நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா? மயிலை வீரபத்திரரை வணங்குங்கள்!

veerabhadra-swamy-temple
veerabhadra-swamy-temple
Published on

சென்னை மயிலாப்பூர் முண்டகக்கண்ணி மாதவப் பெருமாள் கோயில்களின் அருகே அமைந்துள்ளது வீரபத்ர சுவாமி திருக்கோயில். இது ஒரு பிரார்த்தனை தலமாகும். இங்கு மூன்று பௌர்ணமி தினங்களில் சேர்ந்தாற்போல் வீரபத்திரர்க்கு வெற்றிலை மாலை சாத்தி அர்ச்சனை செய்து மனமுருகி வழிபட்டால் நினைத்த காரியங்கள் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்புகின்றனர் .இத்தலத்தில் இவர் கல்யாண வீரபத்திரராக அருட்காட்சி அளிக்கிறார். விதியை மாற்றும் வீரபத்திரர் என இவரை பக்தர்கள் அன்புடன் வழிபடுகின்றனர்.

மன்னிப்பு:

வீரபத்திரர் வெற்றிலை கொடியுடன் கூடிய இத்தலத்தை அடைந்தவுடன் அவருக்கு மனதில் இனம் புரியாத அமைதி ஏற்பட்டது. வெற்றிலையின் நறுமணம் அவருக்கு மேலும் அமைதியைத் தந்ததால் அன்று முதல் வெற்றிலை அவருக்கு பிடித்த ஒன்றாக மாறியது. இத்தலத்தில் சினம் தணிந்த வீரபத்திரர் சாந்தமூர்த்தி ஆனவுடன், தாட்சாயணியான பார்வதி தேவி அவர் முன் தோன்றி தன் வளர்ப்புத் தந்தையின் அறியாமையை மன்னித்து அவரை உயிர் பெறச் செய்யுமாறு வேண்டினார்.

வரம்:

தட்சன் தன் தவறை மன்னிக்கும்படி வேண்டி சாம வேதங்களை இசைத்தான். அதனால் மனம் மகிழ்ந்த ஈசனின் அம்சமான வீரபத்திரர் தட்சனிடம் என்ன வரம் வேண்டும்? என்று கேட்டார். அதற்கு தட்சன் தன்மகள் தாட்சாயணியின் திருமண வைபவத்தைத் தான் காணவேண்டும் என வரம் கேட்க, அதற்கு பதில் அளித்த வீரபத்திரர் தாட்சாயணியை பங்குனி உத்திர நன்னாளிலே திருமணம் செய்து கொள்வதாக வாக்களித்தார் .

அபயாம்பாள்:

தாட்சாயணி தன் வளர்ப்புத் தந்தைக்கு அபயம் தந்ததால் அன்று முதல் அபயாம்பாள் என வணங்கப்படுகிறார்.

கல்யாண வீரபத்திரர்:

திருமால் தன் தங்கையின் திருமண வைபவத்தை ஒரு பங்குனி உத்திர நன்னாளில் முப்பத்து முக்கோடி தேவர்கள் புடை சூழ சீர் கொண்டு வந்து நடத்தினார். அன்று முதல் இத்தல வீரபத்திரர் கல்யாண வீரபத்திரர் என போற்றப்படுகிறார்.

திருக்கல்யாணம்:

பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும் திருத்தலம் இது. திருவிழாவின் கடைசி நாளான பங்குனி உத்திர நாளில் வீரபத்திரருக்கும் அபயாம்பாளுக்கும் திருக்கல்யாணம் மிகச்சிறப்பாக நடைபெறும். அன்று தட்சனுக்கு வீரபத்திர ஸ்வாமி திருக்கல்யாணக் காட்சியை அருள்வார்.

சிறப்பான சீர்:

பெருமாள் தன் தங்கையான பார்வதியின் திருக்கல்யாண வைபவத்தை சீர் கொண்டு வந்து நடத்தித்தருவது இத்தலத்தில் சிறப்பம்சமாகும்.

இதையும் படியுங்கள்:
'கோவிந்தா... கோவிந்தா' – மோட்சம் தரும் திருநாமம்!
veerabhadra-swamy-temple

ஒற்றுமை:

இத்திருக்கோவில் சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. பக்தர்கள் வேண்டியதை வேண்டியாங்கு பெற வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை போட்டு பிரார்த்தித்துக் கொண்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

சிறப்பம்சம்:

ஆலயத்தில் உள்ள அனைத்து விநாயகப் பெருமான்களும் வடக்கு நோக்கி எழுந்தருளியிருப்பது சிறப்பான அம்சம்.

தெய்வங்கள்:

வீரபத்திரர், அபயாம்பாள், ஆதிசங்கரர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், சரபேஸ்வரர், விருப்பாட்சீஸ்வரர், விசாலாட்சி, சீர் கொண்டு வந்த பெருமாள், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி, கால வீர பைரவர், விருட்ச கணபதி, சிவசுந்தர விநாயகர், சிவதுர்க்கை, விஷ்ணு துர்க்கை என அருளாட்சி புரிந்து வருகின்றனர்.

தனி சன்னதி:

சனீஸ்வரர், நவகிரகங்கள், தியான அனுமன் ஆகியோர் இங்கு தனி சந்நிதி கொண்டுள்ளனர்.

திருவிழாக்கள்:

பங்குனி உத்திரம் ,சித்ரா பௌர்ணமி, ஆனித் திருமஞ்சனம், ஆடிப்பூரம், ஆவணி மூலம் ,புரட்டாசி நிறைமணி காட்சி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம் (அன்று அர்த்தநாரீஸ்வரர் சிறப்பு அலங்காரம்) மார்கழி ஆருத்ரா தரிசனம், தைப்பூசம், மாசி கடலாடு உற்சவம், கந்த சஷ்டி உற்சவம் என ஆண்டு முழுவதும் திருவிழாக் கோலம் காணும் வீரபத்திரரை வணங்கி சகல பாக்கியங்களும் பெறுவோமாக!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com