குகைக்குள் ஓடும் வற்றாத நீரூற்று: பிடார் நரசிம்மர் கோவில் ஆன்மீக ரகசியங்கள்!

வற்றாத இயற்கை நீரூற்றின் நடுவே எழுந்தருளியுள்ள சுயம்பு நரசிம்மரின் அற்புதப் பயண வழிகாட்டி.
நரசிம்மர் கோவில் - Narasimha Jharni,
நரசிம்மர் கோவில் - Narasimha Jharni,
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

ஸ்ரீ க்ஷேத்ர ஜர்னி நரசிம்மர் கோவில் (Narasimha Jharni Cave Temple) என்பது கர்நாடக மாநிலம் பிடார் (Bidar) நகருக்கு அருகில் மல்காபூர் (Malkapur) சாலையில் மணிசூலா (Manichoola) மலைக்குன்றுகளின் அடிவாரத்தில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற மற்றும் வரலாற்று சிறப்புமிக்க குகை கோவில் ஆகும்.

விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம மூர்த்தி இங்கு சுயம்புவாக காட்சியளிக்கிறார். இந்த ஆலயம் மணிச்சூலா மலைத்தொடரின் கீழ் சுமார் 300 மீட்டர் (1000 அடி) நீளம் உள்ள ஒரு குறுகிய மலைக்குகையின் முடிவில் அமைந்துள்ளது.

நரசிம்மருக்கு காட்டிலும், மலையின் உச்சியிலும் கோவில் அமைந்திருப்பதை கண்டிருக்கிறோம். அங்கு சென்று தரிசனமும் செய்து இருப்போம். ஆனால் ஆயிரம் அடி நீளமான குகைக்குள் எப்போதும் சூழ்ந்துள்ள நீரில் இருந்தபடியே சேவை சாதிக்கும் ஸ்ரீ நரசிம்மரை கண்டிருக்கிறோமா?

குகைக்குள் ஆண்டு முழுவதும் வற்றாத இயற்கை நீர் ஊற்று ஓடிக்கொண்டே இருக்கும். பக்தர்கள் இந்த குகைக்குள் இறங்கி 4 முதல் 5 அடி ஆழமுள்ள அதாவது இடுப்பு முதல் மார்பளவு வரை குளிர்ந்த நீரில் நடந்து சென்றே குகையின் இறுதியில் இருக்கும் நரசிம்மரை தரிசிக்க முடியும்.

சுயம்பு மூர்த்தி:

குகையின் இறுதிச் சுவரில் நரசிம்மர் சுயம்புவாக (தானே தோன்றியவராக) காட்சியளிக்கிறார். அவருடன் அரக்கன் ஜலாசுரன் வழிபட்ட சிவலிங்கமும் அங்கே உள்ளது. வைணவ மரபின் 108 அபிமான க்ஷேத்திரங்களில் ஒன்றாக இத்தலம் போற்றப்படுகிறது. இது வைணவ மற்றும் சைவ ஒற்றுமைக்கு ஒரு சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

தல வரலாறு:

புராணங்களின்படி இரணியகசிபுவை வதம் செய்த பிறகு, நரசிம்மர் இந்த குகையில் வாழ்ந்து வந்த ஜலாசுரன் (ஜராசுரன்) என்ற சிவபெருமானின் தீவிர சிவ பக்தனான அரக்கனை வதம் செய்ய இங்கு வந்தார். நரசிம்மரால் வதம் செய்யப்பட்ட ஜலாசுரன் தன் தவறை உணர்ந்து இறக்கும் தருவாயில் நரசிம்மப் பெருமானிடம் இந்த குகையிலேயே தங்கி பக்தர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்றும், தான் என்றும் அழியாமல் இருக்க தங்களது பாதங்களைக் கழுவிச் செல்லும் நீராக மாற வேண்டும் என்றும் வரம் கேட்டான். அவனது வேண்டுதலை ஏற்ற பெருமான் அங்கு எழுந்தருளினார்.

நரசிம்மர் கோவில் - Narasimha Jharni,
நரசிம்மர் கோவில் - Narasimha Jharni,

அந்த அரக்கனே இன்று வரை குகைக்குள் வற்றாமல் ஓடும் நீரூற்றாக மாறி நரசிம்மரின் பாதங்களை நனைத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

எனவே இக்கோவில் 'நரசிம்ம ஜர்னா' (ஜர்னா என்றால் நீரூற்று) என்று அழைக்கப்படுகிறது. இந்த நீர் மருத்துவ குணம் வாய்ந்தது என்பதால் (கந்தக சத்து (Sulphur) நிறைந்துள்ளது) இதில் நடந்து செல்வது சரும நோய்களை குணப்படுத்தும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

இந்த குகையின் கூரையில் ஏராளமான வௌவால்கள் கூட்டமாக வாழ்கின்றன. எனினும் அவை பக்தர்களை தொந்தரவு செய்வதில்லை. குகைக்குள் மின்விளக்கு மற்றும் காற்றோட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. குகைக்குள் மார்பளவு தண்ணீர் இருப்பதாலும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருப்பதாலும் முதியவர்கள், மூச்சுத்திணறல் பிரச்னை உள்ளவர்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் சிறிய குழந்தைகளை இங்கு அனுமதிப்பதில்லை.

இதையும் படியுங்கள்:
பூமிக்கு அடியில் இவ்வளவு பெரிய குகைக்கோவிலா? உள்ளே சென்றவர்கள் பார்த்த அந்த அதிர்ச்சி காட்சி!
நரசிம்மர் கோவில் - Narasimha Jharni,

செல்வதற்கு ஏற்ற காலம்:

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் இங்கு செல்ல மிகவும் ஏற்ற காலமாகும். உள்ளே நனைந்து செல்ல வேண்டி இருப்பதால் மாற்று உடைகளை உடன் எடுத்துச்செல்வது நல்லது. உடைமைகளை வைப்பதற்கு லாக்கர் வசதியும், ஆடைகள் மாற்றும் அறைகளும் உள்ளன.

தரிசன நேரம்:

கோவில் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் பார்க்க அனுமதிக்கப்படுகிறது.

எங்கு அமைந்துள்ளது?

பிடார் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கிருந்து ஆட்டோ அல்லது உள்ளூர் வாகனங்கள் மூலம் 10 நிமிடங்களில் கோவிலை அடையலாம். அருகில் உள்ள விமான நிலையம் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் (140 கி.மீ.) தொலைவில் உள்ளது.

இதையும் படியுங்கள்:
கேட்ட வரம் தரும் ஆர். குன்னத்தூர் வைகுண்ட பெருமாள்! இதுவரை அறியாத ஆன்மீக தகவல்கள்!
நரசிம்மர் கோவில் - Narasimha Jharni,
logo
Kalki Online
kalkionline.com