

மா சிந்த்பூர்ணி கோவில் (Maa Chintpurni Temple) இமாச்சலப் பிரதேசத்தின் உனா (Una) மாவட்டத்தில் ஷிவாலிக் மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற இந்து சக்திபீடக் கோவிலாகும். இது பஞ்சாப் மாநில எல்லையை ஒட்டி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,200 அடி உயரத்தில் உள்ளது. மா சிந்த்பூர்ணி தேவி "சின்னமஸ்தா தேவி" என்றும் அழைக்கப்படுகிறாள். சிந்த்பூர்ணி என்றால் பக்தர்களின் கவலைகளை நீக்கி, அவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுபவர் என்று பொருள்.
சதி தேவியின் உடல் பாகங்கள் விழுந்த 51 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. புராணங்களின்படி சதி தேவியின் தலைப்பகுதி அல்லது பாதங்கள் இப்பகுதியில் விழுந்ததாக நம்பப்படுகிறது.
இந்த ஆலயத்தின் முதன்மை தெய்வம் மா துர்கையின் ரூபமான சின்னமஸ்தா தேவி (தலை இல்லாத வடிவம்) ஆகும். அசுரர்களை வதம் செய்த பிறகு, தனது தோழிகளான ஜெயா மற்றும் விஜயாவின் பசியைப் போக்க அன்னை பார்வதி தனது சொந்தத் தலையைத் துண்டித்து ரத்தம் வழங்கிய வடிவமே சின்னமஸ்தா தேவியாகும்.
பிண்டி வழிபாடு:
இங்கு பெரும்பாலான சக்தி பீடங்களைப்போல செதுக்கப்பட்ட சிலைகள் எதுவும் இல்லை. மாறாக தேவி ஒரு வட்ட வடிவிலான 'பிண்டி' (இயற்கையான கல்) வடிவில் சுயம்புவாக வழிபடப்படுகிறாள். 'சிந்தா' என்றால் கவலை. 'பூர்ணி' என்றால் நிவர்த்தி செய்பவள். பக்தர்களின் கவலைகளை முழுமையாக தீர்ப்பதால் இப்பெயர் பெற்றது.
கோவிலின் பிரதான வளாகத்தில் ஒரு பழமையான ஆலமரம் அமைந்துள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இந்த மரத்தின் கிளைகளில் கலவம் எனப்படும் சிவப்பு நூலை (புனிதக் கயிறுகளை) கட்டுவது வழக்கமாகும்.
சிந்த்பூர்ணி தேவி ஜுவாலாமுகி தேவியின் அவதாரமாகக் கருதப்படுகிறாள். மேலும் இவளை வழிபடுவது மன அமைதி, செழிப்பு மற்றும் ஞானத்தைத்தரும்.
வரலாற்றுப் பின்னணி:
புராணக் கதைகளின்படி, பண்டிட் மாய் தாஸ் (Mai Dass) என்ற தீவிர தேவி பக்தரின் கனவில் தேவி ஒரு சிறுமி வடிவில் காட்சியளித்து, சாக்புரோ (Chhaproh) கிராமத்தில் உள்ள இந்த மரத்தடியில் தன்னை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு கட்டளையிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன் பின்னரே இங்கு முறையான ஆலயம் அமைக்கப்பட்டது என்றும், இன்றும் பண்டிட் மாய் தாஸின் வம்சாவளியினரே இக்கோவிலின் தலைமை அர்ச்சகர்களாகத் தொண்டு செய்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
இக்கோவில் வளாகத்தில் வேண்டுதல் கயிறு கட்டும் பழமையான ஆலமரம் மற்றும் ஒரு புனித குளம் (அமிர்த குண்டம்) ஆகியவை உள்ளன. இந்தப் புனித குளம் மகாராஜா ரஞ்சித் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டது. புராணத்தின் படி அன்னை பகவதி ஒரு சிறுமியின் வடிவில் தோன்றி, ஒரு கல்லைப் பிடுங்குமாறு மை தாஸ் ஜிக்கு வழிகாட்ட, அதன் மூலம் புனித நீரூற்று வெளிப்பட்டது என்றும் கூறப்படுகிறது. இன்றும் இந்தக் குளமும், வரலாற்றுச் சிறப்புமிக்க கல்லும் பக்தர்களுக்கு புனித இடங்களாக திகழ்கின்றன.
சிறப்பு நாட்கள்:
நவராத்திரி திருவிழாக்கள் மற்றும் ஆடி மாதத்தில் நடைபெறும் 'மாதா தா மேளா' திருவிழாவின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். இந்நாட்களில் கோவில் 24 மணி நேரமும் திறந்திருப்பதுண்டு.
கோவில் திறந்திருக்கும் நேரம்:
தினமும் காலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். காலை ஆரத்தி 6 மணிக்கும், மாலை ஆரத்தி 8 மணிக்கும் என இரண்டு வேளைகள் ஆரத்தி நடைபெறும்.
எப்படி செல்வது?
காங்க்ராவில் உள்ள காகல் (Gaggal) விமான நிலையம் சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அம்ப அந்தௌரா (Amb Andaura) ரயில் நிலையம் சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாபின் முக்கிய நகரங்களில் இருந்து இமாச்சலப் பிரதேச அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.