

17-2-1985 சிவராத்திரி (Maha Shivratri) தினத்தன்று பெரும் திரளாகக் கூடிய இந்திய மற்றும் வெளிநாட்டு பக்தர்களிடையே பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாய்பாபா ஆற்றிய அருளுரை!
இன்று சிவராத்திரி தினம் என்று சொல்லப்படுகிறது. ராத்திரி என்றால் இரவு என்று பொருள். இரவிற்கான தனிச் சிறப்பு என்ன? இரவு என்பது இருளுக்கான இன்னொரு சொல். சிவம் என்றால் புனிதம் என்று அர்த்தம். ஆகவே சிவராத்திரி என்பது இருளில் புதைந்திருக்கும் புனிதத்தைப் பற்றிக் கூறுகிறது. அறியாமையின் நடுவே உள்ள ஞானத்தை அது குறிப்பிடுகிறது. அறியாமையும் ஞானமும் இரு வேறு விஷயங்கள் அல்ல. அடிப்படையில் அவை இரண்டுமே ஒன்று தான். அவை த்வைதத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒரே அடிப்படைக் கொள்கையின் இரு வேறு எதிர் துருவங்களே அவை.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
சிவராத்திரி தினமானது மனதிற்கும் கடவுளுக்கும் இடையே ஒருவன் நட்பை ஸ்தாபிக்க முயற்சி செய்யும் தினமாகும்.
ஒரே தெய்வீகமானது எங்கும் பரவி உள்ளது, அதை எங்கும் காணலாம் என்பதை ஒருவனை உணரவைக்கிறது சிவராத்திரி.
சிவன் கைலாஸத்தில் உறைகிறான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் கைலாஸம் என்பது எங்கே இருக்கிறது? கைலாஸம் என்பது நமது சந்தோஷமே தான், நமது ஆனந்தமே தான். இதற்கு அர்த்தம் என்னவென்றால் ஈஸ்வரன் கைலாஸம் என்னும் பேரின்பத்தில் இருக்கிறான் என்பதேயாகும். நாம் அப்படி ஒரு சந்தோஷத்தையும் பேரின்பத்தையும் நமது மனதில் உருவாக்கிக் கொண்டால் அதுவே தான் கைலாஸமாகும்.
இந்த சந்தோஷத்தை ஒருவன் எப்படிப் பெறுவது? நாம் தூய்மையையும் நிலைமாறாத தளராத உறுதியையும், புனிதத்தையும் அபிவிருத்தி செய்யும் போது அது வருகிறது.
பின்னர் இதயமானது சாந்தத்தினாலும் ஆனந்தத்தினாலும் நிரம்பி வழிகிறது. பிறகு உங்கள் இதயமே கைலாஸமாக ஆகிறது. சிவன், உங்கள் உடல் என்னும் கோவிலில் உங்கள் இதயம் என்னும் கர்பக்ருஹத்தில் இருப்பான்.
முதல் பார்வையில் எல்லோருமே பக்தர்களாகவே திகழ்கிறார்கள். ஆனால் தனிப்பட்ட மனிதர்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக நடக்கிறார்கள். ஒரு இரும்பு குண்டையும் ஒரு உலர்ந்த இலையையும் அருகருகே நீங்கள் வைத்தால் அப்போது காற்று அங்கே வீசவில்லை என்றால் இரண்டுமே அதனதன் இடத்தில் நிலையாக இருக்கும். ஆனால் தென்றல் காற்று வீசத் தொடங்கினால் உலர்ந்த இலை பல மைல் தூரத்திற்கு எடுத்துச் செல்லப்படும். ஆனால் இரும்புக் குண்டோ அதன் இடத்தில் உறுதியாக நிலையாக இருக்கும்.
ஒருவன் உண்மையான பக்தியையும் உறுதியான நம்பிக்கையையும் கடவுளிடம் கொண்டிருப்பானானால் அவன் இரும்புக் குண்டைப் போல நிலையாக, அசைக்க முடியாதபடி இருப்பான். இலை போல ஒருவன் இருந்தால் கஷ்டங்களினாலும், பிரச்சினைகளாலும் அவனை பக்தன் என்று கூறுவது போலித்தனமாகும். நாம் தூய்மையான உறுதியான பக்தியையும் நம்பிக்கையும் அபிவிருத்தி செய்து கொள்ள வேண்டும்.
உலகில் நிலையான தாய்மார்கள் இல்லை. நிரந்தரமான ஒரே தாயார் தெய்வீக மாதா தான். ஸ்வாமி அடிக்கடி உங்களிடம் நினைவு படுத்துவது உங்கள் ஆன்மீக வாழ்க்கையில் சத்தியமே உங்கள் தந்தை அன்பே உங்கள் தாயார் என்பதைத் தான். ஞானமே உங்கள் மகன். அமைதியே உங்கள் மகள். பக்தியே உங்கள் சகோதரன். யோகிகளே உங்கள் நண்பர்கள். இந்த ஆன்மீகப் பாதையில் இவர்களே உங்களை எப்போதும் தொடரும் உங்கள் உண்மையான சுற்றத்தினர் ஆவர். இப்படியான சுற்றத்தை, நட்பை நீங்கள் பொக்கிஷமாகக் கருதும் போது உலக தளைகளை நீங்கள் அறுத்து சுதந்திரர்களாக ஆகி விடலாம்.
இருள் இருக்கும் போது தான் ஒளிக்கு மதிப்பு உண்டு. அதற்கென தனியே மதிப்பு இல்லை. ஆகவே பிரச்சினைகள் வரும் போதும் துன்பங்கள் நேரும் போதும் தெய்வீகக் கொள்கையை எழுப்புங்கள், அதுவே இருளான சமயங்களில் ஒளியைத் தரும்.
சிவராத்திரி பற்றி வருடத்திற்கு ஒரு முறை சிந்திப்பது பயனளிக்காது. ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு இரவும் நீங்கள் தெய்வீகத்தை நினைக்க வேண்டும், உங்கள் நேரத்தைப் புனிதமாக ஆக்க வேண்டும். ஏனெனில் உண்மையாகச் சொல்லப் போனால் காலம் என்னும் கொள்கையே சிவன் ஆகும். நீங்களே சிவன். உங்களது உண்மையான, யதார்த்தமான இந்த சிவதத்துவத்தை புரிந்து உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.