

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி வட்டத்தில் ஊட்டத்தூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமையான வரலாற்று சிறப்புமிக்க சிவன் கோவிலாகும். சுமார் 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட இக்கோவில் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற தேவார வைப்புத் தலமாகவும், ஊட்டத்தூர் கோவில் சிறுநீரக நோய்களைப் போக்கும் பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.
மூலவர் சித்தரத்தினேஸ்வரர் - அம்பிகை அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம் வில்வம்.
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், அகில தீர்த்தம், தேவ தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம் மற்றும் நந்தியாறு.
ஈசன் இங்கு சுயம்புலிங்கமாக, லிங்கத் திருமேனியில் மண்வெட்டி வடுவுடன் சற்று சாய்ந்த நிலையில் காணப்படுகிறார். அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்னும் திருநாமத்துடன் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். கி.பி. 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முற்காலச் சோழர்கள் காலத்திய தேவார வைப்புத்தலம் இது.
பிற்காலத்தில் சோழப் பேரரசர் ராஜராஜ சோழனால் சீரமைக்கப்பட்டது. இக்கோவிலில் சோழ மன்னர்களின் 50-க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்குள்ள 8 அடி உயர பஞ்சநதன கல்லால் ஆன நடராஜர் மிகவும் சிறப்பு மிக்கவர்.
பிரம்ம தீர்த்தம்:
பிரம்மதேவர் வழிபட்டு உருவாக்கிய பிரம்ம தீர்த்தம், கொடிமரத்திற்கும் கருவறைக்கும் இடையில் அமைந்துள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.
பஞ்சநதன நடராஜர்:
இங்குள்ள பஞ்சநதன நடராஜர் மற்ற கோவில் களைப்போல ஐம்பொன்னால் இல்லாமல், இங்கு சுமார் 8அடி உயரமுள்ள அபூர்வ பஞ்சநதனக் கல்லால் ஆனவர். இந்தச் சிலையைத் தட்டினால் 'ஓம்' என்ற பிரணவ ஒலி எழும்புவதாகக் கூறப்படுகிறது.
பஞ்சநதனக் கல் என்பது பார்ப்பதற்கு வழக்கமான கருங்கல்லைப் போன்ற தோற்றம் கொண்டது தான் என்றாலும் சில சமயங்களில் கருநீலமாகவும், கரும்பச்சை வண்ணத்திலும் கூட காட்சியளிக்கும். இக்கல் பல கோடி சூரியன்களின் சக்தியை உள்ளடக்கியது என்று சொல்லப்படுகிறது. இந்த வகைப்பாறைகள் அரிதினும் அரிதானவை. 10 லட்சம் கோடி பாறைகள் உருவாகும் பொழுது, அவற்றுள் ஒன்றே ஒன்றுதான் இவ்வகையான பாறையாக மாறும் வாய்ப்பு கொண்டது என்று சித்தர்கள் விளக்கியுள்ளனர்.
மனிதர்களால் இப்பாறைகளை செதுக்கி சிலைகள் செய்ய முடியாது என்றும், சித்தர்களின் ஆன்மீக சக்தியால் மட்டுமே இறைவனின் உருவங்களை இவற்றில் உருவாக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது. இப்படி பஞ்சநதனக் கல்லில் உருவான நடராஜர் சிலை ஊட்டத்தூர் நடராஜர் சிலை மட்டுமே. ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் அமைந்துள்ள திருக்கோயில்கள் இது. அருகிலேயே அன்னை சிவகாமசுந்தரி தன் முகத்தை சிறிது சாய்த்து நடராஜரைப் பார்ப்பது போன்ற தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.
சிறுநீரக நோய் பரிகாரம்:
இங்குள்ள நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி வழிபட்டு, அபிஷேக தீர்த்தமான பிரம்ம தீர்த்தம் மற்றும் வெட்டிவேரையும் பிரசாதமாகப் பெற்றுப் பயன்படுத்தினால் சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் வயிற்று உபாதைகள் நீங்கும் என்பது பக்தர்களின் வலுவான நம்பிக்கையாகும்.
சூரிய பூஜை:
ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12,13,14 ஆகிய தேதிகளிலும், வைகாசி விசாகத் திருவிழாவின் பொழுதும் சூரியனின் ஒளிக்கதிர்கள் நேரடியாகக் கருவறையில் உள்ள சிவலிங்கத்தின் மீது படும் அதிசயம் நிகழ்கிறது.
இக்கோவிலின் மண்டபத்தில் கொடிமரம் அருகில் மேல் விதானத்தில் 27 நட்சத்திரங்கள், 15 திதிகள், 12 ராசிகள் மற்றும் 9 நவகிரகங்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.
கிழக்கு நோக்கிய நந்தி:
கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. ஒன்று கோவிலின் அருகே ஓடும் நந்தியாற்றின் மகிமையை உணர்த்தும் வகையில் இங்குள்ள நந்தியம்பெருமான் சுவாமியை நோக்காமல் கிழக்கு திசையை நோக்கி அமர்ந்துள்ளார். மற்றொரு நந்தி சிவனைப் பார்த்து மேற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பது சிறப்பு.
தரிசன நேரம்:
காலை 7:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
எப்படி செல்வது?
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாடலூரில் இருந்து புள்ளம்பாடி செல்லும் சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது. திருச்சியில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.