
படைப்புத் தொழிலை மேற்கொண்டிருந்த பிரம்ம தேவர் ஒரு சமயம் சிவபெருமானை காண கயிலாயத்திற்குச் சென்றார். அங்கே சிறுவனாக முருகப்பெருமான் விளையாடிக் கொண்டிருந்தார். என்னதான் பிரம்மாவாகவே இருந்தாலும் சிறுவனை கடந்து சென்றபோது அவனை கவனிக்காமல் அலட்சியப்படுத்தி செல்லலாமா? பிரம்மாவுக்கு தான் ஒரு படைப்பாளி என்ற கர்வம். எனவே, அலட்சியமாய் கடந்து சென்றார். அவரைத் தடுத்த முருகன், ‘நீங்கள் யார்?’ எனக் கேட்டார். அவரோ, ‘நான்தான் படைப்புத் தொழிலை மேற்கொண்டிருக்கும் பிரம்ம தேவன்’ என்றார்.
அவரது தோரணையும் அகந்தையுடன் பதிலளித்த முறையும் முருகனை யோசிக்க வைத்தது. பிரம்மனின் அகந்தையை அழிக்க எண்ணிய முருகன், ‘ஓஹோ நீர் எதை வைத்து படைப்புத் தொழிலை மேற்கொள்வீர்? எது உமக்கு அடிப்படை?’ என்று கேட்டார். அதற்கு பிரம்ம தேவர், ‘ஓம் எனும் பிரணவம்தான் அடிப்படை’ என்றார். ‘அப்படியெனில் அதன் பொருளை விளக்கிச் சொல்லுங்களேன்’ என்று முருகப்பெருமான் வினவ, அதன் பொருளை விளக்கிச் சொல்ல தெரியாமல் பிரம்ம தேவர் விழித்தார். அதையடுத்து, முருகப்பெருமான் அவரை சிறையில் வைத்தார்.
கேள்வி கேட்பவன் உயர்ந்தவன் என்பதால் முருகப்பெருமான் இங்கே மேலானவராக, உயர்ந்தவராக இருக்கிறார். மேலான பொறுப்புள்ளவன்தானே பிறரிடம் கேள்வி கேட்க முடியும். எனவே, பிரம்மாவின் முன் அதிகார தோரணையில் தனது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி கேள்வி கேட்கிறார் முருகப்பெருமான். இந்த அற்புதக் கோலத்தை தரிசிக்க நாம் ஆண்டவர்குப்பம் செல்ல வேண்டும். சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் நெடுஞ்சாலையில் தச்சூர் கூட்டுச்சாலையில் இருந்து பொன்னேரி செல்லும் வழியில் மூன்று கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது ஆண்டார்குப்பம் எனும் அழகிய தலம். வயல்வெளிகள் சூழ்ந்த அழகிய கிராமம். இங்கேதான் முருகப்பெருமான் அழகுக் கோலம் காட்டும் இந்தக் கோயில் உள்ளது.
ஒரு சமயம் தல யாத்திரை மேற்கொண்டிருந்த பக்தர் ஒருவர் இந்தத் தலத்தில் தங்கினார். மாலை நேரம் புனிதத் தீர்த்தத்தில் நீராடி பிறகு முருகனை வழிபட எண்ணிய அவர், அங்கே இருந்த ஆண்டிகளிடம், ‘நீராடும் துறை ஏதேனும் இங்கு உண்டோ?’ என வினவினாராம். அதற்கு அவர்கள், ‘இங்கே அப்படி தீர்த்தம் ஏதும் இல்லை’ என்றனராம். அப்போது ஆண்டி கோலத்தில் சிறுவன் ஒருவன் அங்கே எழுந்தருளி, அந்த பக்தரிடம் தாமே அந்தத் தெப்பத்தை காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றான். ஓரிடத்தில் தான் கையில் வைத்திருந்த வேலை நிலத்தைக் குத்திட, அங்கே தீர்த்தம் பொங்கிப் பிரவாகமெடுத்தது. பக்தருக்கோஆச்சரியம். அதில் நீராடி நிமிர்ந்து பார்த்தால் கையில் வேல் கொண்ட வேலவனாக முருகப்பெருமான் காட்சி அளித்தார். அதனால் மகிழ்ந்த பக்தர் தான் கண்ட அழகுக் கோலத்தை தினமும் காண ஆசைப்பட்டார்.
