

சென்னையில் கோயம்பேடு அருகே அமைந்துள்ளது நெற்குன்றம் கரி வரதராஜ பெருமாள் கோவில். முற்காலத்தில் இப்பகுதியில் நெல் விளைச்சல் மிக அதிகமாக இருந்து, அவை குன்றுபோல குவிக்கப் பட்டிருந்ததால் இந்த ஊர் 'நெற்குன்றம்' என்று பெயர் பெற்றது.
மூலவர் கரி வரதராஜ பெருமாள்
உற்சவர் சத்யநாராயணர்
தாயார் பெருந்தேவி தாயார்
விமானம் புண்ணியகோடி விமானம்
தல மரம் அத்தி:
பெருமாளுக்கு அத்திவரதர் என்ற பெயரும் உண்டு. அத்தி என்றால் யானை என்ற அர்த்தமும் உண்டு. யானையைக் காத்தவர் என்பதால் இவர் அத்திவரதர். வெள்ளிக்கிழமை மாலையில் இங்கு தாயார் சன்னதியில் தாமரைப் பூவினால் விசேஷமான பூஜை நடைபெறுகிறது.
அபூர்வ வடிவமைப்பு:
500 ஆண்டுகள் பழமையான இக்கோவிலின் கருவறையில் மூலவர் கரி வரதராஜ பெருமாள் சுமார் 5 அடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மகாலட்சுமியுடன் காட்சி தருகிறார்.
வலது கரத்தில் அபய ஹஸ்த முத்திரையுடன் இடது கரத்தில் கதாயுதம் தாங்கி காட்சி தரும் பெருமாளின் மேலிரு கரங்களில் சங்கும் சக்கரமும் உள்ளது. இவரது தொப்புளுக்குக் கீழே சிம்ம முகமும் (நரசிம்ம வடிவம்), இடது மார்பில் ஸ்ரீதேவி தாயார் வசிப்பதற்கான வடுவும் இருப்பது தனிச்சிறப்பாகும்.
நேத்ர தரிசனம்:
இக்கோவிலின் மிக முக்கிய அதிசயம், அர்ச்சகர் பெருமாளுக்கு தீபாராதனை (ஆரத்தி) காட்டும்பொழுது, அதுவரை மூடியிருப்பது போல் தோன்றும் பெருமாளின் கண்கள் சற்றே திறந்து நம்மைப் பார்ப்பதுபோல் பிரகாசிக்கும். இந்த நேத்ர தரிசனம் காண்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும்.
பக்தர்களால் 'கண் திறக்கும் பெருமாள்' என்று இவர் அன்போடு அழைக்கப்படுகிறார். இங்கு தீபாராதனை காட்டும் பொழுது பெருமாள் தனது இமைகளைத் திறந்து பக்தர்களை நேருக்கு நேர் பார்ப்பது போன்ற ஒரு அரிய ஆன்மீக உணர்வை பக்தர்கள் பெறுகின்றனர். இந்த 'நேத்ர' தரிசனத்தை காண்பதற்காகவே தினம் தினம் நிறைய பக்தர்கள் இங்கு வருகின்றனர்.
27 நட்சத்திரங்களின் பிரார்த்தனைத் தலம்:
27 நட்சத்திரங்களின் அதிபதியாக இத்தலப் பெருமாள் விளங்குவதால், பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்தன்று இங்கு வந்து 27 ரூபாய் நாணயங்களை இறைவனின் பாதத்தில் வைத்து 9 நாட்கள் அல்லது ஒன்பது வாரங்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
நேரில் வர இயலாத பக்தர்கள் தங்களுடைய குறைகளையும் பிரார்த்தனைகளையும் ஒரு கடிதத்தில் எழுதி, பெருமாளின் ஆலய முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கும் வழக்கமும் இங்கு பிரபலமாக உள்ளது.
கஜேந்திர மோட்ச தலம்:
இந்திரத்யும்னன் என்ற அரசன் யானையாகவும், கூஹு என்ற அரக்கன் முதலையாகவும் சாபம் பெற்றுப் போராடியபோது "ஆதிமூலமே" என யானை கூவி அழைக்க, மகாவிஷ்ணு தன் சக்கரத்தை ஏவி முதலையைக் கொன்று யானைக்கு முக்தி அளித்த 'கஜேந்திர மோட்ச' வரலாற்றுடன் இத்தலம் தொடர்புடையதாக கூறப்படுகிறது.
யானைக்கு (கரி) மோட்சம் அளித்ததால் இவருக்கு கரி வரதராஜ பெருமாள் என்று பெயர். கரி என்றால் யானை. முதலையின் வாயில் சிக்கிய கஜேந்திர யானையைக் காக்க மகாவிஷ்ணு நேரில் வந்து மோட்சம் அளித்த தலம் என்ற வரலாற்றுப் பெருமை இதற்கு உண்டு.
இக்கோவிலின் மற்றொரு சிறப்பம்சம் சந்தான கோபால கிருஷ்ணரின் விக்ரஹம். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் இக்கோவிலுக்கு வந்து சந்தான கோபாலகிருஷ்ணரை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
எப்படி செல்வது?
கோயம்பேடு பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லி செல்லும் வழியில், நெற்குன்றம் ரேஷன் கடை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இடதுபுறம் உள்ள ஏரிக்கரை தெரு வழியாக 50 அடி தூரம் நடந்தால் கோவிலைக் காணலாம்.