மகா சிவராத்திரி: ஸ்ரீகாளஹஸ்தி பிரம்மோற்சவம் முதல் குமரி சிவாலய ஓட்டம் வரை - சிறப்புத் தொகுப்பு!

மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று கோவில்களில் 15-ம் தேதி நடைபெற உள்ள சிறப்பு வழிபாடுகளை பற்றி பார்க்கலாம்.
mahashivratri worship
Lord shiva, kalahasti, sivalaya ottam
Published on

நாடு முழுவதும் இந்துக்கள் கொண்டாடும் முக்கியமான பண்டிகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது மகா சிவராத்திரி. மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகா சிவராத்திரி மிகவும் விசேஷமானது. அந்த வகையில் இந்தாண்டுக்கான மகா சிவராத்திரி வரும் 15-ம்தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் இரவு முழுவதும் தூங்காமல் சிவனை நினைத்து வழிபட்டு விரதம் இருப்பார்கள்.

அன்றைய தினம் சிவன் கோவில்களில் இரவு முழுவதும் பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறும். அந்த வகையில் மூன்று கோவில்களில் மகா சிவராத்திரி அன்று நடைபெற உள்ள சிறப்பு வழிபாடுகளை பற்றி பார்க்கலாம்.

ஸ்ரீகாளஹஸ்தி :

ஸ்ரீகாளஹஸ்தி வாயு க்ஷேத்திரம் எனப் போற்றப்படுகிறது, இது பஞ்ச பூத ஸ்தலங்களில் காற்றின் அங்கமாக விளங்குகிறது. இந்த கோவிலில் வாயு லிங்கம் சுயம்பு (சுயமாக வெளிப்பட்டது) என்று நம்பப்படுகிறது.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இந்தாண்டுக்கான வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நாளை (10-ம்தேதி) தொடங்கி 22-ம் தேதி வரை 13 நாட்கள் நடைபெற உள்ளது.

இதையும் படியுங்கள்:
பாவங்களை தீர்க்கும் மகா சிவராத்திரி!
mahashivratri worship

நாளை கண்ணப்பர் கோவில் வளாகத்தில் கொடியேற்றமும், 11-ம்தேதி காளஹஸ்தி கோவில் வளாகத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றத்துடன் மகாசிவராத்திரி விழா தொடங்குகிறது.

15-ம்தேதி மகாசிவாராத்திரி அன்று இரவு முதல் மறுநாள் 16-ம்தேதி காலை வரை (இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை) முக்கிய சடங்குகள், பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளது.

இரவு முழுவதும் நடக்கும் முக்கிய சடங்குகள் :

* மஹா ருத்ராபிஷேகம் (பல சுற்றுகள்)

* 108 அல்லது 1008 இலைகளைக் கொண்ட வில்வ அர்ச்சனை

* தொடர்ந்து "ஓம் நம சிவாய" கோஷம்

* பஜனைகள் மற்றும் சிவ சஹஸ்ரநாம பாராயணம்

* இரவு முழுவதும் ஜாகரன் (இரவு விழிப்புணர்வு) (ஜாகரன் என்பது இரவு முழுவதும் விழித்திருந்து, பஜனைகள், பாடல்கள் மற்றும் நடனங்கள் மூலம் இந்து தெய்வங்களை (சிவன்) வழிபடும் ஒரு பாரம்பரிய சடங்காகும்.

நள்ளிரவில் நிகழும் நிஷித்த காலம், சிவ வழிபாட்டில் அண்ட சக்திகள் மிகவும் வலுவாக இணையும் தருணமாகக் கருதப்படுகிறது.

பிப்ரவரி 16-ம்தேதி விரதம் நிறைவு மற்றும் காலை சடங்குகள் :

* அதிகாலை அபிஷேகம்

* மங்கள ஆரத்தி

* புனித பிரசாத விநியோகம்

* பக்தர்களுக்கான விரத நிறைவடைகிறது

மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் காலை மற்றும் இரவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் பூத, கிளி, யாளி, அன்னம், மயில், சேஷ, நந்தி, சிம்ம காமதேனு, யானை போன்ற பல்வேறு வாகனத்திலும் நான்கு மாட வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.

16-ம்தேதி காலை 11 மணிக்கு தேர் திருவிழாவையொட்டி நான்கு மாட வீதிகளில் இரண்டு தேர்களில் காளஹதீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். அன்று இரவு 9 மணிக்கு நாரதர் குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகிறது.

17-ம்தேதி காலை 10 மணிக்கு காளஹதீஸ்வரரும், ஞானப்பிரசுனாம்பிகை அம்மையாருக்கும் திருக்கல்யாண உற்வசம் நடைபெறுகிறது.

20-ம்தேதி கொடியிறக்கமும், 22-ம்தேதி பள்ளியறையில் ஏகாந்த சேவையும் நடைபெறும்.

மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா:

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழா வருகிற 15-ம்தேதி இரவு 10 மணிமுதல் மறுநாள் (16-ம் தேதி) காலை வரை நடைபெற உள்ளது.

சிவராத்திரியையொட்டி அம்மன், சுவாமிக்கு விடிய, விடிய அபிஷேக பூஜைகள் நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் முழுவதும் கோவில் நடை மூடாமல் திறந்திருக்கும் என்பதால் பக்தர்கள் இரவு முழுவதும் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
ராகு-கேது தோஷம் நீக்கும் காளஹஸ்தி தலத்தின் இந்த ரகசியங்கள் உங்களுக்குத் தெரியுமா?
mahashivratri worship

மகா சிவராத்திரி அன்று கோவிலில் 4 கால பூஜையையொட்டி சுவாமிக்கு இரவு முழுவதும் நடைபெறும் பூஜை அபிஷேகத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர் போன்ற அபிஷேக பொருட்களை 15-ம்தேதி மாலைக்குள் மீனாட்சி அம்மன் கோவில் அலுவலகத்தில் பக்தர்கள் ஒப்படைக்கலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் :

மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கு ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டம் எனப்படுகிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் குமரி மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த ஓட்டம் ஆன்மிகம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும்.

மகா சிவராத்திரியை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் வருகிற 14-ந் தேதி தொடங்குகிறது.

இந்த ஓட்டம் முன்சிறையில் உள்ள திருமலை சூலபாணி மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர்கோவில், திருப்பன்னிப்பாகம் கிராதமூர்த்தி கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு காலகாலர் கோவில், திருவிடைக்கோடு சடையப்பர் கோவில், திருவிதாங்கோடு பக்தவத்சலர் கோவில், திருப்பன்றிகோடு பருதிபாணி மகா தேவர் கோவில் போன்றவற்றுக்கு சென்று இறுதியில் திருநட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் முடிவடையும் போது இந்த சிவாலய ஓட்டம் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருக்கும்.

இதையும் படியுங்கள்:
சிவராத்திரிக்கு 'சிவாலய ஓட்டம்' - பிப்ரவரி 25 தொடக்கம்
mahashivratri worship

சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் ஒவ்வொரு கோவில் வளாகத்தில் உள்ள குளத்தில் குளித்து விட்டு கோவிலுக்குள் செல்லவேண்டும் என்பதும், அங்கு வழிபட்ட பின்னர் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டும் என்பதும் ஐதீகமாக இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com