முருகப்பெருமான் இங்கே பாலசுப்பிரமணியராக எழுந்தருளினார். ஆண்டி போல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலம் என்பதால், ‘ஆண்டியர்குப்பம்’ எனப்பட்டது. பின்னாளில் அதுவே ஆண்டார்குப்பம் என மருவியது. ஆண்டார்குப்பம் தலத்தின் சிறப்பு அதிகார கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்தான். அழகான ராஜகோபுரம், சிறிய இந்த ஆலயத்தை வலம் வரும்போது பிரசன்ன விநாயகரை தரிசிக்கலாம். முன் மண்டபத்தில் காசி விஸ்வநாதர் விசாலாட்சி, நடராஜர் சன்னிதிகள் உள்ளன. கருவறையில் காட்சி தரும் பாலசுப்பிரமணியர் தனது கைகளில் வேல், வஜ்ரம், சக்தி ஆயுதம் முதலிய முருகனின் கோலத்துக்கே உரிய எந்தவிதமான ஆயுதங்களையும் தாங்கி இருக்காமல், இரு கைகளையும் இடுப்பிலே வைத்தபடி காட்சி தருகிறார்.
வெள்ளியில் செய்யப்பட்ட வேலாயுதம் மற்றும் சேவல் கொடியும் வைக்கப்பட்டுள்ளது. பெருமான் கவசம் சாத்தப்பட்டு அழகுற காட்சி தருகிறார். நெடிய வேலனாக மூலவர் நின்ற கோலத்தில் காட்சி தர, அவர் காலடிக்கு இருபுறமும் இரண்டு யானைகள் வாகனம் போல் அமைந்துள்ளன. இப்பெருமானை, ‘அதிகார முருகன்’ என்கிறார்கள். மூலவர் பாலசுப்பிரமணிய சுவாமி கிழக்கு நோக்கி வேலும் மயிலும் வள்ளி தெய்வானை இல்லாமல் தனித்து அருளும் அதிகார முருகனாக அருள்பாலிக்கிறார். இதைத் தவிர உத்ஸவர், வள்ளி தேவசேனா, சண்முகர், நடராஜர் ஆகியோருக்கு தனிச் சன்னிதிகள் உள்ளன.
வெளிப்பிராகாரத்தில் சம்வர்த்தன முனிவர் சன்னிதியும் சண்டிகேஸ்வரர் நவகிரக சன்னிதியும் அமைந்துள்ளன. கொடி மரத்துக்கு அருகில் பிரம்மா சங்கிலியால் கட்டி சிறை வைக்கப்பட்ட கருங்கல் இன்றும் அப்படியே உள்ளது. இந்த நிகழ்வுகள் கோயில் தூணில் செதுக்கப்பட்டுள்ளன. தல தீர்த்தம் வேலாயுத தீர்த்தம். தல விருட்சம் சரக்கொன்றை மரம். முருகப்பெருமான் பிரம்மனின் முன்பு தனது இரு கைகளையும் இடுப்பில் வைத்தபடி அதிகார தோரணையில் இருக்கிறார்.
இவரை தொடர்ச்சியாக மூன்று வெள்ளி அல்லது செவ்வாய்க்கிழமைகளில் நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் வணங்குபவர்களுக்கு அதிகாரம் உள்ள பதவி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. தங்கள் பணி சிறக்க, பொறுப்பான பதவி கிடைக்க புத்திசாலிகளான குழந்தைகள் பிறக்க என்று தங்கள் வேண்டுதல்களை முன்வைத்து இங்கே பக்தர்கள் வேண்டிக்கொள்கிறார்கள். பரணி நட்சத்திர நாளில் இந்த கோயிலுக்கு வந்து அன்றிரவு அபிஷேக ஆராதனைகளை தரிசித்து அங்கேயே தங்கி மறுநாள் கிருத்திகை வழிபாட்டினை செய்வதால் நம் சிக்கலான வாழ்க்கை பிரச்னைகள் அனைத்தும் உடனடியாக நீங்கும் என்பதும் ஐதீகம்.
இந்த முருகப்பெருமானின் மற்றும் ஒரு சிறப்பு அலங்கார கோலத்தில் மூலவர் முருகப்பெருமானை தரிசிக்கும்போது காலையில் குழந்தை போன்றும், உச்சி வேளையில் இளைஞராகவும், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிக்கிறார். இந்தத் தலத்தில் முருகப்பெருமானுக்கு மயிலுடன் சிம்ம வாகனமும் உள்ளது. அம்பிகைக்குரிய வாகனம் சிம்மத்துடன் இங்கே முருகன் அருள்பாலிக்கிறார். இந்த சிம்ம வாகனமும் மயிலை தாங்கியபடி உள்ளது மற்றொரு சிறப்பாகும். அதிகார பதவி கிடைக்க இந்த ஆண்டார்குப்பம் பாலசுப்பிரமணியரை தரிசித்து நினைத்ததைப் பெறலாம்.