

ராமாயணத்தில் தமிழகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று முக்கியமான கோயில்களில் ஒன்று நவபாஷாணம் நவகிரகங்கள் கோயில், இது ராமேஸ்வரத்திலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவிலும், தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள தேவிபட்டினத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான இந்து கோயிலாகும்.
ராவணன் சீதையை இலங்கைக்கு கடத்திச் சென்றான். மனைவியைப் பிரிந்த ராமர், தெற்கு திசை நோக்கி வந்தார். ராமர் சீதையைத்தேடி பயணம் செய்தபோது அசரீரி வாக்காக மகிஷாசுரமர்த்தினி நவகிரக வழிபாடு செய்தால் சீதாவுடன் சேர்வீர்கள் என்று சொன்னதால் கிரகதோஷம் தீர 9 வகை மண்ணைப் பிடித்து வைத்து இராமர் வழிபட வந்த இடம்தான் தேவிபட்டிணம், அதன் கடற்கரையில் ராமர் பிடித்து வைத்த மண்ணை வைக்கும்போது சீற்றமுடன் கடல் இருந்ததால், அந்தமண் அலைகளால் அடித்துச் செல்லாமல் இருக்க அங்கு கரை மீது குடிகொண்டுள்ள பெருமாளை மனதிற்குள் வழிபட்டார்.
அங்கு ஆதி ஜெகநாதப் பெருமாள் எழுந்தருளி கடல் அரசனை அலைகளின்றி ஆரவாரமற்ற அமைதியுடன் இருக்க செய்தார். கடலடைத்த ஆதி ஜெகந்நாதர் கருணையால். கடல் நீரில் நிலைகொண்ட நவபாஷாணம்- நாளடைவில் இறுகி கற்களானது. அதனடிப்படையில் இங்குள்ள சுவாமி, ‘கடல் அலை அடைத்த பெருமாள்’ என பெயர் பெற்றார். காலப்போக்கில் ‘கடலடைத்த பெருமாள்’ என மருவிவிட்டது. இன்றும் இங்கு அலை இல்லாமல் அமைதியாக கடல் காட்சியளிக்கிறது.
ராமர் பிரதிஷ்டை செய்த நவபாஷாண நவக்கிரகங்களை வழிபட்டால் தோஷம் நீங்கி கிரகங்களால் நன்மை ஏற்படும் என்பதால் பிதுர்கடன், தர்பணம், சிரார்த்தம் நவகிரக தோஷம் முதலிய நிவர்த்திக்கு பிரார்த்தனைத் தலமாக தேவிபட்டினம் மாறியது. ஒவ்வொருவரும் தாங்களே நவபாஷாணத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். நேர் எதிரில் சக்ர தீர்த்தம். காவல் தெய்வம் கருப்பர். அருகில் ஆதிஜகநாதப் பெருமாள் கோயிலும் உள்ளது. ராமர் பிரதிஷ்டை செய்ததாகக் கருதப்படும் நவக்கிரகங்களை வணங்கிய பின்னர், கடலை அடக்க உதவியதாகக் கூறப்படும் இந்த பெருமாளை வழிபடுவது சிறப்பு.
பொங்கிப் பெருகி வந்த அலைகளை அடைத்தருளியதால், இங்கு நாராயணர், ``கடலடைத்த ஆதி ஜெகந்நாதப் பெருமாள்’’ என்று போற்றப்படுகின்றார். தேவிபட்டிணம் கடற்கரையில், ராமபிரானின் கரங்களால் ஸ்தாபிக்கப்பட்ட நவக்கிரகங்களை வணங்கி, வழிபட்டு, பின்னர் சற்று தூரம் நடந்தால், விமானத்துடன் கூடிய பெருமாள் கோயில் காணப்படுகின்றது.
முதலில் முன்மண்டபத்தில் பலிபீடம் மற்றும் பெரிய திருவடிகளான கருடாழ்வார் தரிசனம். மகாமண்டபத்தின் வெளிப்புற சுவற்றில், ஆஞ்சநேயர் அருள் பாலிக்கின்றார். பின், நேராக அர்த்தமண்டபம் அடைந்து, தேவி பூதேவி உடனான கடலடைத்த ஆதி ஜெகந்நாத பெருமாளைக்கண்டு பரவசம் அடையலாம்.
தனது மேலிரு கரங்களில் சங்கு - சக்கரம் ஏந்தி, கீழிரு கரங்களில் அபய - வரதம் காட்டி, பெரியதொரு திருமேனியராக, அமர்ந்தவண்ணம் அருட்சேவை சாதிக்கின்றார்.
கட்டடக்கலை மற்றும் வரலாற்று ஆய்வுகளின்படி, இந்த ஆலயம் 18th நூற்றாண்டு பகுதியைச் சார்ந்தது என அறியப்படுகிறது. மேலும், இது தமிழக அரசின் வரலாற்றுப் பதிவேடுகளில் இடம்பெற்றுள்ள ஒரு பாரம்பரியத் திருக்கோயிலாகும். ஆன்மீக அமைதியும், பழமையான கட்டிடக்கலையும் ஒருங்கே அமைந்த இத்தலம், இராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது.
இங்குள்ள பெருமாள், நவக்கிரகங்களின் தோஷங்களை நீக்குபவராக கருதப்படுகிறார்; பக்தர்கள் பல்வேறு சர்ப்ப தோஷங்கள், திருமணத் தடைகள் நீங்க இங்கு வந்து வழிபடுகின்றனர். தேவிப்பட்டினம் கடலடைத்த பெருமாள், கடல் அலைகளை அடக்கிய கருணையும், நவக்கிரகங்களின் சக்திக்கு காவலாக இருப்பதும், பக்தர்களின் தோஷங்களை நீக்கி அருள்பாலிப்பதும் இவருடைய பெருமையாகும்.
பக்தர்களின் நாகதோஷங்களை நீக்கி புத்திரபாக்கியம், திருமண பாக்கியம் தரும் பெருமாளாக ஆதி ஜெகநாத பெருமாள் இருப்பதால் பலனடைந்தவர்கள் நேர்த்திக்கடனாக நாகர் உருவங்களை கோயிலுக்கு வழங்குகிறார்கள். அதனை கோயிலை சுற்றி வைத்து உள்ளனர். அதனை கோயிலில் இப்போதும் காணலாம்.
தேவிபட்டிணம் ராமநாதபுரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் வங்காள விரிகுடா கடற்கரையில் அமைந்துள்ளது. ராமநாதபுரத்திலிருந்து காரைக்குடி செல்லும் பேருந்துகள் தேவிபட்டினத்தில் நிற்கும். அங்கிருந்து ஆட்டோ மூலம் கோயிலை அடையலாம். கடலைடைத்த பெருமாள் கோயிலில் விசாலமான கார் பார்க்கிங் வசதி உள்ளது. தினமும் 12 மணிக்கு அன்னதானம் கோயில் சார்பாக வழங்கப்படுகிறது.