

உத்தரப்பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சாகும்பரி (சாகம்பரி) தேவி கோவில் வட இந்தியாவில் உள்ள மிக முக்கியமான மற்றும் பழமையான ஆன்மீக யாத்திரை மையங்களில் ஒன்றாகும். துர்காதேவி அவதாரமான சாகம்பரி தேவிக்காக அமைந்துள்ள இந்த சக்தி பீடம் சஹாரன்பூர் நகரத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில், பெஹாட் தாலுகாவில் உள்ள ஜாஸ்மூர் கிராமத்திற்கு அருகில் இயற்கை எழில் கொஞ்சும் சிவாலிக் மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.
அவதாரத்தின் பின்னணி:
புராணங்களின்படி துர்கமாசுரன் என்ற அரக்கன் வேதங்களைத் திருடிச் சென்று தேவர்களைத் தோற்கடித்து சிறை பிடித்ததால் பூமியில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. உயிரினங்களைக் காப்பதற்காக ஆதிசக்தி சாகம்பரி தேவியாக தோன்றினார்.
அரக்கனை வதம் செய்த பிறகு தேவி மனிதர்களின் பசியையும் பஞ்சத்தையும் போக்குவதற்காக 100 ஆண்டுகள் தவம் செய்ததாகக் கூறப்படுகிறது. அம்மன் தனது உடலில் இருந்து காய்கறிகளையும், தாவரங்களையும் (சாகம்) உற்பத்தி செய்து உலகைக் காத்ததால் இவளுக்கு சாகம்பரி தேவி (தாவரங்களின் தேவி) என்று பெயர் வந்தது.
சக்திபீடம்:
51 சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகழும் இத்தலம் சதி தேவியின் தலைப்பகுதி (சிரசு) விழுந்த மகாசக்தி பீடமாக பக்தர்களால் போற்றப்படுகிறது.
இயற்கை அமைப்பும் புவியியல் பாதையும்:
மற்ற சமவெளி கோவில்களைப் போலல்லாமல் இது ஷிவாலிக் மலைகளுக்கு இடையே ஒரு நதிக்கரையின் படுக்கையில் அமைந்துள்ளது. பக்தர்கள் ஒரு பருவகால வறண்ட ஆற்றுப்படுகையைக் கடந்துதான் கோவிலை அடைய வேண்டும். மழைக்காலங்களில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பாதுகாப்பு காரணங்களுக்காகக் கோவில் தற்காலிகமாக மூடப்படுவது வழக்கம்.
கோவிலின் சிறப்புகள்:
ஒரே கருவறையில் 5 தெய்வங்கள்:
கோவிலின் கருவறையில் சாகம்பரி தேவியின் சுயம்பு விக்ரகம் மையத்தில் வீற்றிருக்க, அவருக்கு வலது புறம் பீமாதேவி, பிராமரி தேவியும், இடப்புறம் சதாக்ஷி தேவியும் (நூறு கண்கள் கொண்ட வடிவம்), அருகிலேயே விநாயகரும் அருள் புரிகின்றனர்.
வரலாற்று ரீதியாக அத்வைத ஞானியான ஸ்ரீ ஆதிசங்கரர் இத்தலத்திற்கு வருகை தந்து இங்கு தவம் செய்துள்ளதாகவும், இந்த மலை அடிவாரப்பகுதிகளில் மறைந்திருந்த இந்த ஐந்து தெய்வீக விக்கிரகங்களையும் அவரே கண்டெடுத்து தற்போதைய கருவறையில் முறைப்படி பிரதிஷ்டை செய்தார் என்றும் வரலாற்றுச் செய்திகள் கூறுகின்றன.
பூரா தேவ் கோவில் (Bhura Dev Temple):
இந்த சக்தி பீடத்தின் காவல் தெய்வமாக விளங்குபவர் பூரா தேவ். சாகம்பரி தேவி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் அதற்கு ஒரு கிலோ மீட்டர் கிழக்கே அமைந்துள்ள பூரா தேவா (பைரவர்) கோவிலுக்கு முதலில் சென்று வழிபடுவது மரபாகப் பின்பற்றப்படுகிறது. அப்பொழுதுதான் இந்த ஆன்மீக யாத்திரை முழுமை அடையும் என்றும் நம்பப்படுகிறது.
முக்கிய திருவிழாக்கள்:
அஸ்வின் மற்றும் சைத்ரா மாத நவராத்திரி திருவிழாக்கள் இங்கு மிக விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. இந்த சமயங்களில் நடைபெறும் 'சாகம்பரி மேளா' (திருவிழா சந்தை) உலகப் புகழ் பெற்றது.
குறிப்பாக நவராத்திரி, தீபாவளி மற்றும் சாகம்பரி பூர்ணிமா ஆகிய விழாக்கள் இங்கு மிக விமர்சையாகவும், கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.
இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் வந்து அன்னையின் அருளைப் பெற்று செல்கின்றனர்.
கோவில் பொதுவாக காலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை திறந்திருக்கும்.
செல்ல சிறந்த நேரம்:
அக்டோபர் முதல் மார்ச் வரை வானிலை மிகவும் இதமாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கும். ஜூலை முதல் செப்டம்பர் வரை மழைக் காலங்களில் மலைப் பாதைகளில் நீர்வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் அதை தவிர்த்து விட்டு மீதி காலங்களில் செல்வது நல்லது.
எப்படி செல்வது?
அருகில் உள்ள ரயில் நிலையம் சஹாரன்பூர் (Saharanpur) ரயில் நிலையமாகும். சஹாரன்பூரிலிருந்து பெஹாட் வழியாக இக்கோவிலை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம். பேருந்து மற்றும் ஆட்டோக்கள் வசதி உள்ளது.