுரையை மீனாட்சி ஆள்வதைப்போல இங்கு அம்பாளின் ஆட்சி நடைபெறுகிறது.
இவ்வளவு சிறப்பு பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா வரும் அக்டோபர் 11-ந்தேதி ஞாயிற்று கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் 10-ம் திருநாளான அக்டோபர் 20-ந்தேதி நள்ளிரவு நடைபெறுகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு நேர்த்திக்கடனுக்காக வேடம் அணியும் பக்தர்கள் பல்வேறு நாட்கள் விரதம் கடைபிடிக்க தொடங்கி உள்ளனர்.
விநாயகர், சிவன், பார்வதி, கிருஷ்ணர், முருகப்பெருமான், ராமர், லட்சுமணர், நாராயணர் போன்ற சுவாமி வேடங்களை அணியும் பக்தர்கள் 21 நாட்கள் விரதம் மேற்கொள்கின்றனர்.
காளிவேடம் அணியும் பக்தர்கள் 61 நாட்கள், 41 நாட்கள், 31 நாட்கள், 21 நாட்கள் என தங்களது சூழலுக்கு ஏற்றவாறு விரதம் மேற்கொள்வார்கள். எனினும் பெரும்பாலானவர்கள் 41 நாட்கள் விரதத்தையே கடைபிடிக்கின்றனர்.
11-ம்தேதி கொடியேற்றத்தை தொடர்ந்து 12-ந்தேதி முதல் 19 -ந் தேதி வரை தினசரி காலை 7.30 மணி, காலை 9 மணி, காலை 10.30 மணி, பகல் 12 மணி, பகல் 1.30 மணி, மாலை 3 மணி, மாலை 4.30 மணி, மாலை 6.00 மணி, இரவு 7.30 மணி, இரவு 10 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 12 மணிக்கு அன்னதானமும், மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரை கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
1-ம் திருவிழாவான 11-ந் தேதி முதல் 9-ம் திருவிழாவான 19-ந் தேதி வரை தினசரி இரவு 10 மணிக்கு ஒவ்வொரு வாகனம் மற்றும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அன்னை முத்தாரம்மன் திருவீதியுலா நடக்கிறது.
தொடர்ந்து 20-ம்தேதி இரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷா சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் வெளிநாடுகள். பல்வேறு மாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்வார்கள்.
21-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சூரசம்ஹாரம் முடிந்தவுடன் கடற்கரையில் அன்னைக்கு அபிஷேக ஆராதனை, சாந்தாபிஷேக ஆராதனை தொடர்ந்து தேர் பவனி, பூஞ்சப்பரத்தில் திருவீதியுலா முடிந்தவுடன் பக்தர்கள் காப்பு களைந்து விரதம் முறிப்பார்கள்.
அதனை தொடர்ந்து கொடி இறக்கம் செய்யப்பட்டு இந்த ஆண்டுக்கான குலசை தசரா திருவிழா நிறைவடையும்.