கும்பகோணம் கரும்பாயிரம் விநாயகர்: சக்கையான கரும்பு இனிப்பாக மாறிய அற்புத வரலாறு!

பொய் சொன்ன வியாபாரிக்கு விநாயகர் கொடுத்த தண்டனையும், வாழ்வை இனிப்பாக்கும் கரும்பாயிரம் பிள்ளையாரின் அற்புத மகிமையும்.
கரும்பாயிரம் விநாயகர் - Karumbayiram Vinayagar Temple
கரும்பாயிரம் விநாயகர் - Karumbayiram Vinayagar Temple
கே.எஸ்.கிருஷ்ணவேனி

"கே.எஸ்.கிருஷ்ணவேனி, வைஷ்ணவ் கல்லூரியின் முன்னாள் மாணவி. கல்கி, மங்கையர் மலர், விகடன் போன்ற இதழ்கள் மற்றும் நாவல்களை படித்து, எழுதும் ஆர்வமும் மேலோங்க, 1992-ல், சமையல் குறிப்புகள் குறித்த சிறு கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அவை 'மங்கையர் மலர்' ​​இதழில் தொடர்ந்து வெளியாகின. மேலும் பல இதழ்களில் எழுதிப் பல பரிசுகளை வென்றுள்ளார். 'பட்டிமன்றங்களில்' பங்கேற்ற அனுபவமும் உண்டு. தற்போது கல்கி ஆன்லைனில் எழுதி வருகிறார். ஆர்வம் மிக்கவர். பல்வேறு பிரிவுகளில் பல தலைப்புகளில் சுவாரஸ்யமான கட்டுரைகளை எழுத வல்லவர். மிக விரைவாக எழுதவும் கூடியவர்."

Updated on: 

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஆதி கும்பேஸ்வரர் கோவிலுக்கு வடக்கே திருமஞ்சன வீதி செல்லும் வழியில் வராகர் கோவிலுக்கு அருகில் கரும்பாயிரம் கொண்ட விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இது கும்பகோணம் நகரின் மிகப்பழமையான மற்றும் மூத்த விநாயகர் கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தின் விநாயகர் முன்பு 'வராக விநாயகர்' என்று அழைக்கப்பட்டார். மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்தபோது இந்த விநாயகரை வழிபட்டு பூமியை மீட்டார் என்பது ஐதீகம்.

'கரும்பாயிரம் பிள்ளையார்' பெயர் வரக்காரணம்:

வியாபாரி ஒருவர் வண்டி நிறைய கரும்புடன் இந்த வழியாகப் பயணம் செய்யும்போது களைப்படைந்து வண்டியை கோவில் குளத்தருகில் நிறுத்தி முகத்தை கழுவிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தார். அப்போது ஒரு சிறுவன் ஒரு துண்டு கரும்பு கேட்க வண்டிக்காரன் மறுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தான்.

அந்த சிறுவனும் விடாமல் அவனை துரத்திக்கொண்டே வர, வியாபாரி தான் கொண்டு வந்த கரும்பு ஒரு புல் குச்சிபோல இருப்பதாகவும், அது இனிப்பாக இல்லாமல் உப்பாக இருக்கும் என்றும் கூறி அதை ஆலையில் அரைக்காவிட்டால் இனிப்பாக இருக்காது என்று கூறினான்.

சிறுவன் அவர் பொய் சொல்வதாகவும், அவை வெறும் புல் குச்சிகளாக மாறிடும் என்று கூறிவிட்டு மறைந்து விட்டான். வியாபாரி சந்தைக்குச் சென்று கரும்புகளை விற்க முயன்றபோது அத்தனை கரும்புகளும் சாறின்றி சக்கையாகவும், உப்பு கரிப்பதாகவும் மாறிவிட்டன. வியாபாரி தன் தவறை உணர்ந்தான்.

அவரது கனவில் தோன்றிய சிறுவன் பொய் சொன்னதற்காக அவருக்கு இந்தப் பரிசு கிடைத்ததாக கூற, வந்த சிறுவன் விநாயகப் பெருமான் என்பதை அறிந்து கோவிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். கருணையுள்ள இறைவன் அந்தப் புல் குச்சிகளை கரும்புகளாக மாற்றினார். அன்று முதல் அவர் 'கரும்பாயிரம் பிள்ளையார்' என்று போற்றப்படுகிறார். பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இங்கு கரும்பு, அருகம்புல் மாலை சாத்தி வழிபாடு செய்கின்றனர்.

கரும்பாயிரம் விநாயகர் - Karumbayiram Vinayagar Temple
கரும்பாயிரம் விநாயகர் - Karumbayiram Vinayagar Temple

கோவில் வரலாறு:

யுகங்களுக்கு முன்பு ஹிரண்யாட்சன் எனும் அசுரன் பூமியைக் கட்டாக சுருட்டி பாதாள லோகத்திற்கு எடுத்துச் சென்றுவிட, பூமித் தாயின் பிரார்த்தனைக்கு இணங்கி விஷ்ணு பகவான் தனது வராக (பன்‌றி) அவதாரத்தில் ஒரு காட்டுப் பன்றியின் வடிவம் எடுத்து இந்த இடத்தில் விநாயகப்பெருமானை வேண்டி பூமியைத் திரும்பக் கொண்டு வந்தார்.

எனவே கும்பகோணம் என்ற இந்த இடம் முற்காலத்தில் 'வராகபுரி' என்று அழைக்கப்பட்டது. அப்பொழுது விநாயகர் விஷ்ணு பகவானுக்கு உதவியதால் அவர் 'வராகப் பிள்ளையார்' என்று போற்றப்பட்டார். பின்னர் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கரும்பு சம்பவத்தின் காரணமாக அவர் 'கரும்பாயிரம் பிள்ளையார்' என்று போற்றப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
குருவின் மகனை மீட்க பெருமாள் செய்த அற்புதம்: குருவித்துறை தல வரலாறு தெரியுமா?
கரும்பாயிரம் விநாயகர் - Karumbayiram Vinayagar Temple

இந்த ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. வராக சுவாமிக்கு உகந்த மாசி மாதத்தில் வரும் சதுர்த்தி நாளில் கரும்புச் சாற்றினால் இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்து சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்து வழிபாடு நடத்துகிறார்கள். இதைக்கண்டால் நம் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகள் தீர்ந்து வாழ்க்கை வளமாகும். கும்பகோணம் செல்பவர்கள் தவறாமல் கரும்பாயிரம் கொண்ட விநாயகரை தரிசிக்க, சத்தில்லாமல் சக்கையான கரும்புகள் முன்பை விடச் சுவையாக மாறியதுபோல் சுவாரஸ்யம் இல்லாத வாழ்க்கையும் இனிப்பாக மாறும் என்பது நம்பிக்கை.

கோவில் காலை 5 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 3 மணி முதல் 7:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எங்குள்ளது?

தஞ்சாவூர் மாவட்டம் எனகும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவிலின் திருமஞ்சன வீதியில் வட திசையில் கரும்பாயிரம் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் வராகப் பெருமாள் கோவிலும் உள்ளது. கும்பகோணம் ரயில் நிலையத்தில் இருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோவிலுக்கு ஆட்டோ, உள்ளூர் பேருந்து வசதிகள் அதிகம் உள்ளன.

இதையும் படியுங்கள்:
3,825 அடி உயரத்தில் அற்புத தீர்த்தம்... திண்டுக்கல் கொண்டரங்கி மலை அதிசய கோவில்!
கரும்பாயிரம் விநாயகர் - Karumbayiram Vinayagar Temple