முன்கோபத்தைப் போக்கும் எட்டெழுத்து மந்திரக் கோயில்!

Perumal Temple
Perumal
Published on

கோபத்தை தனது மூக்கின் நுனியிலேயே வைத்திருக்கும் முனிவர் துர்வாசர். கோபம் வந்தால், எதிரில் நிற்பவர் யாராக இருந்தாலும், ‘இந்தா பிடி சாபத்தை’ என்று கொடுத்து விடுவார். ஒருமுறை மும்மூர்த்திகளில் கோபம் கொள்ளாத, சாத்வீகமானவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க வேண்டிய நிலை தேவர்களுக்கு ஏற்பட்டது. இதற்கான பொறுப்பை அவர்கள் துர்வாச முனிவரிடம் ஒப்படைத்தனர்.

துர்வாசரும் அதை ஏற்றுக்கொண்டு கயிலாயம் மற்றும் பிரம்ம லோகத்திற்கு சென்றார். கடவுள்களின் அனுமதியின்றி உள்ளே சென்றபோது சிவனும், பிரம்மனும் அவரைக் கடிந்து கொண்டனர். ஆனால், அதேசமயம் வைகுண்டம் சென்றபோது திருமால் அறிதுயில் கொண்டிருந்தார். அவரை துயில் எழுப்ப நினைத்த முனிவர், பெருமாளின் மார்பில் மிதித்தார். அப்போதும் கூட திருமால் சிறிதும் கோபப்படாமல், சிரித்துக்கொண்டே அவரை வரவேற்றார். ‘பக்தனின் பாதம் பட தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என்றார் பெருமாள். துர்வாசருக்கு புரிந்துபோயிற்று சாத்வீகமான கடவுள் யார் என்று.

இதையும் படியுங்கள்:
தீபாவளி குறித்த இந்த அரிய தகவல்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Perumal Temple

திருமாலின் திருமார்பில் குடியிருக்கும் மஹாலட்சுமி தேவிக்கு, தனது கணவரை மிதித்த துர்வாசரின் செயல் பிடிக்கவில்லை. எனவே, துர்வாசரைக் கண்டிக்காத பெருமாளை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். ‘’ரிஷியே! தங்கள் கோபச் செய்கையால் எனது மனைவியைப் பிரிந்தேன். இனியாவது சாந்த குணம் பெறுங்கள். ரிஷிகளுக்கு சாந்த குணமே சிறந்தது''என்றார் பெருமாள். துர்வாசரும் அதனை ஏற்றார்.

துர்வாச முனிவர் தாம் திருமாலை கோபத்தில் அவமதித்த பிழைக்காக மனம் வருந்தினார். திருமாலை நோக்கி கடுந்தவமிருந்து மீண்டபொழுது ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தின் வடிவில் பூமியில் ஒரு திருக்கோயிலை அமைத்தார். அதுவே ஈரோட்டில் உள்ள கஸ்தூரி ரங்கநாதர் ஆலயமாகும். இங்கு கோப குணம் கொண்டவர்கள் கோபம் குறையவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும் இத்தல பெருமாளிடம் பிரார்த்தனை செய்து பலன் அடைகின்றனர்.

இதையும் படியுங்கள்:
கண் திருஷ்டி அறிகுறிகள் என்ன? அவற்றை போக்க என்ன செய்வது?
Perumal Temple

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்தத் திருக்கோயிலின் கருவறையில் கஸ்தூரி ரங்கநாதப் பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவியுடன் பள்ளிகொண்ட கோலத்தில், வலது கையில் தண்டத்தை பிடித்தபடி காட்சி தருகிறார். தலைக்கு மேலே ஆதிசேஷன், ஐந்து தலைகளுடன் குடையாக இருக்கிறார். சுவாமிக்கு தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கர்ப்பிணிப் பெண்கள், சுகப்பிரசவம் ஆவதற்காக சுவாமிக்கு கஸ்தூரி எனும் மருந்து படைத்து வழிபடும் வழக்கம் இருந்தது. இதன் காரணமாகவே சுவாமிக்கு, ‘கஸ்தூரி ரங்கநாதர்'என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோயில், கோட்டை ஈஸ்வரன் ஆலயத்திற்கு அருகில் உள்ளது. பெருமாள் கோயில் வாசலில் காவல் நிற்கும் ஜயன், விஜயன் ஆகியோருடன் சன்னிதிக்குள் பெருமாளின் திவ்ய தரிசனத்தைக் காண்பது கோயிலின் சிறப்பம்சம். மேலும், இங்குள்ள ஆஞ்சனேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என்கிறார்கள். மகாலஷ்மி தாயார் தனிச் சன்னிதியில் கமலவல்லி தாயாராகக் காட்சி தருகிறார். திருப்பதி வேங்கடமுடையான், சக்கரத்தாழ்வார், தன்வந்திரி, ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களும் அழகுற தனித்தனி சன்னிதிகளில் காட்சி தருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com