கருவறை ஸ்ரீசக்கர ரகசியம்: கவலைகளை நொடியில் தீர்க்கும் காவிரி கரை நிமிஷாம்பா தேவி!

Nimishamba temple
Nimishamba temple
எஸ்.விஜயலட்சுமி

விஜி ரவி என்கிற பெயரில் இதுவரை 40 சிறுகதைகள், 55 ஒரு பக்க கதைகள் 17 புத்தக விமர்சனங்கள் மற்றும் ஏராளமான கட்டுரைகளை கல்கி, மங்கையர் மலர், அவள் விகடன் பெண்கள் மலர, குங்குமம் தோழி போன்ற பிரபல இதழ்களில் எழுதியுள்ளார். மங்கையர் மலர், வைகை இணைய இதழ் அனிச்சம், ஆனந்தசந்திரிகை மின்னிதழ் சங்கப் பலகை முகநூல் குழுமம் நடத்திய சிறுகதைப் போட்டிகளில் பங்கு பெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தோனி எஃப் எம் ல் வாரம் ஒரு முறை கதை சொல்கிறார். கல்கி இணைய இதழில் தன்னம்பிக்கை, குடும்பம் வாழ்வியல், ஆரோக்கியம் ஆன்மீகம், ஃபேஷன், உளவியல் சம்பந்தமான கட்டுரைகளை எழுதி வருகிறார்.

Updated on

ர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், வரலாற்றுப் புகழ்பெற்ற ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு அருகே, கஞ்சாம் கிராமத்தில் காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது ஸ்ரீ நிமிஷாம்பா தேவி ஆலயம். நம்பிக்கையோடு தன்னை நாடி வரும் பக்தர்களின் துயரங்களை ஒரே நிமிடத்தில் தீர்த்து, வேண்டுவதைக் கணப்பொழுதில் அருளுவதால் இந்தத் தல நாயகி 'நிமிஷாம்பா' என்று அழைக்கப் படுகிறாள்

அண்மையில் முன்னாள் முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்கள் இக்கோயிலுக்கு நேரில் வந்து, அன்னைக்கு பட்டுச்சேலை சமர்ப்பித்து, 'மடிலு தும்பி' (மடி நிறைத்தல்) என்ற பாரம்பரிய பரிகாரப் பூஜையைச் செய்து வழிபட்ட செய்தி, இந்த ஆலயத்தின் ஆன்மிக மகிமையை நாடெங்கும் பேசவைத்துள்ளது.

மூலக்கோயிலின் வரலாற்றுப் பின்னணி:

இந்த ஆலயம் சுமார் 300 முதல் 400 ஆண்டுகள் பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. மைசூரை ஆண்ட உடையார் வம்சத்தின் புகழ்பெற்ற அரசரான மும்முடி கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கஞ்சாம் பகுதியில் காவிரி ஆறு மிகத் தூய்மையாகவும், அமைதியாகவும் ஓடும் அழகிய சூழலில், சோழர் மற்றும் விஜயநகரக் கட்டிடக்கலை பாணியில் இந்த ஆலயம் அமையப் பெற்றுள்ளது. மைசூர் அரச குடும்பத்தினரின் குலதெய்வ வழிபாட்டிலும், திப்பு சுல்தானின் வரலாற்றிலும் இக்கோயிலுக்கு மிக முக்கிய இடமுண்டு.

புராண வரலாறு:

பண்டைய காலத்தில் உலக அமைதிக்காக சுமனஸ்கா என்ற மன்னன், முக்த ரிஷியின் தலைமையில் ஒரு மகா யாகத்தை நடத்தினார். ஜனுமண்டலன் என்ற அசுரன், பிரம்மனிடம் பெற்ற வரத்தால் பெரும் வலிமை கொண்டிருந்தான் அவன் அந்த யாகத்தை அழித்து உலகிற்குத் துன்பம் விளைவிக்க எண்ணினான். முக்த ரிஷியால் அவனை எதிர்கொள்ள இயலவில்லை. எனவே யாகத்தைக் காக்க வேண்டி, அன்னை பார்வதியை மனமுருகி வேண்டினார்.

இதையும் படியுங்கள்:
பிரணவ மூர்த்தி 9 - திரிபுராசுரன்... வரமும் வதமும்! இதில் விநாயகரின் பங்கு என்ன?
Nimishamba temple

ரிஷியின் வேண்டுதலுக்கு இணங்கி, யாக குண்டத்திலிருந்து அன்னை அதிரடியாகத் தோன்றி, கணப்பொழுதில் (ஒரு நிமிடத்தில்) அசுரர்களை வதம் செய்து யாகத்தைக் காத்தாள். அன்னையின் இந்த அதிவேகக் கருணையைக் கண்டு வியந்த முக்த ரிஷி, “ஓ ஜெகன்மாதா நிமிஷாம்பா” என்று போற்றித் துதித்தார். அந்த அன்னை வீற்றிருக்கும் திருத்தலமே இந்த ஆலயமாகும்.

சக்தி வாய்ந்த ஸ்ரீசக்கர வழிபாடு:

இங்கு கருவறையில் வீற்றிருக்கும் அன்னையின் சிலைக்கு முன்பாக, கல்லில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட புனிதமான 'ஸ்ரீசக்கரம்' பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அன்னையின் சிலையும், ஸ்ரீசக்கரமும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதால், இங்கிருந்து வெளிப்படும் ஆன்மிக அதிர்வுகள் மிகச் சக்தி வாய்ந்தவை. இக்கோயிலுக்கு வந்து நெய்விளக்கு ஏற்றி, ஸ்ரீசக்கர அர்ச்சனை செய்து வழிபட்டால், தீராத நோய்களும், மனக் கவலைகளும் உடனே நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகும்.

பிரார்த்தனைகளும் பரிகார முறைகளும்:

இந்த ஆலயத்தில் திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெறவும், தொழில் நஷ்டங்கள் தீரவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபடுகிறார்கள். துர்கா ஸ்டாலின் அவர்கள் செய்த 'மடிலு தும்பி உடி' பூஜை இங்கு மிக விசேஷமானது. பெண்கள் தங்கள் குடும்ப நலம் வேண்டியும், மங்கல வாழ்வு சிறக்கவும் அன்னைக்குச் சேலை, வளையல்கள், தாம்பூலம் மற்றும் பழங்களை மடியில் வைத்து அர்ப்பணிக்கும் பூஜையே இதுவாகும்.

இதையும் படியுங்கள்:
கார்த்திகை மாதம் கண் திறக்கும் யோக நரசிம்மப் பெருமாள் ரகசியம்!
Nimishamba temple

மேலும், பக்தர்கள் தங்கள் கோரிக்கைகளை எலுமிச்சம் பழத்தில் அர்ச்சனை செய்து, அதை வீட்டிற்கு எடுத்துச் சென்று வழிபடும் வழக்கமும் இங்குள்ளது. நினைத்த காரியம் உடனடியாக நிறைவேற வேண்டும் என்று நினைப்பவர்கள்  'சென்று தரிசிக்க வேண்டிய ஆலயமாகும்.

logo
Kalki Online
kalkionline.com