

தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் பகுதியில் கொண்டரங்கி (Kondarangi Hills) கீரனூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த மலை. 'கொண்டல்' என்றால் மேகம் என்று பொருள். மேகங்கள் இறங்கி வந்து இந்த மலையைத் தொட்டுச் செல்வதால் இதற்கு 'கொண்டரங்கி மலை' என்று பெயர் வந்தது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,825 அடி (1,165.86 மீட்டர்) உயரம் கொண்டது.
சிவலிங்க வடிவம்:
இந்த மலை கூம்பு வடிவத்தில் பிரம்மாண்டமான சிவலிங்க வடிவில் இயற்கையாகவே அமைந்துள்ளது. இதனால் திருவண்ணாமலையைப் போலவே இந்த மலையையும் சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். மலையின் உச்சியை அடைய சுமார் 2 மணி நேரம் ஆகின்றது.
மலை ஏறுவதற்கு படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மலையின் உச்சியில் இருந்து சற்று கீழே, பாறையில் வெட்டப்பட்ட குகைக் கோவில் அமைந்துள்ளது. இங்கே பாறையைக் குடைந்து கட்டப்பட்ட மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவர் சுயம்பு லிங்கமாக தானே உருவாகி அருள்பாலிக்கிறார்.
இவரை வணங்கிட முக்தியும் மோட்சமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இம்மலையின் அடிவாரத்தில் கெட்டி மல்லீஸ்வரர் எனும் சிவன் மற்றும் அருள்மிகு பிரம்மராம்பா அம்பிகையும் கோவில் கொண்டு அருள்பாலிக்கின்றனர்.
சிறப்புகள்:
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்கள் வனவாசத்தின் பொழுது இங்கு தங்கி சிவனை வழிபடுவதற்காக குகைகளை செதுக்கி வழிபட்டதாகவும், அர்ஜுனன் தவம் செய்ததாகவும் வரலாறு கூறுகிறது. சித்தர்களும் தவசிகளும் இங்கு தியானம் செய்ததாகவும், இன்றும் அரூப வடிவில் சித்தர்கள் இங்கு வந்து தவம் செய்வதாகவும் நம்பப்படுகிறது. இங்கு சித்தர்களும் தவசிகளும் தியானம் செய்த ஒரு குகை உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் இங்கு தியானம் செய்வது சிறப்பு வாய்ந்தது.
மலையின் உச்சியில் எப்பொழுதும் வற்றாத நீர்ச்சுனை ஒன்று உள்ளது. இந்த தீர்த்தத்தைக் கொண்டே சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த ஊற்று நீரை தெளித்துக் கொள்ள தோல் வியாதிகள் குணமாகும் என்றும், இந்த நீர் மருத்துவ குணம் கொண்டது என்றும் கூறுகின்றனர். இந்த நீரே தீர்த்தமாக பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் இருந்து பழனி மலையையும் மற்றும் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளையும் நம்மால் தெளிவாகக் காணமுடிகிறது. ஆங்கிலேயர் காலத்தில் 'முக்கோண ஆய்வு'(Triangle Survey) திட்டத்திற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று மலைகளில் இதுவும் ஒன்றாகும். மற்றவை கொடைக்கானல் மற்றும் திருமலை மலைகள்.
இங்குள்ள கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் அனைத்தும் இம்மலையின் பாறையைக் கொண்டே கட்டப்பட்டவை. பாறைகளில் செதுக்கப்பட்ட செங்குத்தான படிக்கட்டுகள் இம்மலையில் ஏறுவதற்கு ஏதுவாக உள்ளன. உச்சியின் இறுதிப் பகுதியில் ஏறுவதற்குக் கடினமான பாறைகள் இருப்பதால் சங்கிலிகள் மற்றும் கைப்பிடிகள் ஏறுவதற்கு வசதியாக அமைக்கப்பட்டுள்ளது. மழை அல்லது பலத்த காற்று வீசும் காலங்களில் மலையில் ஏறுவது, இறங்குவது சற்று கடினமாக இருக்கும்.
புயலாய் வந்து வழிபடும் சித்தர்:
காகபஜேந்திரன் மற்றும் கணபதி என்ற இரண்டு துறவிகள் தங்களுடைய முன்வினை காரணமாக மீண்டும் காகங்களாக பிறந்து இம்மலையில் தங்கி ஈசனை வழிபட்டு தவம் இருந்ததாக தல வரலாறு கூறுகிறது. காகபஜேந்திர முனிவருக்கு மலையின் உச்சியில் ஒரு சிறிய குகைக் கோவில் உள்ளது.
இவர் அந்தி சாயும் நேரத்தில் சிறு புயல் வடிவில் வந்து இங்குள்ள ஈசனை வணங்குவதாகக் கூறுகின்றனர். இந்தப் புயல் மலை அடிவாரத்தில் தொடங்கி கோயிலுக்குள் நுழையும் பொழுது சில வினாடிகள் மட்டுமே நீடிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 8.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே கோவில் திறந்திருக்கும். அமாவாசை பௌர்ணமி போன்ற நாட்களில் மதியம் 1.30 மணி வரை திறந்திருக்கும். மலை உச்சியில் கடைகளோ, தண்ணீரோ கிடைப்பதில்லை. நமக்கு வேண்டிய ஸ்னாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்வது நல்லது.
இங்கு குரங்குகளும் அதிகம் என்பதால் சற்று கவனமாகச் செல்ல வேண்டும். காற்று பலமாக வீசும் காலங்களிலும், மழைக்காலங்களிலும் (பாறை வழுக்கும் என்பதால்) மலை ஏறுவதைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன் இங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு நேர மலையேற்றமும் அனுமதிக்கப்படுவதில்லை.
முக்கிய விழாக்கள்:
மகாசிவராத்திரி, சித்ரா பௌர்ணமி, கார்த்திகை தீபம், அமாவாசை மற்றும் பௌர்ணமி போன்ற நாட்களில் சிறப்பு பூஜைகள் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன.
எப்படி செல்வது?
அருகில் உள்ள ரயில் நிலையம் திண்டுக்கல். அங்கிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து செல்லும்பொழுது ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கொண்டரங்கி மலைக்குச் செல்ல பஸ் வசதிகள் உள்ளது.